(எம்.மனோசித்ரா)

21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டியது அத்தியாவசியமானதாகும். எவ்வாறிருப்பினும் இரட்டை குடியுரிமை விவகாரத்தில் ராஜபக்ஷ குடும்பத்தினர் பொதுஜன பெரமுனவிருக்கு அழுத்தத்தை பிரயோகித்து இவ்விடயத்தில் ஏதேனுமொரு குழப்பத்தை ஏற்படுத்துவார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

புதிதாக நியமனம் பெற்றுள்ள நீதித்துறை அமைச்சர் 21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். இது வரவேற்கக் கூடிய விடயமாகும். இதில் இரட்டை பிராஜவுரிமையுடையோர் தொடர்பான உள்ளடக்கமும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பாராளுமன்றத்தில் பொதுஜன பெரமுனவிற்கே பெரும்பான்மை காணப்படுகிறது. பொதுஜன பெரமுனவை இப்போதும் ராஜபக்ஷ குடும்பமே நிர்வகித்துக் கொண்டிருக்கிறது. எனவே இரட்டை பிரஜாவுரிமை விவகாரத்தில் ராஜபக்ஷ குடும்பத்தினரால் பொதுஜன பெரமுனவினருக்கு அமையான முறையில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடும்.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் 21 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதில் ராஜபக்ஷ குடும்பம் ஏதேனுமொரு குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கும். நாடு தற்போதுள்ள நிலைமையில் அரசியலை ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு , அனைவரும் ஒன்றிணைந்து செய்பட வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும்.

சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தில் இணையுமாறு எனக்கும் தொடர்ச்சியாக அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. எவ்வாறிருப்பினும் ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானத்திற்கு அமையவே நான் செயற்படுவேன். எனினும் கட்சி மற்றும் கட்சி அரசியலை விட நாடு முக்கிய என்ற கொள்கையின் அடிப்படையில் நாட்டுக்காக எடுக்கப்படும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவேன் என்றார்.