நடிகர் விஷால் நடிப்பில் தயாராகி இருக்கும் 'லத்தி' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குவர் ஏ. வினோத்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'லத்தி'. இதில் 'புரட்சி தளபதி' நடிகர் விஷால் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்திருக்கிறார்.

பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை ராணா புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள்.

எக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவிருக்கிறது.

படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கார்த்தி வெளியிட்டிருந்தார்.

இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது இப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தவகையில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதியன்று 'லத்தி' திரைப்படம் பட மாளிகைகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே இதே திகதியில் விக்ரம் நடிப்பில் தயாராகியிருக்கும் 'கோப்ரா' வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விஷால் சுழற்றும் 'லத்தி' யும் இதே திகதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பதை விஷால் மற்றும் விக்ரம் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.