அந்த மாற்றம் வராது ! ஏனென்றால்…

Published By: Digital Desk 5

27 May, 2022 | 11:28 AM
image

-ஏ.எல்.நிப்றாஸ்-

‘நாம் நினைக்கின்ற மாற்றம் வருமா? என்று இப்போதெல்லாம் பலரும் கேட்கின்றார்கள். புதிய பிரதமர் பதவியேற்று, அமைச்சர்கள் சிலரும் நியமிக்கப்பட்ட பிறகும் இந்தக் கேள்வி இன்னும் ஓய்ந்தபாடில்லை. 

“அரசியல் முறைமையில் நம்பிக்கை தரும் ஏதாவது நல்ல மாற்றம் சாத்தியமா?” என்று என்னிடம் தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டே இருந்த ஒருசில நண்பர்களுக்கு நான் சொன்ன பதில், “அந்த மாற்றம் வராது” என்பதுதான். 

அதாவது. இப்போது புதிய பிரதமரை நியமித்தது போல, புதிய அமைச்சரவை பதவியேற்றதைப் போல சிறுசிறு மாற்றங்கள் நிகழலாம். ஒருவேளை தேர்தல் ஒன்று நடைபெற்று அரசாங்கமும் ஒட்டுமொத்தமாக மாறலாம். 

ஆனால், அதுவெல்லாம், இப்போது நடப்பதைப்போன்று ‘புதிய மொந்தையில் பழைய கள்ளை ஊற்றி வைக்கின்ற’ வேலையாக இருக்குமே தவிர, இலங்கைச் சூழலில் அரசியல் முறைமை மாற்றம் ஒன்று கிட்டிய காலத்தில் சாத்தியம் இல்லை என்பதே மேற்படி பதிலின் உள்ளர்த்தமாகும். 

ஏனென்றால், ஆட்சியாளர்கள் திருந்த வேண்டும். அரசியல்வாதிகள் மாறவேண்டும் என்று தான் மக்கள் பொதுவாக நினைக்கின்றார்களே தவிர, பொதுமக்கள் மாற வேண்டும்,  மாற்றத்திற்காக முன்னிற்க வேண்டும் என்ற எண்ணம் ஒருசொற்ப அளவானவர்களுக்கே ஏற்பட்டிருக்கின்றது. ஏனைய 95 % சதவீதத்திற்கு அதிகமான மக்களின் மனவோட்டம் வேறுவிதமானது. 

மாற்றத்தை யாராவது கொண்டு வரவேண்டும்;. யாராவது உயிரைக் கொடுத்துப் போராடி இந்த கட்டமைப்பு மாற்றத்தை நிகழ்த்த வேண்டும். நம்மால் போக முடியாது. நமக்கு வேறு முக்கிய வேலை இருக்கின்றது. அல்லது இது நமது வேலையில்லை. யாராவது அதனைச் செய்து முடித்தால் பலன் நமக்கும் கிடைக்கும் தானே என்று எண்ணுகின்றார்கள். 

உண்மையில், மாற்றம் எல்லா மட்டத்திலும் ஏற்பட வேண்டும். மேல்மட்டத்தில் மட்டுமன்றி அடிமட்டத்திலும் அது நடக்காத வரை நமது கற்பனையில் உள்ள இலங்கையை கனவில் மட்டும் தான் காண முடியும். 

இலங்கையரான நாம் ஜனாதிபதியையும், பிரதமரையும் குற்றம்சாட்டுகின்றோம். ‘ஆட்சியாளர்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும்’ என்று  கூறுகின்றோம். அது நியாமானதே. ஆயினும். நாம் வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினரை, பிரதேச சபை உறுப்பினரை அவர் செய்த தவறுக்காக எப்போதாவது சந்தியில் நிறுத்தி கேள்வி கேட்குமளவுக்கு நம்முள் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றதா? சமூக அக்கறையற்ற எம்.பி.க்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென நினைத்ததுண்டா? 

தொழிலுக்காக கையூட்டல் கேட்கின்ற, செயற்றிட்டங்களுக்காக தரகு தர வேண்டுமென ஒற்றைக்காலில் நிற்கின்ற, அதேநேரம் தொலைபேசி அழைப்புக்களுக்கோ மக்களது கேள்விகளுக்கோ பதிலளிக்காத அரசியல்வாதிகளுக்கு (அதிலும் குறிப்பாக முஸ்லிம் எம்.பி.க்களுக்கு) எதிராக பொதுமக்கள் எழுந்து நின்றதை எங்காவது கேள்விப்பட்டதுண்டா? 

அரசியல்வாதிகளுக்கு கூஜா தூக்குகின்ற மதத் தலைவர்களோ அல்லது மதஸ்தல நிருவாகங்களோ  அமைச்சுப் பதவிகளுக்காகவும் பணத்திற்காகவும் சோரம் போகின்ற அரசியல்வாதிகளை தட்டிக் கேட்டதுண்டா? சமூகத்திற்கு எதிராக செயற்படுகின்ற அரசியல்வாதிகளுக்கு எதிராக (குறிப்பாக முஸ்லிம் மத கட்டமைப்புக்கள்) நடவடிக்கை எடுக்கின்ற மாற்றம் எப்போதாவது நிகழ்ந்திருக்கின்றதா? 

பணத்திற்காகவும், கட்சிப் பாடலுக்காகவும், ‘அவரை விட்டால் வேறு ஆள் இல்லை’ என்பதற்காகவும், ஊருக்கு எம்.பி. வேண்டும் என்பதற்காகவும் பொருத்தமற்ற அரசியல்வாதிகளுக்கு திரும்பத்திரும்ப வாக்களிக்கின்ற கலாசாரம் மக்களிடையே மாறியிருக்கின்றதா? அல்லது, தலைவர் எது செய்தாலும் சரி என நம்புகின்ற முட்டாள்தனமான கட்சி ஆதரவாளர்களும், மூளைக்கும் வாய்க்கும் தொடர்பில்லாத பேஸ்புக் போராளிகளும் தம்மை மாற்றிக் கொண்டுள்ளார்களா? 

‘அவர்கள் கள்வர்கள்’ என்று சொல்கின்றோம். ‘நாட்டைக் கொள்ளையடித்து விட்டார்கள்’ என்று விமர்சிக்கின்றோம். அதுவெல்லாம் இருக்கட்டும். நம்மைச் சுற்றி ஒவ்வொரு ஊரிலும் உள்ள வெளிச்சத்துக்கு வந்த, வெளிச்சத்திற்கு வராத பலவிதமான, ரக ரகமான கள்வர்களை எல்லாம் நாம் தண்டித்திருக்கின்றோமா, அல்லது அவர்கள் மாறியிருக்கின்றார்களா? என்ற கேள்விக்கு விடையென்ன!

இந்த நெருக்கடியான காலத்தில் பால்மா, எரிவாயு, எரிபொருள் உள்ளடங்கலாக அத்தியாவசியப் பொருட்களை பதுக்குகின்ற வியாபாரிகளை சட்டப்படி தண்டிக்க நாம் முன்வந்திருக்கின்றோமா? 

அரச சேவையில் இருந்து கொண்டு மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு துணை போகின்ற சில பாதுகாப்பு துறைசார் அதிகாரிகள், நிர்வாக அதிகாரிகள் திருந்தியிருக்கின்றார்களா? இலஞ்சம் வாங்குகின்ற அரச உத்தியோகத்தர்கள், பொலிஸார் மற்றும் ஒப்பபடுமிடும் அதிகாரமுள்ள உத்தியோகத்தர்களை திருத்துவதற்கு, குறிப்பாக முஸ்லிம்களும் தமிழர்களும் முயற்சி செய்ததுண்டா? 

அரச அலுவலகங்களில் கடமையைச் சரியாகச் செய்யாதவர்கள், மக்களை அலைக்கழிக்க முற்படுகின்றவர்கள், கடமையாற்றாதவர்கள் அவ்வாறே இருந்து விகன்றார்கள். 

ஏதாவது ஒரு காரணத்திற்காக ஆர்ப்பாட்டம் என்றால், எத்தனை பேர் களத்திற்கு வருகின்றார்கள்? குறிப்பாக ஒரு ஹர்த்தால் அல்லது வேலை நிறுத்தம் என்றால், அநேகமான அரச, தனியார் ஊழியர்கள் ‘நாம் இதில் மாட்டிக் கொண்டால், தொழிலுக்கு ஆபத்து’ என்றுதான் நினைக்கின்றார்கள். 

பாடசாலையில் மாணவர்களுக்கு மனச்சாட்சிப்படி முறையாக கற்பிக்காமல், பிரத்தியேக வகுப்பிற்கு வரச்சொல்லி நியாயமற்ற முறையில் பணம் கறக்கின்ற டியூசன் கடைக்கார ஆசிரியர்கள், சர்வதேசக் கல்வி என்ற பெயரில் கல்வியை புதியபொதியில் சந்தைப்படுத்தும் வியாபாரிகளை நமது சமூகம் எப்போதாவது சட்டையைப் பிடித்து கேள்வி கேட்டதுண்டா? அத்துடன், வலுக்கட்டாயமாக நன்கொடை அறவிடும் பாடசாலைகளுக்கு எதிராக நாம் என்ன செய்திருக்கின்றோம்? 

களவாக காணிகளை கையகப்படுத்துவோர், போதைப் பொருள் வியாபாரிகள், மாபியா வர்த்தகம் செய்வோர், வரி ஏய்ப்பு செய்யும் பெரும் புள்ளிகள், பயிர்களை மேயும் வேலிகள் என எத்தனையோ ரகமான தரப்புக்கள் ஒவ்வொரு சமூகத்திற்குள்ளும் உள்ளனர். இவர்களை தண்டிக்க, தடுத்துநிறுத்த இதுவரை நாம் என்ன முயற்சி செய்துள்ளோம்?

குறைந்தபட்சம், அரசாங்கமும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளும் தவறிழைக்கின்றார்கள் என்றால், அதற்கு அடிப்படைக் காரணம் நாம் கடந்த காலத்தில் தட்டிக்கேட்காமல் விட்ட தவறுதான் என்பதையாவது இலங்கையில் வாhழும் அனைத்து இன, மதக் குழுமங்களையும் சேர்ந்த மக்கள் புரிந்து கொண்டு, மாற்றத்தை ஏற்படுத்தும் மனநிலைக்கு வந்திருக்கின்றார்களா? 

இப்படி இன்னும் ஆயிரத்தெட்டு கேள்விகள் உள்ளன. இந்தக் கேள்விகளில் அநேக கேள்விகளுக்கு “இல்லை’’ என்பதுதான் உண்மையான விடையாகும். மேலும் ஒரு சில வினாக்களுக்கு என்ன விடை கூறுவது என்றே நமக்குத் தெரியாது. ஏனெனில் அதுபற்றி நாம் எப்போதும் சிந்தித்தது கூட தெரியாது. யார் என்ன சொன்னாலும் இதுதான் யதார்த்தமாகும்;. 

மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் கனவு தேசம், ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கு ஆட்சி முறைமை மாற்றமொன்று அவசியம். அதற்கு ஆட்சியாளர்கள் மற்றும் ஆட்சிக் கட்டமைப்பில் சட்ட ரீதியான, பௌதீக ரீதியான மறுசீரமைப்புக்கள் அவசியம். அத்துடன், அரச தலைவர்கள், ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களின் நடத்தைக் கோலங்களிலும் அரசியல் கலாசாரத்திலும் முற்றுமுழுதான மாற்றம் நிகழ்ந்தாக வேண்டும். 

ஆனால், அவர்கள் மாறினாலோ அல்லது அவர்களது அரசியல் அணுகுமுறை மாறினாலோ மட்டும் போதாது என்பதைத்தான் இந்தப் பத்தி வலியுறுத்துகின்றது. ஒவ்வொரு பொதுமகனும் தன்னோடு தொடர்புபட்ட ஒவ்வொரு விடயங்களிலும் மாற்றத்தைக் கொண்டுவர முன்வர வேண்டியது அடிப்படையானது. அது  நடக்காத விடத்து நாம் நினைத்த எந்த மாற்றமும் ‘ஏட்டுச்சுரக்காயாகவே’ இருக்கும். 

இப்போது எமது நாட்டில் இடம்பெறுவதைப் போன்ற நகர்வுகளின் பயனாக பிரதமர் மாறியிருக்கலாம், எதிர்காலத்தில் ஜனாதிபதி மாறலாம், ஆட்சி மாறலாம், பொருளாதாரம் மீட்சி பெறலாம். அதற்கப்பால் எதுவும் நடக்கும் என்று நம்பிக் கொண்டிருக்க முடியாது.  

மக்களாகிய நாம் மாறாமல், திருந்தாமல், ‘அவர்கள்’ மாற வேண்டும் என்றும், ‘இவர்கள்’ அந்த மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right