லத்தீப் பாரூக்

பிரபல பலஸ்தீன்-அமெரிக்க ஊடகவியலாளரான ஷிரீன் அபு அக்லாவை கடந்த 11ஆம் திகதி ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன நகரமான ஜெனினில் வைத்து இஸ்ரேலிய படைகள் சுட்டுக்கொன்றுள்ளன.

இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்பு சம்பந்தமான செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோதே அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 

இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பலஸ்தீனத்தின் மேற்குகக்கரை பிரதேசத்தில் பலஸ்தீன மக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளின் அடையாளச் சின்னமாக ஜெனின் நகரம் காணப்படுகின்றது. 

ஷிரீன் அபு அக்லா ஜெரூஸலத்தினைச்சேர்ந்த கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அல்ஜசீரா தொலைக்காட்சியின் ஊடகவியலாளராக கடந்த 25 வருடங்களாக பணியாற்றியுள்ளார்.

பலஸ்தீனப் பிரதேசங்களில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பற்றிய தகவல்களை இவர் தவறாமல் வழங்கி வந்ததால் மத்திய கிழக்கில் வீட்டுக்கு வீடு அறியப்பட்டவராக உள்ளார்.

கடந்த இரண்டரை தசாப்தங்களுக்கு மேலாக இஸ்ரேலின் கொடிய ஆக்கிரமிப்பின் கீழ் பலஸ்தீன மக்கள் நாளாந்தம் அனுபவித்து வரும் இன்னல்களை அச்சொட்டாகப் படம் பிடித்து காட்டும் பணியில் இவர் ஈடுபட்டிருந்தார். 

அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கின் ஏனைய பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட யூதர்களை பலஸ்தீன பூமியில் சட்ட விரோதமாகக் குடியேற்றுவதில் இஸ்ரேல் காட்டி வரும் அக்கறை அதன் காரணமாக அந்தப் பிரதேசங்களில் காலாகாலமாக வாழ்ந்து வரும் சுதேசிகளான பலஸ்தீன மக்கள் அனுபவித்து வரும் இன்னல்கள் என்பனவற்றை தெளிவாக விளக்கும் பணியை அவர் முன்னெடுத்து வந்திருந்தார். 

ஷிரீனின் பூதுவுடலை தாங்கிய பேழையை சுமந்து சென்றவர்கள் மீதும் இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தி அவரது இறுதி ஊர்வலத்திலும் குழப்பம் விளைவித்துள்ளனர்.

அந்தத் தாக்குதல்களுக்கு ஈடுகொடுத்தவாறே ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூஸலத்தின் மவுண்ட் சியோனில் உள்ள புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மயானத்துக்கு அவரது உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்யதுள்ளனர் பொதுமக்கள்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை இந்தக் கொலையை ஏகமனதாகக் கண்டித்துள்ளது. இஸ்ரேலிய விவகாரம் ஒன்றில் பாதுகாப்புச் சபை ஒற்றுமைப்பட்டு அறிக்கை விடுவது மிகவும் அரிதானதொரு விடயமாகும்.

இந்நிலையில் குறித்த அறிக்கையில், பக்கச்சார்பற்ற, நியாயமான, வெளிப்படையான, விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வொஷிங்டன்னில் இருந்து வெளியிடப்பட்டுள்ள பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அமைப்பின் முக்கியஸ்தர் அலி ஹார்ப், “அமெரிக்கா கண்ணாடி முன்னிலையில் நின்று தன்னைப் பார்க்க வேண்டும்.

இஸ்ரேலுக்கு அது வழங்கி வரும் நிபந்தனையற்ற ஆதரவை மீள் மதிப்பீடு செய்ய வேண்டிய காலம் வந்துள்ளது. அமெரிக்கா வருடாந்தம் இஸ்ரேலுக்கு வழங்கி வரும் பில்லியன் கணக்கான டொலர்கள் ஆதரவையும் மீள் மதிப்பீடு செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் இஸ்ரேலுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட மாட்டாது, இஸ்ரேலுக்கான உதவிகளில் வரையறையோ அல்லது குறைப்போ இடம்பெறாது என்று ஜோ பைடனும் அவரது உயர்மட்ட நிர்வாக அதிகாரிகளும் தெட்டத்தெளிவாக உறுதி செய்துள்ளனர். அமெரிக்கா, இஸ்ரேலுக்கு வருந்தாம் 3.8 பில்லியன் டொலர்கள் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. 

தான் ஒரு ஊடகவிலாளர் என்பதை வெளிப்படையாகவும், தெளிவாகவும் உணர்த்தும் வகையிலான ஒரு மேலாடையையும் தலைக்கவசத்தையும் அணிந்திருந்த நிலையிலேயே ஷரீன் குறிவைக்கப்பட்டுள்ளார்.

அதுவும் ஊடகவியலாளர்களுக்கான ஒரு பொதுவான திறந்த வெளியில் அவர் நின்றிருந்தபோதே இந்த இலக்கு வைக்கப்பட்ட படுகொலை இடம்பெற்றுள்ளது.

1997இல் அல்ஜஸீரா ஸ்தாபிக்கப்பட்ட போது ஷிரீன் தனது 26வயதில் அதனுடன் இணைந்து கொண்டார். பில்லியன் கணக்கான பலஸ்தீன அரபு மக்கள் வாழும் வீடுகளில் அவர் பலஸ்தீனத்தின் முகப்புத் தோற்றமாகப் பார்க்கப்பட்டார்.

2008, 2009, 2012, 2014 மற்றும் 2021இல் காஸா மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதல்களின் போது முன்னணியில் நின்று செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.

அல்ஜசீராவுக்காக 2006இல் லெபனான் யுத்த களத்திலும் அவர் செய்தி சேகரிப்பில் முன்னணியில் இருந்துள்ளார்.

பலஸ்தீனத்துக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள ஒவ்வொரு பலஸ்தீன மக்களின் வீடுகளிலும் மக்கள் ஷிரீனுக்காக கண்ணீர் சிந்திய வண்ணம் உள்ளனர். அவர் உலக அரங்கில் எமது குரலாகத் திகழ்ந்தார் என்று அவரது பாடசாலைக் கால நண்பர்களில் ஒருவரான டெரி புலாதா தெரிவித்துள்ளார். 

பலஸ்தீன எழுத்தாளர் மர்யம் பர்கொதி “இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிரான ஷிரீனின் குரல் இன்னமும் எனது வீட்டுக்குள் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது. இவர் தான் நான் ஒருமுறை கைது செய்யப்பட்டதை செய்தியாக மக்களிடத்தில் கொண்டு சென்றவர்” என்றார்.

காஸாவில் உள்ள பத்தி எழுத்தாளர் மொட்டஸம் ஏ டொலோல், “பெரும்பாலும் எல்லா சர்வதேச நிறுவனங்களும் உலகின் ஏனைய பெரிய சக்திகளும் இந்தப் படுகொலை பற்றி விசாரிக்கப்பட வேண்டும் என்று இஸ்ரேலைக் கேட்டுள்ளனர். ஆனால் அவை மக்களின் கோபத்தை சமாளிக்கும் முயற்சியாகும்.

அவர்கள் இந்த விடயத்தில் ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருந்திருப்பின் இஸ்ரேல் இதற்கு முன்னர் புரிந்துள்ள படுகொலைகள் பற்றியும் விசாரணைகளைச் செய்வதற்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ஷிரீன் அபு அக்லாவின் கொலை சாத்தியமானதொரு யுத்தக் குற்றம் என்று பலஸ்தீன் தொடர்பான விசேட ஐ.நா. அறிக்கையிடலாளர் பிரன்செஸ்கோ அபேன்ஸே துருக்கி செய்திச் சேவை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

களத்தில் உள்ள எந்தவொரு பலஸ்தீனர் மீதும் ஈவு இரக்கம் காட்டும் நிலையில் இஸ்ரேல் படைவீரர்கள் இல்லை என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. காரணம் தாங்கள் எந்தளவு வன்முறைகளில் ஈடுபட்டாலும் தங்களை நியாயப்படுத்த அரசாங்கமொன்று இருக்கின்றது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். 

1948க்கு முன் இஸ்ரேல் என்றொரு நாடு இருக்கவில்லை. பலஸ்தீனம் தான் இருந்தது. அங்கு பலஸ்தீன மக்கள் நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கின் ஏனைய பகுதிகளில் இருந்து யூதர்கள் கொண்டு வரப்பட்டு பலவந்தமாக இந்தப் பகுதிகளில் குடீயேற்றப்பட்டனர். 

அதன் தொடராக ஐக்கிய நாடுகள் சபையை அச்சுறுத்தி பணிய வைத்து இஸ்ரேல் என்ற நாடு உருவாக்க்பபட்டது. பொய், ஏமாற்று. இலஞ்சம், அச்சுறுத்தல், கொலைகள், படுகொலைகள், இனஒழிப்பு என எல்லாவிதான மனித குலத்துக்கு விரோதான செயல்களிலும் இந்த யூதர்கள் ஈடுபட்டனர். 

தனது இருப்பை நியாயப்படுத்த இஸ்ரேல் தொடர்ந்து பொய்களை பரப்பி வருகின்றது. பலஸ்தீனர்களைத் தொடர்ந்து படுகொலை செய்து வருகின்றது. அவர்களை பலவந்தமாக தமது சொந்த இடங்களில் இருந்து அப்புறப்படுத்தி வருகின்றது. 

அவர்களது சொத்துக்களைத் திருடி வருகின்றது. அவர்களின் கட்டடங்களையும் வீடுகளையும் தரைமட்டமாக்கி வருகின்றது. அதை வெளிச்சத்துக்கு கொண்டு வருபவர்களை கொலை செய்தும் வருகின்றது. ஆனால் ஐ.நா.வும், சர்வதேசமும், ஊடகங்களும் மெத்தனமாகவே இருக்கின்றன.