பஷிலை பாதுகாப்பதை விடுத்து பொதுஜன பெரமுனவினர் மக்களின் நிலைப்பாட்டிற்கமைய செயற்பட வேண்டும் - வாசுதேவ 

By T Yuwaraj

22 May, 2022 | 07:45 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பு திருத்தம் குறித்து நாட்டு மக்கள் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள். 20ஆவது திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்படாவிடின் சமூக கட்டமைப்பில் மீண்டும் பாரியதொரு நெருக்கடி நிலைமை தோற்றம் பெறும்.'அமெரிக்க பிரஜை இலங்கை பிரஜைகளை வீதியில் தள்ளியுள்ளார்'.

Articles Tagged Under: அமைச்சர் வாசுதேவ நாணயக்கார | Virakesari.lk

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பஷில் ராஜபக்ஷவை பாதுகாக்கும் நோக்கத்தை விடுத்து தம்மை தெரிவு செய்த மக்களின் நிலைப்பாட்டிற்கமைய செயற்பட வேண்டும் என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடி தீவிரமடைவதற்கு முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ பொறுப்புக்கூற வேண்டும்.

அரசாங்கம் கொள்கைக்கு முரணாக செயற்பட்ட காரணத்தினால் அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படுகிறோம்.

பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில் நாட்டு மக்கள் அரசியலமைப்பு திருத்தம் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருகிறார்கள்.

அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நிற்கும் மக்கள் 'அமெரிக்க பிரஜை இலங்கை பிரஜைகளை வீதியில் தள்ளியள்ளார்'என கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

இரட்டை குடியுரிமையுடைவர் அரசியலில் செல்வாக்கு செலுத்த அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் அனுமதி வழங்கப்பட்டது.இரட்டை குடியுரிமை விவகாரத்திற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினோம்.

புதிய அரசியலமைப்பு ஊடாக இரட்டை குடியுரிமை விவகாரத்திற்கு சாதகமான தீர்வு எட்டுப்படும் என ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை தொடர்ந்து 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவு வழங்கினோம்.புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றவில்லை.

இரட்டை குடியுரிமையுடையவர் அரசியலில் செல்வாக்கு செலுத்துவது முழுமையாக இரத்து செய்யப்பட வேண்டும் என நாட்டு மக்கள் வலியுறுத்துகிறார்கள்.

சாதாரண மக்களும் அரசியலமைப்பு திருத்தம் குறித்து அதிக கவனம் செலுத்துகிறார்கள்.ஆகவே மக்களை ஏமாற்றும் வகையில் அரசியல் சூழ்ச்சிகளை முன்னெடுக்க முடியாது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்திற்கு முழுமையாக ஆதரவு வழங்க வேண்டும்.

முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவை பாதுகாக்கும் வகையில் செயற்படுவதை விடுத்து தம்மை தெரிவு செய்த மக்களின் நிலைப்பாட்டிற்கமைய பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் செயற்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right