சுவிசிலிருந்து சண் தவராஜா

“தூக்குக் கயிற்றின் நிழலில் இருந்த போதிலும் சளைக்காமல் போராடிய பேரறிவாளனின் மனவுறுதி எத்தகைய வலிமை மிக்கதாக இருந்ததோ அதற்குச் சற்றும் குறையாத மனவுறுதியை அவரின் தயார் அற்புதம்மாளும் கொண்டிருந்தார்” 

13 ஆண்டுகளுக்கு முன்னர், முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட தமது உறவுகளுக்காக உலகெங்கும் பரந்து வாழும் ஈழத் தமிழர்களும், தமிழின உணர்வாளர்களும் மே 18இல் துக்கம் அனுஷ்டித்துக் கொண்டிருந்த வேளை மகிழ்ச்சிகரமான ஒரு செய்தி வெளியாகி அவர்களைக் கொண்டாட்ட மனநிலைக்கு மாற்றியது. 

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு செய்தி. முள்ளிவாய்க்கால் போருக்கு முன்னமிருந்தே விரும்பப்பட்ட ஒரு செய்தி. ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு 31ஆண்டுகளாகச் சிறையிருந்த பேரறிவாளன் உச்ச நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டார் என்ற அந்தச் செய்தி வெளியாகிய வேளை உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. 

பேரறிவாளன் யார், அவர் ஏன் கைதானார் போன்ற விடயங்கள் அன்றாடச் செய்திகளை வாசிக்கும் தமிழ் மக்கள் அனைவருக்குமே அத்துபடியான விடயம். அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் எனத் தமிழ் மக்கள் விரும்பியதன் காரணம் அவர் ஒரு அப்பாவி என்பதுவும் 19 வயது நிரம்பிய நிலையில் கைதான அவர் செய்த 'குற்றம்" இரண்டு மின்கலங்களை வாங்கிக் கொடுத்தார் என்பதை அறிந்திருந்ததாலுமே. 

1991 மே மாதம் 21ஆம் திகதி ஸ்ரீ பெரும்புதூரில் நடைபெற்ற ராஜீவ் காந்தி படுகொலையைத் தொடர்ந்து யூன் மாதம் 11ஆம் திகதி கைது செய்யப்பட்ட பேரறிவாளன் விடுதலையாகிய நாள் வரை நடாத்திய சட்டப் போராட்டம் அளவிட முடியாதது. 

தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தடைக்கற்கள் யாவற்றையும் படிக்கற்களாக மாற்றி அவர் நாளுக்கு நாள் முன்னேறினார் என்றால் அவரோடு சளைக்காது தோள் கொடுத்த அவரின் தாயார் அற்புதம்மாளை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவரது முயற்சியாலும், செயற்பாடுகளாலும் ஈர்க்கப்பட்டே பல சமூக இயக்கங்களும், அரசியல் கட்சிகளும், தனி நபர்களும் பேரறிவாளனின் விடுதலைக்காகக் குரல் தரவும், போராடவும் முன்வந்தனர். பேரறிவாளன் என்ற பெயர் உலகத் தமிழர் ஒவ்வொருவராலும் அறியப்பட்ட பெயராக மாறியது. 

தூக்குக் கயிற்றின் நிழலில் இருந்த போதிலும் சளைக்காமல் போராடிய பேரறிவாளனின் மனவுறுதி எத்தகைய வலிமை மிக்கதாக இருந்ததோ அதற்குச் சற்றும் குறையாத மனவுறுதியை அவரின் தாயாரும் கொண்டிருந்தார். அதனாலேயே கட்சி பேதங்களைக் கடந்து அனைத்துத் தரப்பினரதும் ஆதரவை அவரால் பெற முடிந்திருந்தது. பொதுத் தளத்தில் இயங்கும் பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அற்புதத்தம்மாள் விளங்கினார். 

பேரறிவாளனின் விடுதலையை விரும்பாத ஒருசில தமிழர்களும் எம் மத்தியில் உள்ளனர். அவர்கள் மானுட நேயத்தை மறந்தவர்கள். ‘பழிக்குப் பழி’ என்ற கருத்தில் நம்பிக்கை கொண்ட அவர்கள் மன்னிப்பதால் மனிதன் மகாத்மாவாகிறான் என்பதை ஏற்றுக் கொள்ளாதவர்கள். 

ஒருசில ஈழத் தமிழர்களுக்கும் பேரறிவாளனின் விடுதலை உவப்பானதாக இல்லை என்பதை அவதானிக்க முடிகின்றது. எந்தத் தவறுமே செய்திராத ஒருவன், அல்லது அவர்கள் பார்வையில் தவறு செய்தவனாக இருந்தாலும் 31வருடங்களைச் சிறையில் கழித்து, தனது இளமையையே தொலைத்துவிட்ட ஒருவனை மன்னிக்க முடியாத அவர்கள் உலக மக்களின் விடுதலைக்காகக் குரல் தருகின்றோம் எனச் சொல்வதெல்லாம் படு அயோக்கியத்தனம். 

மறுபுறம், பேரறிவாளனின் விடுதலையை வென்றெடுத்ததில் அ.தி.மு.கவின் மறைந்த தலைவி ஜெயலலிதாவின் ஆரம்பம் தாக்கம் செலுத்தியுள்ளதைப் போலவே தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்ராலின் தலைமையிலான தி.மு.க.வுக்குத் தொடர்பு உள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள விரும்பாதவர்களும் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

பேரறிவாளனின் விடுதலை தொடர்பில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மிக முக்கியமானது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் ராஜீவ் காந்தி வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஆறு பேரும் விடுதலை ஆவதற்கான வாய்ப்பு உள்ளது. அதற்குத் தமிழக அரசு இயன்றவரை முயற்சி செய்யும் என்று நிச்சயம் நம்பலாம். 

அதேவேளை, தமிழ்நாட்டில் முஸ்லிம் கைதிகள் சிலரும் அவர்களைப் போன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தண்டனைக் காலம் முடிந்தும் விடுவிக்கப்படாமல் உள்ளனர். அவர்களை விடுதலை செய்வது தொடர்பிலும் தமிழக அரசு விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்பதே மனித நேயம் கொண்டோரின் வேண்டுகோளாக உள்ளது.

மு.க.ஸ்ராலின் தலைமையிலான தி.மு.க. அரசாங்கம் பதவிக்கு வந்த நாள் முதலாக மாநில உரிமைகளை நிலைநாட்டுவதில் மிகுந்த அக்கறையும், கரிசனையும் கொண்டு செயற்பட்டு வருவதைப் பாரக்க முடிகின்றது. அந்த வகையில் பேரறிவாளன் விடுதலை தொடர்பான தீர்ப்பு மாநில உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. அதேவேளை, தி.மு.க. அரசாங்கத்தின் சாதனைகளுள் ஒன்றாகவும் பார்க்கப்படுகின்றது.

நீதித் துறையின் அடிநாதமாக விளங்கும் சட்டங்கள் உலக நாடுகள் அனைத்திலும் சமமானவையாக இல்லை. ஒரு நாட்டில் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு விடயம் இன்னொரு நாட்டில் சட்டவிரோதமாக உள்ளது. ஆட்சியாளர்களைப் பாதுகாக்கும் நோக்குடன் ஆளும் வர்க்கத்தினால் உருவாக்கப்படும் சட்டங்கள் அவ்வாறு இருப்பதில் வியப்பெதுவும் இல்லை. 

சட்டத்தை இயற்றுபவர்களே தாம் இயற்றும் சட்டங்களை மீறும் வகையிலான ஓட்டைகளையும் விட்டு வைக்கின்றார்கள் என்பதுவும் இரகசியமான விடயம் அல்ல. இந்நிலையில் சாமானியர்கள் சட்டத்தின் பிடியில் சிக்கிச் சின்னாபின்னமாகின்றார்கள். பணம் படைத்தவர்களும், செல்வாக்கு மிக்கவர்களும் இலகுவில் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துக் கொள்கின்றார்கள். 'உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான், தப்புச் செய்தவன் தண்டனை பெறுவான்" என்பது போன்ற வசனங்கள் நடப்புலகில் காலத்துக்கு ஒவ்வாதவையாக மாறிவிட்டன.

தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதியாக மாறி விடுகின்றது. பேரறிவாளன் விடயத்தில் இது துல்லியமாகத் தெரிகின்றது. 19 வயது இளைஞனாக இருந்த போது, எதற்காகச் செய்கிறோம் எனத் தெரியாமலேயே இரண்டு மின்கலங்களை வாங்கிக் கொடுத்தற்காக, காவல் துறையின் சித்திரவதைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையிலும், வஞ்சக எண்ணத்துடன் வாக்குறுதிகளை வழங்கி ஒப்புதல் வாக்குமூலத்தில் கையொப்பத்தைப் பெற்றுக்கொண்ட நிலையிலும் ஒரு இளைஞனை 31 வருடங்கள் சிறைக் கொட்டடியில் அடைத்து வைத்து, அவனை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்தது மாத்திரமன்றி, ஒரு மனிதனின் வாழ்வில் மிக முக்கிய காலகட்டமாக உள்ள இளமைக் காலத்தைச் சிதைத்துவிட்டு அவனை விடுதலை செய்வது என்பதை எவ்வாறு ~நீதி| நிலைநாட்டப்பட்டுவிட்டது எனக் கொண்டாடுவது?