- திருமதி சறோஜினி மகேஸ்வரநாதன்  பொருளியல் துறை சிரேஸ்ர விரிவுரையாளர்  கிழக்குப்பல்கலைக்கழகம்

இலங்கை சுதந்திரமடைந்த 70 ஆண்டுகாலப்பகுதிகளுக்குள் மிக மோசமான நிதி நெருக்கடியை தற்போது எதிர்கொள்கிறது.

ஈஸ்டர் தாக்குதல், கொரோனா தொற்றுநோயின் போதான பூட்டுதல்கள் மற்றும் உக்ரேன் ரஷ்யாவின் போர் என்பன காரணமாக சுற்றுலாத்துறை வருமானம் குறைவடைந்தமையால் 2021இல் 6.7சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்கம் ஏப்ரலில் 29.5சதவீதமாகி ஆசியாவின் மிக உயர்ந்த பணவீக்கத்தை பதிவுசெய்துள்ளது.  

இருப்பினும் 2020 பெப்ரவரி ஆரம்பத்திலேற்பட்ட கொரோனா தொற்றுநோய் உள்ளிட்ட இதரவ விடயங்கள் நாட்டின் சுற்றுலாத் துறையில் 4 % சதவீதத்திற்கும் குறைவான பாதிப்பினையே ஏற்படுத்தியிருந்த அதேநேரம் இப்பாதிப்பினை தகுந்த கொள்கைகள் மூலம் விரைவாக சீர்செய்திருக்க முடியும். 

அதேவேளை, 2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பொருத்தமற்ற பொருளாதார தந்திரோபாயங்களால் ஏற்பட்ட தற்போதைய மேசமான நெருக்கடியானது 2012ஆம் ஆண்டிலிருந்து இலங்கை அனுபவிக்கத் தொடங்கி உச்சமடைந்திருக்கின்றது.

நாட்டில் உணவுப் பொருட்களின் விலைகள் மார்ச் மாதத்தில் மட்டும் 30சதவீதம் உயர்வடைந்ததோடு 22.2மில்லியன் மக்கள் வசிக்கும் இலங்கை அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நாளொன்றுக்கு 7000 ரூபாவை செலவிடவேண்டிய நிலையும் காணப்படுகின்றது.

அதேநேரம்  வாழ்க்கைச் செலவு பலரால் தாங்க முடியாததாகிவிட்டதால் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி பாரிய போராட்டங்களில் ஈடுபட்டும் வருகின்றனர்.

பாரிய நாணய நெருக்கடி, உணவு, எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு மின்சார துண்டிப்பு மக்களின் மற்றும் தொழிற்சாலைகளின் இயல்பு நடவடிக்கைகளை ஸ்தம்பிதமடையச் செய்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பெற்றோல் நிலையங்களில் வரிசையில் நின்று நேரத்தை வீணடிக்கின்றனர்.

மேலும் கடந்த மார்ச்சில் அரசுக்கு சொந்தமான இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 2021இல் 137ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை 338 ரூபாவாக அதிகரித்ததோடு டீசல் லீற்றரொன்றின் விலையையும் 104ரூபாவில் இருந்து 289ரூபாவாக அதிகரித்தது.

தற்போதைய நாட்டின் பேரிடி இலவச சுகாதார சேவையையும் நெருக்கடிக்குள்ளக்கியுள்ளது. சர்வதேச வர்த்தக நிர்வாக அறிக்கையின்படி இலங்கைக்குத் தேவையான 85சதவீத மருந்துகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

மருத்துவர்கள் நோயாளிகளுக்கு ஒளிரும் விளக்கு மூலம் சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் காணப்படுவதோடு வடிகுழாய்கள், மயக்கமருந்துகள் மற்றும் கையுறைகள் போன்ற உபகரணங்களும் பற்றாக்குறையாகவே காணப்படுகின்றது.

உயர் பணவீக்கம் இலங்கை ரூபாவின் கொள்வனவு சக்தியை பாரியளவில் வீழ்ச்சியடையச் செய்துள்ளது. மத்திய வங்கி கடந்த இரண்டு ஆண்டுகளில் விரிந்த பண நிரம்பலை 40சதவீதம் விரிவுபடுத்தி அதன் பெறுமதியை குறைத்துள்ளது.

கடந்த மாதம் சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் மறுசீரமைப்பு அரசாங்கத்தை துரித நாணயபெறுமதி குறைப்புக்கு இட்டுச்சென்றதால் ரூபா இழப்பு அதிக வேகத்தை இழந்துள்ளது. 

 பணவீக்கம்   நாணய மாற்று வீதம்

படவிளக்கம் : மத்திய வங்கியின் ஆண்டறிக்கையினை அடியொற்றிய வரைபடங்கள் 2012 காலப்பகுதிக்குப் பின்னரான ஏற்பட்ட பணவீக்கம் மற்றும் நாணய மாற்று வீதத்தில் ஏற்பட்டமாற்றங்களையும் காட்டி நிற்கின்றது.

பல குடும்பங்களின் வருமானம் பாரியளவில் வீழ்ச்சியடைந்தமை மக்களை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச்சென்றுள்ளது. 2020 மார்ச்சில் அமுல்படுத்தப்பட்ட இறக்குமதி தடைகள், இயற்கை விவசாயக் கொள்கை, அத்துடன் உலகளாவிய ரீதியிலான பொருட்களின் விலை உயர்வு ஆகியவையும் பணவீக்க அழுத்தத்திற்கு பங்களிப்புச் செய்த காரணிகளாகக் காணப்படுகினறன. 

இதற்குமேலாக அந்நியச் செலாவணி கையிருப்பை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கோடு மேற்கொள்ளப்பட்ட அனைத்து உர இறக்குமதிகளுக்குமான தடை விவசாய உற்பத்தியின் பாரிய வீழ்ச்சிக்கு வழிவகுத்ததோடு அதிக இறக்குமதிகளுக்கும் வழிவகுத்துள்ளது. 

இவற்றுக்கப்பால் உரம் மீதான தடை காரணமாக தேயிலை மற்றும் இறப்பர் உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சி ஏற்றுமதி வருமானத்தை வீழச்சியடையச் செய்ததது. குறைந்த ஏற்றுமதி வருமானம் உணவு இறக்குமதியை குறைவடையச் செய்ததோடு உணவுப் பற்றாக்குறையையும் ஏற்படுத்தியுள்ளது.

உலக வங்கியின் மதிப்பீட்டின்படி, இலங்கையில் ஐந்து இலட்சம் மக்கள் வறுமைக் கோட்டிற்குள் தள்ளப்பட்டு விட்டனர். இது ஐந்தாண்டு கால வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது பெரும் பின்னடைவாகும். இதனை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறையின் 2021 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.5சதவீதம் குறைந்துள்ளதன் மூலம் நிருபிக்கப்பட்டுள்ளது.

2020ஏப்ரல் 8 மற்றும் ஜூன் 22ஆம் திகதிகளில்   மத்திய வங்கி வெளிநாட்டுப் இருப்புக்களிலிருந்து 1,007 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் வெளிநாட்டுக் கடனுக்காகச் செலுத்தியமையால் ஏற்பட்ட 5-7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அந்நியச் செலாவணி கையிருப்பு வெளியேற்றம் தற்போதைய நெருக்கடியை மோசமாக்கியுள்ளமையுடன்  பணநிரம்பலையும் அதிகரிக்க முடியாமால் போய்விட்டது. 

இந்நிலைமை நாட்டை பாரிய எரிபொருள் பற்றாக்குறைக்கு இட்டுச்சென்றுள்ளதுடன்தினசரி மின்வெட்டு, உணவு, மருந்துகள், சீமெந்து மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையையும் ஏற்படுத்தியுள்ளது.  

வெளிநாட்டு கையிருப்பு குறைவடைவதன் மற்றொரு தாக்கம் சர்வதேச மதிப்பீட்டு நிறுவனங்களிடையே இலங்கையின்; இறையாண்மை மதிப்பீடுகள் குறைவடைந்து முதலீட்டாளர்களை பாதித்துள்ளது. அதாவது கடன் சேவையை செலுத்துவதிலுள்ள தாமதம் காரணமாக நாடு அதிக அபாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதால், இலங்கையில் முதலீடு செய்வதில் முதலீட்டாhளர்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர்.

2019இல் நடைமுறைப்படுத்தப்பட்ட வரிக்குறைப்பு வரி வருமானத்தைக் குறைவடையச்செய்தமை பிரச்சினைகளை மேலும் தீவிரப்படுத்தியது. குறிப்பாக பெறுமதி சேர் வரி 15சதவீதத்திலிருந்து 8சதவீதமாகக் குறைக்கப்பட்டதோடு ஏனைய மறைமுக வரிகளான தேசத்தை கட்டியெழுப்பும் வரி, சம்பாதிக்கும் வரி மற்றும் பொருளாதார சேவை கட்டணங்கள் என்பன நீக்கப்பட்டன. 

நிறுவன வரி 28 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இந்த வரி குறைப்புகளால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 3முதல் 4 சதவீத வருமானத்தை இழக்கச் செய்திருந்தன.  வங்கிகளில் வெளிநாட்டு நாணய பற்றாக்குறை காரணமாக இறக்குமதியாளர்கள் கடன் கடிதம் பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்கினர். இது பல கொள்கலன்களை துறைமுகத்தில் தேக்கமடையச் செய்தமையும் பொருட்பற்றாக்குறையை ஏற்படுத்தி விலை அதிகரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சாத்தியமான தீர்வுகள்

வருமானங்களை  விட இறக்குமதிக்காக செலவு அதிகரித்தமை தற்போதைய அந்நிய செலாவணி கையிருப்பு நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளது.

ஆகவே அரசாங்கம் இறக்குமதி செலவினங்களைக் குறைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். 

கடனை மேலும்; நிலையானதாக மாற்றுவதற்கு அரசாங்கம் நிதி சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். விருத்தி முறையடிப்படையில் உள்நாட்டு வரி வருமானத்தை உயர்த்தக்கூடிய செயற்பாடுகள் குறிப்பாக வரிகளை அதிகரிப்பதனூடாக வரி வருவாயை அதிகரிக்க வேண்டும்.

இதற்கான வழிமுறையாக இலங்கையின் உயர் வருமானப்பிரிவினர் அதிகளவு வரிகளை செலுத்தக் கூடியவகையில்; வரிக்கட்டமைப்பு மறுசீரமைக்கப்பட வேண்டும்.

செலவினப் பக்கத்தில், அரசாங்கத்தால் ஓரளவிற்கு கட்டுப்படுத்தக்கூடிய செலவினங்கான பொதுத்துறையின் சம்பளம் மற்றும் ஊதியங்களை  நெருக்கடியின் மோசமான நிலையில் இருந்து வெளிவரும் வரை முடக்குவதன் மூலம் அரச செலவீனங்களை குறைத்துக் கொள்ள முடியும்.      

அரசாங்கம் பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து தொடர்ச்சியாக கடன்களை பெற்றுக்கொண்டதோடு நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளது. எனவே கடன் வாங்குவதைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, குறிப்பாக இறையாண்மைக் கடன்களை பெற்றுக்கொள்வது குறித்து கவனம் செலுத்தப்படலாம்.  

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவில் இருந்து பொருளாதாரத்தின் முதுகெலும்பான ஏழை மக்களைப் பாதுகாக்க சமூக இலக்கு நோக்கிய பாதுகாப்பு வலைத்திட்டத்தை செயல்படுத்துவது இன்றியமையாதவொன்றாகும். 

அதேநேரம் நிதிச் சீராக்கத்தினூடாக சமூக மேந்தலைச் செலவுகள் முக்கியப்படுத்தப்பட வேண்டும். அதாவது  தொழிலாளர்களின் பெரும்பகுதியாகிய ஏழைமக்களுக்கு சமூகப் பாதுகாப்பு அல்லது ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்.

அவர்கள் முறைசாரா துறையில் தினகூலிகளாகக் காணப்படுவதால் அவர்கள் பொருளாதார அதிர்ச்சிகளால் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களாகக் காணப்படுவதோடு கொரோனா தாக்கத்திற்குள்ளாக்கப்பட்டவர்களாகவும் காணப்படுகின்றனர். 

செயற்படுத்துவதற்கு இவை மிகவும் கடினமாகக் இருப்பினும் நெருக்கடியைக் குறைப்பதற்கு சாத்தியமானதொரு வழியாகக் காணப்படுகின்றது.

சலுகைகள் மற்றும் மானியங்களின் நிர்வாகத்தை மறுசீரமைக்க தீவிர பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

வெளிநாட்டு பணம் அனுப்பல்களின் வரவை மேம்படுத்துதல் வேண்டும். இதற்காக அரசாங்கம் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரியும் ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை நிறுவுதல்; மற்றும் வெளிநாட்டினருக்கான சாதாரண மாற்று விகிதத்தை விட ஒரு டொலருக்கு இலங்கைக்கு 2ரூபா செலுத்தும் கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.  

இலங்கையின் சுற்றுலாத் துறையை வலுப்படுத்துவதற்காக செயற்பாடுகளை துரிதப்படுத்தல் வேண்டும்.  வர்த்தக சமூகம், வெளிநாட்டு நேரடி முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்களிடையே நம்பிக்கை உருவாக்கப்பட்டு கவர்ச்சிகரமான செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தும் போது  அவை  பெரும்பாலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வழிவகுக்கும்.

சர்வதேச நாணய நிதியத்திடம் ((IMF) உதவி கோருவதற்கான செயற்பாட்டை துரிதப்படுத்துவதோடு அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தலும் ஊழலை இல்லாதொழித்தலும் அவசியமாகும். 

ரூபாயின் மிதவை முதலில் ஏற்றுமதியாளர்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தியிருப்பினும், அமெரிக்க டொலர்களுக்கு எதிராக 300ரூபாவைக் கடந்தமை, கட்டுப்பாட்டை மீறிவிட்டது.

பரிமாற்ற விகிதங்களின் இவ்வோட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான அல்லது கண்காணிப்பதற்கான வழிமுறைகள் கொண்டுவரப்பட வேண்டும்.  

நாணய மாற்று சதவீதத்தை ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வருவதற்கு பணவியல் கொள்கை, நாணயமாற்றுவீதக் கொள்ளை மற்றும் நிதிக்கொள்கை ஆகிய மூன்றையும் ஒரேநேரத்தில் சீரமைப்பதினூடாக பொருளாதார மேம்பாட்டினை ஏற்படுத்த முடியும்.

இதற்குச் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை அடிப்படையிலான நிதியினைப் பெறுவதற்குப்பதிலாக நிதிச் சீராக்க நடவடிக்கையினூடாக வரிகளை உயர்த்தி, செலவினங்களை வரையறை செய்து, மானியங்களைக் குறைக்கப்பட வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் ஒரு பகுதியாக அரசுக்குச் சொந்தமான நிறுவன சீர்திருத்தங்கள் அதாவது தொழிலாளர் மற்றும் நிலச் சீர்திருத்தங்கள் போன்ற கட்டமைப்பு சீர்திருத்தங்களை ஏற்றுக் கொண்டாலும், சீர்திருத்தத் திட்டத்தின் மிகைச் சுமையை கவனத்தில் கொண்டு பேரினப்பொருளாதார உறுதித்தன்மைக்கு முன்னுரிமை வழங்குவது மிகவும் பொருத்தமானதாகக் காணப்படும்.     

இலங்கையின் தற்போதைய பாரிய பொதுபடு கடன் அதிகரிப்பு, நீண்ட காலப் பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு பாரிய தடைக்கல்லாகும் என்பதை பல்வேறு பொருளாதார நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள்;.

சில நீடித்த கடன் நிலைத்திருப்புச் செயல்முறைக்கு உட்படின், அது பொருளாதார மீட்சிக்கு ஆதரவான நிதியை விடுவிக்கும்.

ஆனால் கடன் வழங்கியவர் இந்நன்மை தீமைகள் அனைத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும், மேலும் இந்த செயல்முறையின் செலவு நன்மைகள் குறித்து அரசாங்கம் முடிவு செய்ய வேண்டும்.  

வெளிநாட்டு இருப்புக்களின் பாரிய பற்றக்குறை மத்திய வங்கியின் பணவெளியீட்டுக்கு வழிவகுத்தோடு பணவீக்கத்தையும் தூண்டியுள்ளது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய வங்கி வட்டி வீதங்களை உயர்த்தியுள்ளது. பணவீக்கக் அதிகரிப்பு பரிமாற்ற விகிதத்தை மிகைப்படுத்தும்.

அங்கு உயர் ஊக நடத்தை காணப்படும். மாற்று விகிதத்தில் ஓரளவு நம்பிக்கையையும் ஸ்திரத்தன்மையையும் பேணுவதற்கு சுமார் 8 பில்லியன் டொலர்கள் இருப்புக்கள் மீண்டும் உருவாக்கபப்ட வேண்டும். 

மத்திய வங்கி மாற்று விகிதத்தை படிப்படியாக குறைவடைய அனுமதிக்காது சடுதியாக குறைவடையச் செய்தமை முதலீட்டாளர்களின் நிச்சயமற்ற தன்மையை அதிகரித்துள்ளது.

ஆகவே முதலீடுகளைக் கவர்ந்து உற்பத்திகளை அதிகரிப்பதற்கு முதலில் நாணய மாற்றுவிகித உறுதித்தன்மையை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்றிட்டம் நாட்டிற்கு அதிக பணத்தை கொண்டு வரும். மேலும் ஏனைய நன்கொடையாளர்களான ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் பிற இருதரப்பு நன்கொடையாளர்களிடமிருந்தும்.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் இலங்கையில் சீர்திருத்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் என்ற நம்பிக்கையை சர்வதேச சமூகத்தினுள் காணப்படுவதால் அது தொடர்பாகவும் கவனம் செலுத்த முடியும்.

ஆகவே நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியானது தனித் ஒரு காரணத்தினால் மாத்திரமன்றி பல்வேறு காரணிகளின் தொடர்ச்சியான ஒரு கூட்டுக் கலவையாகயும் குறிப்பாக பொருளாதார வல்லுநர்களின் ஆலோசனைகளை கவனத்தில் கொள்ததளாலும் ஏற்பட்டவொரு பாரிய அவலமாகவே காணப்படுகின்றது. 

இருப்பினும் நெருக்கடி தீவிரமடைந்துள்ளபோதிலும் அவற்றை முகாமைசெய்வதற்கான முன்வைக்கப்பட்ட சாத்தியமான ஆலோசனைகளுக்கு கவனம் செலுத்துவதன் மூலம் தற்போதைய நெருக்கடி நிலைமையினை குறைப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்கமுடியும்.