-என்.கண்ணன்

நாட்டின் பொருளாதார நிலை குறித்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த திங்கட்கிழமை மாலை நிகழ்த்திய உரை பலருக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது. இன்னும் சிலருக்கு அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. 

காரணம், பலர் தவறான விம்பங்களை தோற்றுவித்திருந்தார்கள். தவறான தகவல்களையும் பரப்பியிருந்தார்கள்.

ரணில் விக்கிரமசிங்க தனது உரையில், எரிபொருள் விலைகளை கணிசமாக குறைக்கும் அறிவிப்பை வெளியிடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் காணப்பட்டது.

ரணில் ஆட்சிக்கு வந்த பின்னர், எரிபொருள் வரிசைப் பிரச்சினை ஓரளவுக்கு குறைந்தது. ஆனால் முற்றாகத் தீரவில்லை.

அதுபோல ஏனைய பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்றும், எரிபொருள் விலைகள் குறைக்கப்படும் என்றும் பலர் எதிர்பார்த்தனர். ஆனால், ரணில் அத்தகைய எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

மாறாக, அவர் பெற்றோலியப் பொருட்களை தற்போதைய விலைக்கு விற்பதால், பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எவ்வளவு இழப்பைச் சந்திக்கிறது என்று பட்டியல் போட்டிருந்தார்.

இதன் மூலம், எரிபொருள் விலைகள் குறையும் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஏமாற்றம் மிஞ்சியதுடன், இன்னும் ஒரு நாளைக்குத் தேவையான பெற்றோல் மட்டும் தான் கையிருப்பில் உள்ளது என்றும் ரணில் கொளுத்திப் போட்டார்.

உடனடியாக பல இடங்களில் வாகனங்களின் நீண்ட வரிசையை காண முடிந்தது. நாட்டின் பொருளாதார நிலை குறித்த தெளிவு நாட்டு மக்களிடம் இல்லை என்பது ஒரு பிரச்சினை. அவர்கள் மிகையான எதிர்பார்ப்பை வைக்கிறார்கள், ஏமாற்றமடைகிறார்கள் என்பது இன்னொரு பிரச்சினை.

பிரதமர் ரணில் வெளியிட்ட வீடியோ உரை ஒன்றில், பொருளாதார நெருக்கடி மோசமடையப் போகிறது என்று கூறியபோது தன்னைப் பொய்யர் என்று முன்னைய அரசாங்கம் கூறியதாக நினைவுபடுத்தியிருந்தார்.

தாம் கூறியதே கடைசியில் நடந்தது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

பொருளாதார நெருக்கடி பற்றிய உண்மையான சூழல் நாட்டுக்குத் தெரிய வேண்டியது அவசியம். அதேவேளை சில விடயங்கள் மறைக்கப்பட வேண்டும் என்பதும் முக்கியம்.

நாடு மோசமான நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நிலையிலும், பெருமளவிலான ஆடம்பரங்களும், ஆரவாரங்களும், வீண் செலவினங்களும் இன்னமும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் முடங்கிப் போயிருந்த கொண்டாட்டங்களும், விழாக்களும் இப்போது களைகட்டியிருக்கின்றன.

இவற்றைப் பார்க்கின்ற எவரும் நாடு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறதா என்றே கேள்வி எழுப்புவார்கள்?

குறிப்பாக வடக்கில் நடக்கின்ற விழாக்கள், அவ்வாறான கேள்விகளையே எழுப்பத் தூண்டும். வடக்கு மக்கள், போருக்கு நடுவே வாழ்ந்தவர்கள், இதைவிட மோசமான பொருளாதார நெருக்கடிகளையும், தடைகளையும் தாண்டி வந்தவர்கள்.

அத்தகைய நெருக்கடியான சூழலிலும், விழாக்களைக் கொண்டாடி மகிழ்ந்தவர்கள். அது அவர்களின் இந்த இயல்புநிலைக்கு ஒரு காரணம்.  வெளிநாட்டு பண வருவாய் இன்னொரு காரணம்.

ஆனாலும், நாடு மோசமானதொரு நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நிலையில், இவ்வாறான ஆடம்பரங்களை தவிர்க்க, மின்சாரம், எரிபொருள் தேவைகளை மட்டுப்படுத்தி, மிச்சப்படுத்துவது முக்கியம்.

சிறுதுளி பெருவெள்ளம். ஒவ்வொரு வீட்டிலும் அணைக்கப்படும் ஒவ்வொரு மின்குமிழும், பெரியளவிலான மின்சாரத்தையும், அதன் உற்பத்திக்கான செலவையும், மூலப்பொருளையும் மிச்சப்படுத்தும்.

பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு பல மாதங்களாகியும், மின்சார, எரிபொருள் நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கான அல்லது குறைப்பதற்கான பொறிமுறை ஏதும் உருவாக்கப்படவில்லை. மின்வெட்டு தவிர வேறெந்த உபாயமும், மின்சார சபையிடம் இல்லை. 

அதுபோல, எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்தல், நிறுத்துதல் போன்றவற்றை விட வேறெந்த உபாயமும் பெற்றாலியக் கூட்டுத்தாபனத்திடம் கிடையாது. இந்த இரண்டையும் முறைப்படுத்துகின்ற பொறிமுறைகள் அவசியம்.

தினமும் எரிபொருளுக்காக பல மணித்தியாலங்கள், வாகனங்கள் வரிசையில் காத்திருக்கின்றன. அவ்வாறு பெறப்படும் பெற்றோல் பெரும்பாலும், வீண் பயணங்களுக்காகவே பயன்படுகிறது.

ஏனென்றால், வேலை உள்ளவர்களால், வரிசையில் மணிக்கணக்கில் காத்திருக்க முடியாது. எனவே வாகனங்களுக்கான எரிபொருளை பங்கீட்டு அடிப்படையில் முறைப்படுத்துவதன் மூலமே, இந்த நெருக்கடியை தீர்க்க முடியும். 

அத்தியாவசியமாக தேவைப்படுவோருக்கும் அது சீராக கிடைக்க உதவும். அதுபோலத் தான், மின்சார பயன்பாட்டை குறைப்பதற்கான வழிப்படுத்தல்களை யாரும் செய்யவேயில்லை. பஷில் ராஜபக்ஷ நிதியமைச்சராக இருந்த போது, வீதி விளக்குகளை அணைக்க உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவு செயற்படுத்தப்படவில்லை.

வீணாக செலவிடப்படும் மின்சாரம் பொருளாதாரத்தைப் பாதிக்கிறது. ஏனென்றால். ஒவ்வொரு அலகு மின்சாரத்துக்கும், 30ரூபா இழப்பு அரசாங்கத்துக்கு ஏற்படுகிறது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்.

அதுபோன்று ஒவ்வொரு லீற்றர் பெற்றோலுக்கும், 84.38 ரூபாவும், டீசலுக்கு  131.55 ரூபாவும்,  அரசாங்கத்தினால் செலுத்தப்படுகிறது. இப்போதைய நிலையில் அரசாங்கத்துக்கு வருவாய் தேடுவதை விட, செலவினங்களை குறைப்பதே முக்கியம்.

ஆனால் மின்சாரசபையோ, பெற்றோலியக் கூட்டுத்தாபனமோ, இவற்றின் பயன்பாட்டை மட்டுப்படுத்தக் கூடிய திட்டங்களை செயற்படுத்தவில்லை. அரசாங்கமும் அதற்கு ஊக்கமளிக்கவில்லை.

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் இந்த விடயங்களில் கவனம் செலுத்துமா என்றும் தெரியவில்லை.

தேவையான பெற்றோலும், மின்சாரமும் கிடைக்கின்ற நிலையை ஏற்படுத்துவதை விட, அவை வீணாக பயன்படுத்தப்படுவதை தவிர்ப்பது அல்லது தடுப்பதே முக்கியம்.

அதற்காக அரசாங்கம் தனது பலத்தை- அதிகாரத்தைப் பயன்படுத்தலாம். அதற்கு மக்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். ஏனென்றால் பேரழிவுச் சூழலுக்குள் சிக்கிக் கொள்வதை எவரும் விரும்பவில்லை.

அதனால் தான், ஏற்கனவே மக்களால் தோற்கடிக்கப்பட்ட ஒருவராக இருந்தாலும், பாராளுமன்றத்தில் ஒற்றையாளாக இருந்தாலும், ராஜபக்ஷவினரின் துணையுடன் பிரதமர் ஆகியிருந்தாலும், ரணில் மீது ஓரளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

இந்த நம்பிக்கை பொய்யாக கூடாது. என்றால், பொருளாதாரத்தை காப்பாற்றுவதற்காக மட்டுமன்றி, பொருளாதார இழப்புகளை தடுப்பதற்காகவும் அரசாங்கம் பணியாற்ற வேண்டும்.

முன்னர், நெருக்கடிகள் அதிகரிக்கத் தொடங்கியதும், பஷில் ராஜபக்ஷ நிதியமைச்சராக கொண்டு வரப்பட்டார். ஏழு மூளைகளைக் கொண்டவர் என்றும், மாயைகளை நிகழ்த்துவார் என்றும், புகழப்பட்டார்.

கடைசியில் அவரே எல்லாப் பழிகளும் சுமத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார். ரணில் மீது வைக்கப்படுகின்ற அதிகப்படியான நம்பிக்கைகளும் அவ்வா றாகலாம்.

இந்த சூழலில் மிகையான நம்பிக்கையை ரணில் மீது மட்டுமல்ல, யார் மீதும் வைக்க முடியாது. நாட்டின் பொருளாதார சூழல் அப்படி உள்ளது. அதனால் தான் உண்மையான பொருளாதார நிலவரங்களை வெளிப்படுத்தியிருக்கிறார் ரணில்.

ஓட்டைப் பாத்திரத்தில், தான் நீர் நிரப்ப முனைகிறார் ரணில்.  அவர், இப்போது செய்ய வேண்டியது, நீரைப் பாத்திரத்தில் பிடிப்பது மட்டுமல்ல, பாத்திரத்தில் உள்ள ஓட்டைகளை ஒவ்வொன்றாக அடைப்பது தான் முக்கியம். அப்போது தான் பாத்திரத்தில் நீர் சேரும். இல்லையேல் பஷிலின் நிலைக்கு அவரும் தள்ளப்படுவார்.

ரணிலுக்கு மேற்குலக ஆதரவு உள்ளது. இந்தியாவின் ஆதரவும் உள்ளது. அவையிரண்டும் இருந்தால் மட்டும் போதாது. உள்நாட்டில் மக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் அவசியம். பாராளுமன்றத்தில் ஒரு ஆசனத்தை வைத்திருக்கின்ற ரணிலுக்கு, அந்த ஆதரவு கிடைப்பதை உறுதிப்படுத்தக் கூடிய நிலையில் பல கட்சிகள் இருக்கின்றன.

இன்றைய நிலையில் யார் நாட்டைப் பொறுப்பேற்றாலும், மாயவித்தைகளை நிகழ்த்தி விடமுடியாது. பொறுப்பேற்கின்றவர் பழிகளை சுமந்தேயாக வேண்டும்.

அவர் கடினமான நிலைமைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும். அந்த கடினமான நிலையை விரும்பாமல் தான் ஆட்சியமைக்க பல்வேறு தரப்பினரும் இழுத்தடித்தனர்.

ரணில் அந்தச் சவாலை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.  அவர் இந்த அக்னிப் பரீட்சையில் தேறுவாரா இல்லையா என்பதை ரணில் மட்டுமோ, அவருக்கு ஆதரவு வழங்கும் கட்சிகளால் மட்டுமோ தீர்மானிக்க முடியாது.

அதனை தீர்மானிக்கும் நிலையில் நாட்டு மக்கள் தான் இருக்கிறார்கள். அவர்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் அவரால் வெற்றிபெற முடியும்.