(எம்.மனோசித்ரா)

 

பரீட்சைகள் சட்டத்திற்கமைய பரீட்சை ஆரம்பமாகி அரை மணித்தியாலம் தாமதமாகி வரும் மாணவர்களுக்கு வினாத்தாள்களை வழங்குவது வழமையாகும்.

எனினும் இம்முறை நாட்டிலுள்ள நெருக்கடி நிலைமையைக் கருத்திற் கொண்டு மாணவர்கள் பரீட்சைகள் ஆரம்பமாகி அரை மணித்தியாலத்திற்கும் மேலதிகமாக கால தாமதமாகி வருகை தந்தாலும் அவர்களுக்கு வினாத்தாள்களை வழங்குமாறு பரீட்சை மண்டப பொறுப்பதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ.தர்மசேன தெரிவித்தார்.

தாமதமாகி வரும் மாணவர்கள் தொடர்பில் பரீட்சை திணைக்களத்திற்கு அறிவித்து , அதன் பின்னர் அவர்களுக்கு மேலதிக நேரத்தை வழங்குவது தொடர்பில் தீர்மானிக்குமாறும் பரீட்சை மண்டப பொறுப்பதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

இம்முறை வழமைக்கு மாறானதொரு சூழலில் பரீட்சைகள் இடம்பெறுகின்றமையால் பரீட்சை கடமைகளில் ஈடுபடுவோரையும் , மாணவர்களையும் குறித்த நேரத்திற்கு முன்னரே பரீட்சை மண்டபங்களுக்கு சமுகமளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

ஏதேனுமொரு காரணத்திற்காக மாணவர்கள் கால தாமதமாக பரீட்சை மண்டபத்திற்கு வருகை தந்தால் அவர்களை திருப்பி அனுப்பாது பரீட்சையை எழுதுவதற்கு அனுமதிக்குமாறு சகல அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் மாணவிகள் வழமையைப் போன்ற தமது சீருடையை அணிந்து செல்ல முடியும். மாறாக முகத்தையும் முழுமையாக மறைக்கும் வகையிலான சீருடையை அணிந்து சென்றால் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிடும்.

அதிபர்கள், மாகாண கல்வி பணிப்பாளர்கள், தேசிய கல்வி நிறுவனம், கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் உள்ளிட்ட சகல கல்வி கட்டமைப்பிலுமுள்ள கற்றல் , கற்பித்தல் செயற்பாடுகள் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுடனும் கலந்தாலோசித்த பின்னரே பரீட்சையை இந்த தினத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. எவ்வாறிருப்பினும் அண்மைய காலங்களில் பாடசாலைகளை தொடர்ச்சியாக நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

எவ்வாறிருப்பினும் அதனை அடிப்படையாகக் கொண்டு சகல பாடத்திட்டங்களையும் உள்ளடக்காமல் , பரீட்சை வினாத்தாள்களின் தரத்தினைக் குறைத்து அதனை தயாரிப்பது நடைமுறை சாத்தியமற்றது.

அண்மைய காலங்களில் நாளாந்தம் 5000 - 6000 சாதாரண தர மற்றும் உயர் பரீட்சை பெறுபேற்று சான்றிதழ்கள் வெளிநாட்டு உயர் கல்விக்காக கோரப்படுகின்றன. இலங்கையின் கல்வி சான்றிதழ் உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது உயர்தரம் மிக்கவையான கருதப்படுகின்றன.

எனவே அந்த தரத்தினை குறைக்கும் வகையில் வினாத்தாள்களை தயாரிக்க முடியாது. எவ்வாறிருப்பினும் மாணவர்கள் இலகுவாக விடையளிக்கக் கூடியதாக வினாத்தாள்கள் அமைந்திருக்கும் என்று நம்புகின்றோம்.

மாணவர்கள் எவ்வாறு விடையளித்துள்ளார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்படும்.

வழமையான பரீட்சைகள் சட்டத்தின் படி பரீட்சை ஆரம்பமாகி அறை மணித்தியாலம் தாமதமானால் அவர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்படும்.

எனினும் நாட்டில் தற்போதுள்ள நிலைமையைக் கருத்திற் கொண்டு அதனைவிடவும் கால தாமதமாக வருகை தந்தாலும் வினாத்தாள்களை வழங்குமாறு பரீட்சை மண்டப பொறுப்பதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

எந்தவொரு மாணவரையும் பரீட்சை மண்டபத்திலிருந்து திருப்பி அனுப்ப வேண்டாம் என்று அறிவித்துள்ளோம். தாமதமாக பரீட்சை மண்டபத்திற்கு வரும் மாணவர்கள் தொடர்பில் பரீட்சை திணைக்களத்திற்கு அறிவித்து , அதன் பின்னர் அவர்களுக்கு மேலதிக நேரத்தை வழங்குவது தொடர்பில் தீர்மானிக்குமாறும் பரீட்சை மண்டப பொறுப்பதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றார்.