குத்து சண்டை விளையாட்டின்போது வீரர்களின் எதிர்பாராத தாக்குதலின் காரணமாக அல்லது விபத்தின் காரணமாகவோ எம்மில் சிலருக்கு அவர்களின் தோள்பட்டை மூட்டு பாரிய அளவில் பாதிக்கப்படுகிறது.

இதற்கு தற்போது நவீன சத்திரசிகிச்சையின் மூலம் தீர்வு கிடைத்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

பொதுவாக விளையாட்டு மைதானங்களில் அல்லது சாலை விபத்தின் போதும் எதிர்பாராத விதத்தில் தோள்பட்டை மூட்டு பாதிக்கப்படும்.

இதன்போது சிலருக்கு தோள்பட்டையில் கிண்ணம் போன்ற அமைப்பில் உள்ள எலும்பிலும் பாதிப்பு ஏற்படும். இதனை மருத்துவ மொழியில் போனி பாங்காட் ( Bony Bankart) பாதிப்பு என குறிப்பிடுவார்கள்.

சிலருக்கு அரிதாக ஏற்படும் இத்தகைய பாதிப்பை மூட்டு உள்நோக்கி கருவி மூலம் பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்கலாம்.

இதன்போது தோள்பட்டை மூட்டு விலகி இருப்பதுடன் அங்கு கிண்ணம் போலிருக்கும் அமைப்பிலுள்ள ஜவ்வுடன் கூடிய எலும்பிலும் விரிசல் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.

இதனை நவீன சத்திரசிகிச்சை மூலம் சேதமடைந்த எலும்பு பகுதிகளையும், சவ்வு பகுதிகளையும் சீராக்கலாம். இதன்பிறகு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் இயன்முறை பயிற்சியையும், உடற்பயிற்சியையும், உணவு கட்டுப்பாட்டையும் சீராக கடைப்பிடித்து வந்தால் ஆறு மாதங்களில் மீண்டும் இயல்பான நிலையில் திரும்பலாம்.

அதன் பிறகு எளிய பரிசோதனை மூலம் விளையாட்டு வீரர்கள், தங்களின் வாழ்வாதாரமான விளையாட்டுகளை பயிற்சியுடன் தொடங்கி சிறப்பாக விளையாடலாம்.

டொக்டர் ராஜ் கண்ணா

தொகுப்பு அனுஷா.