ரொபட் அன்டனி
இலங்கையர் ஒருவர் சுமார் 50 லட்சம் ரூபா பெறுமதியான கார் ஒன்றை ஜப்பான் நிறுவனம் ஒன்றிடம் இருந்து கொள்வனவு செய்ய வேண்டுமானால் முதலில் அந்த ஜப்பான் நிறுவனத்தின் இலங்கையில் அதிகாரமளிக்கப்பட்ட நிறுவனத்திடம் அதற்கான பணத்தை செலுத்த வேண்டும்.

அந்த நிதி இலங்கை வங்கி கட்டமைப்பின் ஊடாக டொலர் பெறுமதியாக பரிவர்த்தனை செய்யப்பட்டு ஜப்பானுக்கு அனுப்பப்பட வேண்டும்.
அவ்வாறு இலங்கையின் 50 இலட்சம் ரூபா பெறுமதியான நிதி டொலர் பெறுமதியாக பரிவர்த்தனை செய்யப்பட்டு ஜப்பானுக்கு அனுப்பப்படும் பட்சத்தில் மட்டுமே அந்த நபரினால் இலங்கையில் இலங்கை குறித்த காரை கொள்வனவு செய்து பயன்படுத்த முடியும்.
அப்படியானால் இதில் புரிந்து கொள்ளவேண்டியது என்னவெனில் ஒருவர் 50 இலட்சம் ரூபா பெறுமதியான ஜப்பான் கார் ஒன்றை கொள்வனவு செய்ய வேண்டுமாயின் அதற்கான டொலர்கள் அவசியம் என்பதாகும்.
அந்த டொலர்கள் இருப்பின் மட்டுமே அந்த காரை கொள்வனவு செய்ய முடியும்.
அப்படியானால் வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்கள் எந்தப் பொருளைக் கொள்வனவு செய்ய வேண்டுமானாலும் அதற்கு மிக அவசியமானது டொலர்களாகும்.
அது உணவு பொருளாக இருக்கலாம், வாகனமாக இருக்கலாம், எந்தவொரு பொருட்களை இறக்குமதி செய்வதாக இருப்பினும் அதற்கு டொலர்கள் தேவையாகும்.
தற்போது கூட எமது நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு, விலை உயர்வு மற்றும் எரிவாயு, அத்தியாவசிய பொருள் தட்டுப்பாடு, விலை உயர்வு என்பனவற்றுக்கு காரணமாக டொலர் பற்றாக்குறையே காணப்படுகின்றது.
அந்தவகையில் பார்க்கும்போது எமக்கு எங்கிருந்து டொலர்கள் வருகின்றன என்பது மிக முக்கியமாகும்.
இலங்கைக்கு ஏற்றுமதி மூலம் வருடாந்தம் 12 பில்லியன் டொலர்கள் கிடைக்கின்றன. அதேபோன்று சுற்றுலாத்துறை ஊடாக வருடாந்தம் 4,5 பில்லியன் டொலர்கள் கிடைக்கின்றன.
இந்த வைரஸ் தொற்று காரணமாக அந்த சுற்றுலாத்துறை ஊடான டொலர் வருமானம் ஸ்தம்பிதமடைந்திருக்கின்றது.
அதேபோன்று வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்கள் அனுப்புகின்ற அந்நிய செலாவணி ஊடாகவும் இலங்கைக்கு வருடாந்தம் 6 பில்லியன் டொலர்கள் வருகின்றன. எனினும் தற்போது அதுவும் குறைவடைந்திருக்கின்றது.
மேலும் வெளிநாட்டு நேரடி முதலீடுகள், இலங்கை பெற்றுக் கொள்கின்ற கடன்கள், நன்கொடைகள், போன்றவற்றினூடாகவும் இலங்கைக்கு டொலர்கள் வருகின்றன.
ஆனால் எமது நாட்டின் இறக்குமதி செலவானது வருடாந்தம் 22 பில்லியன் டொலர்களாக பதிவாகின்றன. (2021 புள்ளிவிபரம்)
எப்படியிருப்பினும் ஏற்றுமதி வருமானம் மற்றும் ஏனைய டொலர் வருமானங்களில் அதிகளவு பெண்களே முக்கிய வகிபாகத்தை வகிக்கின்றனர்.
அதாவது பெண்களே இந்த நாட்டுக்கு டொலர்களை பெற்றுக் கொள்வதில் அதிக அளவு பங்களிப்பு செய்கின்றனர்.
இலங்கை மக்களின் உணவுத்தேவையை நிறைவேற்றுவதற்கு அவர்களின் பசியைப் போக்குவதற்கு அவர்களின் ஆடம்பர வாழ்க்கையை மேற்கொள்வதற்கு பெண்களே பங்களிப்பு செய்கின்றனர்.
பெண்கள் அதிகமாக இங்கு கொண்டு வரும் டொலர்கள் ஊடாகவே நாம் தற்போது இந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
பெண்கள் எவ்வாறு இந்த டொலர்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு பங்களிப்பு செய்கின்றனர் என்பது குறித்து ஆழமாக பார்க்க வேண்டியது அவசியமாகும். பிரதானமாக இலங்கைக்கு பெண்கள் ஆடைக் கைத்தொழில்.
வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கை பெண்கள் மற்றும் தேயிலை ரப்பர் பெருந்தோட்டக் கைத்தொழில் ஆகிய இந்த மூன்று வழிகள் ஊடாகவே இலங்கைக்கு பெண்கள் அதிகளவில் டொலர்களை கொண்டு வருகின்றனர்.
வெளிநாடுகளில் பணிபுரியும் பெண்கள்
வெளிநாடுகளில் பணிபுரிகின்ற பெண்கள் இலங்கை பெண்கள் அனுப்புகின்ற அந்நிய செலாவணி ஊடாக எமது நாட்டுக்கு வருடாந்தம் சுமார் 6 பில்லியன் டொலர்கள் கிடைக்கின்றன.

இது ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் இடைவெளியை போக்குவதற்கு பங்களிப்பு செய்கின்றது. வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்கள் அங்கு பணிபுரிந்து அங்கு கஷ்டப்பட்டு வீடுகளில் பணிபுரிந்து தொழில் செய்து அனுப்புகின்ற டொலர்கள் ஊடாகவே நாம் இந்த வசதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
அதாவது வெளிநாட்டு உணவுகள், வாகனங்கள், ஆடம்பரப் பொருட்களை இறக்குமதி செய்தல் என அனைத்தையும் நாம் பெற இந்த டொலர்களையே பயன்படுத்துகின்றோம்.
வெளிநாடுகளில் பணிபுரிகின்ற பெண்கள் இலங்கையில் குடும்ப பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாமல் இவ்வாறு பணிப் பெண்களாக வெளிநாடுகளுக்கு சென்று உழைக்கின்றனர்.
தமது குடும்ப பிரச்சினை சமூக பிரச்சினை என அனைத்தையும் தாண்டி இவ்வாறு வெளிநாடுகளில் பணிபுரிந்து இலங்கையர்கள் டொலர்களை அனுப்புகின்றனர்.
வெளிநாடுகளில் சென்று பணிபுரிய செல்வதன் காரணமாக அந்தப் பெண்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் சிக்கல்கள் ஏராளம்.
பெண்கள் இவ்வாறு மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லாமல் இலங்கையிலேயே பொருளாதார ரீதியில் வலுவூடப்படவேண்டும் என்ற விடயம் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டுவருகின்றது. அது தொடர்பாக விரிவான பரந்துபட்ட வேலைத்திட்டங்கள் அவசியமாகவிருக்கின்றன.
ஆடை கைத்தொழில் துறையில் பெண்கள்
அடுத்ததாக இலங்கைக்கு அதிகளவு டொலர்களை கொண்டு வரும் துறையாக ஆடைத்துறையை குறிப்பிடமுடியும்.
ஆடைத்துறை ஊடாக இலங்கைக்கு வருடம் ஒன்றுக்கு சுமார் 5 பில்லியன் டொலர்கள் வருகின்றன.
2019 ஆம் ஆண்டின் புள்ளி விபரப்படி 5.5 பில்லியன் டொலர்களை இலங்கை பெற்றுக் கொள்கிறது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இலங்கையில் இருந்து அதிகளவாக ஆடைகளை இறக்குமதி செய்கின்றன.
இந்த ஆடைத் தொழிற்சாலைகளில் பணி புரிகின்றவர்கள் அதிகமாக பெண்களாகவே இருக்கின்றனர்.
அந்தப் பெண்கள் இங்கு ஆடைத் தொழிற்சாலைகளில் கஷ்டங்களை எதிர்கொண்டு ஏற்றுமதி செய்யும் ஆடைகள் ஊடாகவே வருடம் ஒன்றுக்கு 5 பில்லியனுக்கு மேற்பட்ட டொலர்கள் வந்து கொண்டிருக்கின்றன.
எனவே அந்த ஆடைக் கைத்தொழில் துறையில் பணியாற்றும் சென்ற பெண்கள் எந்தளவு தூரம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்கின்றனர், எந்தளவு தூரம் இலங்கை மக்களின் உணவுத் தேவையை நிறைவேற்றுகின்றனர்? எந்தளவு தூரம் இலங்கை மக்களின் பசியை போக்குகின்றனர்? எந்தளவு தூரம் எரிபொருட்களை எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்கு பங்களிப்பு செய்கின்றனர் என்பது சிந்திக்கவேண்டிய விடயமாகும்.
பெருந்தோட்டத்துறை பெண்கள்
மூன்றாவதாக இலங்கைக்கு அதிகளவு டொலர்களை பெற்றுக்கொடுக்கும் தரப்பினராக தேயிலை மற்றும் இறப்பர் துறையில் பணியாற்றும் பெண்களே உள்ளனர். தேயிலை மற்றும் இறப்பர் பெருந்தோட்டத்துறையில் பெண்களே அதிகளவில் பணியாற்றுகின்றனர். அவர்களே டொலகளை பெற்றுக் கொடுக்கின்றனர்.

2020 ஆம் ஆண்டின் புள்ளி விபரங்களின்படி தேயிலை துறை ஊடாக இலங்கை 1.3 பில்லியன் டொலர்களை பெற்றுக் கொண்டுள்ளது.
அதேப்போன்று ரப்பர் ஊடாகவும் டொலர்கள் பெறப்படுகின்றன. இது எந்தளவு தூரம் இலங்கையின் அந்நிய செலாவணி தேவையை நிறைவு செய்கின்றது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
பெருந்தோட்டத்துறையில் பணியாற்றுகின்ற பெண்கள் எந்தளவு தூரம் நெருக்கடிகளை பொருளாதார பிரச்சினைகளை சமூக பிரச்சினைகளை எதிர் கொண்டிருக்கின்றனர்? என்பது தெரியும்.
அவர்களுக்கு வசதியான பாதுகாப்பான நிரந்தர வீடுகள் இல்லை, கல்வி ஏனைய சமூக வசதிகள், சமூகக் கட்டமைப்பு வசதிகளை பெறுவதில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு கொண்டுள்ளனர்.
பெருந்தோட்டத்துறை மக்கள் கல்வி சுகாதார துறைகளில் கடும் பின்னடைவை சந்தித்துள்ளனர். ஆனால் இவர்கள் பெற்றுக் கொடுக்கின்ற டொலர்கள் இலங்கை மக்களின் பசியைப் போக்குகின்றன.
அந்த மக்கள் எதிர்கொள்கின்றன பிரச்சினைகள் இன்னும் நீடித்துக்கொண்டிருக்கின்றன.
அந்தவகையில் பார்க்கும்போது இலங்கையில் பெண்களே அதிகளவான டொலர்களை பெற்றுக் கொடுக்கின்றனர்.
கிட்டத்தட்ட வருடமொன்றுக்கு 14 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு பெண்கள் பெற்றுக் கொடுக்கின்றனர்.
ஆடைத்துறை, வெளிநாடுகளில் பணிபுரியும் பெண்கள் மற்றும் தேயிலை ரப்பர் துறையில் பணியாற்றுகின்ற பெண்கள் என பெண்களே அதிக அளவில் இலங்கைக்கு டொலர்களை பெற்றுக் கொடுக்கின்றனர்.
பெண்களின் பங்களிப்பு காரணமாக 14 பில்லியன் டொலர்கள் இலங்கைக்கு வந்து கூட நாம் நெருக்கடியை சந்திக்கின்றோம்.
எனவே பெண்களை பொறுத்தவரையில் இந்த நாட்டின் பொருளாதாரத்துக்கு, இந்த நாட்டின் டொலர் வருகைக்கு, இந்த நாட்டு மக்களின் பசியைப் போக்குவதற்கு, மக்களின் பொருளாதார தேவையை நிறைவு செய்வதற்கு வழங்குகின்ற பங்களிப்பை அங்கீகரிக்கவேண்டும்.
அவர்களுக்கான வசதிகளை அவர்களுக்கான பொருளாதார ஊக்குவிப்பு களை சரியான முறையில் செய்ய வேண்டியது மிக அவசியமாகும். அவர்களது பொருளாதார எதிர்காலம், அவர்களது சமூக பாதுகாப்பு, என்பன சரியான முறையில் திட்டமிடப்பட்டு வலுவூட்டப்பட வேண்டியது அவசியமாகும்.
எனவே பெண்களுக்கான அங்கீகாரம் உரிய முறையில் வழங்கப்பட வேண்டியது மிக அவசியமாக இருக்கின்றது.