மன்னார் மாவட்டத்தின் தீவு பகுதியாக விளங்கும் மன்னார் பிரதேச செயலகப் பிரிவுற்குட்பட்ட தாழ்வுபாடு தொடக்கம் நடுக்குடா வரைக்குமான கடற்கரையோரத்தில் சுற்றுச் சூழல் மிகவும் மாசடைந்து காணப்படுவதால் இதை கவனத்துக்கு எடுத்துக் கொண்ட தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கம் இவற்றை துப்பரவு செய்வதில் கவனம் செலுத்தியுள்ளது.

இதற்கமைய ஞாயிற்றுக்கிழமை (22.05.2022) தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வீ.எஸ்.சிவகரன் தலைமையில் தாழ்வுபாடு பங்கு தந்தையும் மனித உரிமை தொடர்பாக செயல்படும் அருட்பணி எஸ்.ஜெயபாலன் குரூஸ் அடிகளார் அவர்களும் இணைந்தவராக பலர் இச் சிரமதான பணியில் ஈடுபட்டனர்.

சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரமுள்ள பகுதியில் சிரமாதான பணி இடம்பெற்றது.

இதன்போது கடற்கரைப் பகுதியில் இயற்கைக்கும் சுற்று சூழலுக்கும் கேடு விளைவிக்கும் உக்காத ஆயிரக்கணக்கான பிளாஸ்ரிக் போத்தல்கள் அகற்றப்பட்டுள்ளன.

எதிர்வரும் வாரங்களிலும் இவ்வாறான பணி தொடர்ந்து நடைபெறும் என தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வீ.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.