(நெவில் அன்தனி)

கொழும்பு சுகததாச அரங்கில் கடந்த 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு அன்றைய தினம் பிற்பகலுடன் பிற்போடப்பட்ட கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டிகளை எதிர்வரும் ஜூன் மாதம் 7, 8, 9, 10ஆம் திகதிகளில் நடத்த இலங்கை மெய்வல்லுநர் நிறுவனம் (ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸ்) தீர்மானித்துள்ளது.

மே மாதம் 9, 10, 11, 12 ஆம் திகதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டிகள் திட்டமிட்டவாறு கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் 9 ஆம் திகதி ஆரம்பமானது.

எனினும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அரச ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலின் எதிரொலியாக ஆங்காங்கே வன்முறைகள் வெடித்தன.

இதன் காரணமாக பிற்பகல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து 19 போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட நிலையில் கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டிகள் பிற்போடப்பட்டன.

அன்றைய தினம் நடைபெறவிருந்த 26 நிகழ்ச்சிகளில் 19 நிகழ்ச்சிகள் மாத்திரம் நடத்தி முடிக்கப்பட்டது.

16 வயதுக்குட்பட்ட, 18 வயதுக்குட்பட்ட, 20 வயதுக்குட்பட்ட, 23 வயதுக்குட்பட்ட ஆகிய நான்கு வயது பிரிவுகளில் மொத்தம் 124 இறுதிப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

இதற்கு அமைய எஞ்சிய 105 போட்டிகள் (தகுதிகாண் சுற்று உட்பட) எதிர்வரும் ஜீன் மாதம் 7, 8, 9, 10ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளன.

மே மாதம் நடைபெற்ற 19 நிகழ்ச்சிகளில் ஒரு புதிய கனிஷ்ட தேசிய சாதனை நிலைநாட்டப்பட்டிருந்தது.

பெண்களுக்கான 18 வயதுக்குட்பட்ட கோலூன்றிப் பாய்தலில் 3.15 மீற்றர் உயரம் தாவியதன் மூலம் சாவக்கச்சேரி இந்து கல்லூரி மாணவி பரந்தாமன் அபிலாஷினி புதிய கனிஷ்ட தேசிய சாதனை நிலைநாட்டியிருந்தார்.

அபிலாஷினியின் சக பாடாசலை மாணவியான மதிவாணன் ஷாலினி (2.80 மீற்றர்) 2ஆம் இடத்தையும் அருணோதயா கல்லூரியைச் சேர்ந்த சிவபாதம் சுவர்ணா (2.70 மீற்றர்) 3ஆம் இடத்தையும் பெற்றனர்.

இதேவேளை, 23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் புசல்லாவை தேசிய பாடசாலையைச் சேர்ந்த ஜே. குகேந்திர பிரசான் முதலாம் இடத்தைப் பெற்றார். அவர் இந்தப் போட்டித் தூரத்தை 33 நிமிடங்கள், 27.61 செக்கன்களில் ஓடி முடித்தார்.