( செய்தி மற்றும் படம் - நெவில் அன்தனி)

இலங்கை கால்பந்தாட்ட அணிக்கு பயிற்சி அளித்து அதனை முன்னேறச் செய்வது ஒரு பெரிய சவால் என்றும் அந்த சவாலை சமாளித்து கால்பந்தாட்டத்தை மேம்படுத்த முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் இலங்கை தேசிய அணியின் புதிய பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ள  அண்ட்றூ   மொறிசன் தெரிவித்தார்.

இலங்கை அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருக்கின்ற போதிலும் அவர்களில் சிலருக்கு அடிப்படை நுட்பங்களை கற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது என்றும் இலங்கை கால்பந்தாட்ட இல்ல கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது  அண்ட்றூ   மொறிசன் தெரிவித்தார்.

இலங்கையை வந்தடைந்த பின்னர் வீடியோக்களை கொண்டு வீரர்களின் ஆற்றல்களையும் நுட்பங்களையும் ஆய்வுசெய்ததன் மூலம் அவர்கள் ஒவ்வொருவரினதும் நிலை குறித்து அறிந்துகொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

உஸ்பெகிஸ்தானில் நடைபெறவுள்ள ஏ.எவ்.சி. ஆசிய தகுதிகாண் சுற்றுக்கு இலங்கை அணியை தயார் செய்வது குறித்து பேசிய அவர்,

'ஆசிய தகுதிகாண் சுற்று இலங்கை அணிக்கு சவால்மிக்கதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. மாலைதீவுகளைத் தவிர மற்றைய எதிரணி வீரர்களின் பலம், உடல்வாகு, உயரம், வியூகம் ஆகியவற்றுடன் ஓப்பிடுகையில் இலங்கை வீரர்கள் பின்னிலையில் இருக்கின்றனர். ஆனால், இலங்கை அணியை குறைத்து மதிப்பிடக்கூடாது. அத்துடன் இலங்கை அணி களம் இறங்குவதற்கு முன்னர் அவ்வணி குறித்து எதிர்மாறையாக சிந்திக்கவோ கருத்து வெளியிடவோ கூடாது. எந்த சவாலையும் சமாளிக்கும் வகையில் வியூகங்களை அமைத்து விளையாடுவோம். பெரும்பாலும் இலங்கை அணி இந்த சுற்றுப் போட்டியில் தடுத்தாடும் உத்தியுடனேயே விளையாடும்' என்றார் மொறிசன்.

கால்பந்தாட்ட அணிகளுக்கான உலக தரவரிசையில் உஸ்பெகிஸ்தான் 83ஆவது இடத்திலும் தாய்லாந்து 111ஆவது இடத்திலும் மாலைதீவுகள் 156ஆவது இடத்திலும் இலங்கை 205ஆவது இடத்திலும் இருக்கின்றன.

இலங்கை வீரர்களின் உடற்தகுதி குறித்து பேசிய அவர், 'இல்ஙகை வீரர்களில் பெரும்பாலானவர்கள் 90 நிமிடங்கள் தாக்குப்பிடிக்க கூடியவர்கள் அல்லர். ஆனால், உரிய பயிற்சிகள் வழங்குவதன் மூலம் அவர்களது உடற்தகதியைப் பேணமுடியும். மேலும் இலங்கை வீரர்களிடம் விடாமுயற்சியும் அர்ப்பணிப்புத்தன்மையும் இருப்பதால் அவர்கள் ஆசிய காலப்நதாட்டத்தில் எதையாவது சாதிப்பார்கள் என நம்புகின்றேன். அதற்காக கடினமாக உழைக்க வேண்டும்' என அண்ட்றூ மொறிசன் குறிப்பிட்டார்.

இதேவேளை, மாலைதீவுகளுடனான போட்டியில் இலங்கை அணியினால் சாதிக்கக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக அணியின் உடற்தகுதி பயிற்சி ஆலோசகர் மார்க்கஸ் பெரெய்ரா தெரிவித்தார்.

கொழும்பில் 1995இல் நடைபெற்ற சார்க் தங்கக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் இந்தியவை 'கோல்டன் கோல்' மூலம் வெற்றிகொண்டு சம்பியனான இலங்கை அணியின் உடற்தகுதி பயிற்றுநராக மார்க்ஸ் பெரெய்ரா செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் உதவிப் பயிற்றுநராக மற்றொரு ஸ்கொட்லாந்து நாட்டவரான கீத் ஸ்டீவன்ஸ் செயற்படவுள்ளார்.