எம்.எஸ்.தீன் 

முஸ்லிம் கட்சிகளின் அரசியல் எந்த திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது என்பதனை யாராலும் உணர்ந்து கொள்ள  முடிவதில்லை.

கட்சிகளின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களின் தனிப்பட்ட அபிலாஷைகளுக்கு ஏற்றவாறு முடிவுகளை எடுத்துக் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 

முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் தேர்தலில் வெற்றி பெறவேண்டும். அரசாங்கத்தின் பங்காளியாக இருக்க வேண்டுமென்பதனைத் தவிர வேறு சிந்தனைகள் கிடையாது.

இதற்காக தமது நடவடிக்கைகள் யாவற்றையும் சமூகத்தின் பேரால் செய்து கொண்டிருக்கின்றார்கள். 

தேர்தல் வெற்றிக்காக யாரை விமர்சனம் செய்கிறார்களோ பின்னர் அவர்களுடன் கூட்டு வைத்துக் கொண்டு செயற்படுவார்கள்.

இதில் கேவலம் என்னவென்றால் தேர்தல் காலத்தில் படுமோசமாக விமர்சனம் செய்தவர்களை சமூகத்தின் பாதுகாவலர்கள் என்பார்கள். 

இத்தகையதொரு நிலைப்பாட்டை மொட்டுக்கட்சியுடன் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்படுத்திக் கொண்டு கூட்டுறவைக் குறிப்பிடலாம்.

முஸ்லிம்களின் உரிமைகளை வெற்றி கொள்ளப் போகின்றோம். நமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்யப்போகின்றோம் என்று சொல்லியே ஆட்சியாளர்களுடன் இணைந்து கொண்டார்கள்.

ஒரு சில நாட்கள் அமைச்சர் பதவிகளிலும் இருந்தார்கள்.

இவர்களினால் முஸ்லிம் பிரதேசங்கள் அடைந்து கொண்ட பாரிய அபிவிருத்திகள் எதுவுமில்லை. சில வீதிகளை மாத்திரம் புனரமைப்பு செய்துள்ளார்கள்.

அரசாங்கத்திடம் போதிய நிதி வசதிகள் கிடையாது. மக்களுக்கு அடிப்படை தேவைகளை நிறைவு செய்து கொடுப்பதற்கே அரசாங்கம் தடுமாறிக் கொண்டிருக்கின்றது. 

இந்தநிலையில்தான் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டார்கள். இவர்களின் இணைவை வாக்களித்த மக்கள் கூட ஏற்றுக் கொள்ளவில்லை. கண்களை மூடிக் கொண்டு அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுத்தார்கள்.

20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கும், இந்த நாட்டில் மிகப் பெரிய அளவில் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் ஏற்படுவதற்கும் காரணமாக இருந்தார்கள் பட்டியலில் இணைந்து கொண்டாhகள்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளினால் ஆட்சியாளர்களின் மீது மட்டுமல்ல பாராளுமன்றத்தில் அனைத்து மக்கள் பிரதிநிதிகளின் மீதும் நாட்டு மக்கள் பெரும் கோபத்தில் உள்ளார்கள்.

இவர்களை மீண்டும் தெரிவு செய்யக் கூடாதென்றும் ஆர்ப்பாட்டங்களை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்தப் பின்னணியில் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேர்தல் அச்சம் ஏற்பட்டுள்ளது. அடுத்து தேர்தலில் நாம் தோல்வியடைந்து விடக்கூடாதென்று இப்போதே திட்டமிட்டுள்ளார்கள்.

ஆட்சியார்களை விட்டுப் பிரிய முடியாது. பிரிவது முஸ்லிம்களுக்கு ஆபத்து என்று ஆர்ப்பரித்தவர்கள். 

எந்தவொரு ஆர்ப்பரிப்பும் இல்லாது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸாவை சந்தித்துள்ளார்கள். இதற்கு முன்னாக ஆட்சியாளர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்ற ஒத்துழைப்பை வாபஸ் வாங்கிக் கொள்வதாகவும் அறிவித்தார்கள். சஜித்தை சந்தித்தவர்கள் எவற்றை பேசினார்கள் என்பது முழுமையாக வெளிவரவில்லை. 

ஆயினும், தாங்கள் எதிர்க்கட்சித் தலைவருடன் இணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள். இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ், இஸாக் ரஹ்மான், எம்.எஸ்.தௌபீக் ஆகியோர்கள் பங்கு கொண்டனர்.

தாம் மக்களின் மக்களின் பக்கம் நின்று இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்கள். ஆட்சியாளர்களினால் மக்கள் துன்பப்படுகின்ற போது அதற்கு எதிராக குரல் கொடுக்க சக்தியில்லாதவர்கள் மக்களின் பக்கம் இருப்பதாக தெரிவித்துக் கொண்டிருப்பது மக்களை ஏமாற்றுவதற்கு போடுகின்ற மற்றுமொரு அத்திவாரமாகும். 

முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களாயினும், பாராளுமன்ற உறுப்பினர்களாயினும் அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் விமோசனத்திற்கு எந்தவொரு அரசியல் உடன்பாடுகளையும் ஆளுந்தரப்பினருடன் செய்து கொள்ளவில்லை என்பதே தொடர்ந்து கொண்டிருக்கின்ற அரசியலாகும்.

தங்களின் வியாபாரங்களையும், வேறு தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வதற்கும், அதற்காகவே ஆளுந் தரப்பினருக்கு ஆதரவுகளை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஆளுந் தரப்பினருடன் தொடர்ந்து இருந்தால் அடுத்து தேர்தலில் நாம் தோல்வியடைந்துவிடுவோம் என்ற அச்சம் ஏற்பட்டதும் பல்டி அடித்துக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவருடன் இணைந்துள்ளார்கள்.

முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளுந் தரப்பினருடன் இணைந்து கொண்ட போது ஐக்கிய மக்கள் சக்தியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

எதிர்காலத்தில் எக்காரணம் கொண்டு இந்த பாராளுமன்ற உறுப்பினர்களை ஐக்கிய மக்கள் சக்தி இணைத்துக் கொள்ளாது என்றும் சூளுரைத்தார்கள். முஸ்லிம் கட்சிகளும் ஒழுக்காற்று நடவடிக்கை என்றதொரு நாடகத்தையும் அரங்கேற்றியது.

இந்த பின்னணியில் சஜித் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடியமை எதிர்க்கட்சியின் அரசியல் தேவைக்காகவேயாகும். ஆளுந் தரப்பினருக்குரிய ஆதரவைக் குறைப்பதற்காகவே என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆகவே, அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் நாட்டைப் பற்றியோ, மக்களைப் பற்றியோ, சமூகத்தைப் பற்றியோ சிந்திப்பதில்லை.

அவர்களின் அரசியல் வெற்றி, சொத்துக்களை சேர்த்துக் கொள்வதற்குமாகவே முடிவுகளை எடுத்துக் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

நாடு பல நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு தனியே இன்றைய ஆட்சியாளர்களை மாத்திரம் குற்றம்சாட்ட முடியாது. இவர்களின் காலத்தில் அதிக மோசடிகள் நடைபெற்றுள்ளன.

மோசமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளன. பணவீக்கம் அதிகரித்துள்ளது. கடனை செலுத்த முடியாத நாடு என்ற அவப் பெயரையும் சம்பாதித்துள்ளார்கள்.

ஆயினும், இதற்கு முதல் இருந்த ஆட்சியாளர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் மாத்திரமல்ல மக்களும் இன்றைய நிலைக்கு காரணமாக இருந்துள்ளார்கள் என்பதே யதார்த்தமாகும். நாடு நெருக்கடியான நிலைக்குள் மாட்டியுள்ள இன்றைய சூழலில் நாட்டை மீட்டு எடுப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இதற்கு அரசியல் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டும். அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் பெற்றுக் கொண்டிருக்கின்ற பல சிறப்பு சலுகைகளை இரத்துச் செய்ய வேண்டும்.

மக்கள் வறுமையில் கஸ்டப்படும் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் குறைந்த விலையில் எதனையும் கொடுக்கக் கூடாது. நாட்டை சீரழித்தவர்களுக்கே எல்லா வசதி வாய்ப்புக்களும் வழங்கப்படுகின்றன.

அவர்களுக்கு வரிசையில் நின்று பொருட்களை வாங்கிய வலி தெரியாது. எல்லாவற்றையும் அரசாங்கத்தின் பணத்தில் இலவசமாகவும், மானியமாகவும் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. 

நெருக்கடியான நிலையில் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும், அவர்களின் அல்லக்கைகளும் அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தமக்கு போட்டியாக வரக் கூடியவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன் வைத்துக் கொண்டு முகநூலில் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 

இந்த நடவடிக்கை பாராளுமன்ற உறுப்பினர்களின் அனுசரனையுடன் நடந்து கொண்டிருக்கின்றன. கடந்த காலங்களில் மக்களிடம் ஆட்சியாளர்களைப் பற்றியும், தமது அரசியல் எதிரிகளைப் பற்றியும் குற்றச்சாட்டுக்களை மாத்திரமே முன் வைத்து செயற்பட்டார்கள்.

இந்த கலாசாரத்தை முஸ்லிம் அரசியலில் இருந்து முற்றாக இல்லாமல் செய்ய வேண்டும். அப்போதுதான் ஓரளவுக்கு சிறந்தவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பலாம்.