(என்.வீ.ஏ.)
மும்பை வான்கடே விளையாட்டரங்கில் சனிக்கிழமை (21) நடைபெற்ற ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் டெல்ஹி கெப்பிட்டல்ஸை 5 விக்கெட்களால் வீழ்த்திய முன்னாள் சம்பியன் மும்பை இண்டியன்ஸ், இந்த வருட அத்தியாயத்தை வெற்றியுடன் முடித்துக்கொண்டது.

அப் போட்டி முடிவின் பலனாக றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் கடைசி அணியாக ப்ளே ஓவ் சுற்றில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டது.
ஜஸ்ப்ரிட் பும்ராவின் துல்லியமான பந்துவீச்சு, டிம் டேவிடின் அதிரடி துடுப்பாட்டம் என்பன மும்பை இண்டியன்ஸை வெற்றி வாகையுடன் விடைபெறச் செய்தன.

5ஆம் இலக்க வீரராக துடுப்பெடுத்தாட களம் புகுந்த டிம் டேவிட் எதிர்கொண்ட ஷர்துல் தாகூரின் முதலாவது பந்தில் பிடிக்கான கேள்வி ஒன்றை விக்கெட் காப்பாளர் ரிஷாப் பன்ட் ஆக்ரோஷமாக எழுப்பிய போதிலும் மத்தியஸ்தர் அதனை நிராகரித்தார்.
தனது பந்துவீச்சாளருடன் நீண்ட நேரம் கலந்தாலோசித்த பன்ட், மீளாய்வுக்கான 2 வாய்ப்புகள் இருந்தும் அதனைக் கோரவில்லை.

சலன அசைவுகளில் டிம் டேவிடின் துடுப்பில் பந்து பட்டு செல்வது தெளிவாக தென்பட்டது.
எவ்வாறாயினும் மத்தியஸ்தரின் அந்தத் தீர்ப்பும் ரிஷாப் பன்ட் மீளாய்வுக்கு செல்லாததும் மும்பை இண்டியன்ஸுக்கு திருப்புமுனையாக அமைந்தது.

அப் போட்டியில் 160 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுததாடிய மும்பை இண்டியன்ஸ் 19.1 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து குறிப்பிட்ட வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் தடுமாறிய அணித் தலைவர் ரோஹித் ஷர்மா 13 பந்துகளை எதிர்கொண்டு 2 ஓட்டங்கள் மாத்திரம் பெற்று 6ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். (25 - 1 விக்.)

எனினும் இஷான் கிஷான் (48), டிவோல்ட் ப்ரெவிஸ் (37) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்து மும்பைக்கு சிறு தெம்பை ஏற்படுத்தினர்.
அவர்கள் இருவரும 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழக்க 14.3 ஓவர்களில் மும்பையின் மொத்த எண்ணிக்கை 3 விக்கெட் இழப்புக்கு 95 ஓட்டங்களாக இருந்தது.

இதன்படி எஞ்சிய 33 பந்துகளில் மும்பையின் வெற்றிக்கு மேலும் 65 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
மத்தியஸ்தரின் தீர்ப்பால் முதல் பந்தில் தப்பிய டிம் டேவிட் 11 பந்தகளில் 4 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 34 ஓட்டங்களை விளாசி மும்பைக்கு வெற்றியை அண்மிக்கச் செய்தார்.

அவரும் திலக் வர்மாவும் (21) 4ஆவது விக்கெட்டில் 20 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
ராமன்திப் சிங் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ராமன்தீப் சிங் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்படட டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது.
டேவிட் வோர்னர் (5), மிச்செல் மார்ஷ் (0), ப்ரித்வி ஷா (24) ஆகிய மூவரையும் பவர் ப்ளேக்குள் இழந்தபோது டெல்ஹியின் மொத்த எண்ணிக்கை 31 ஓட்டங்களாக இருந்தது.

தொடர்ந்து சர்பராஸ் கான் (10) ஆட்டமிழக்க டெல்ஹி தடுமாற்றம் அடைந்தது. (50 - 4 விக்.)
அணித் தலைவர் ரிஷாப் பன்ட் (39), ரோவ்மன் பவல் (43) ஆகிய இருவரும் 5 விக்கெட்டில் 75 ஓட்டங்களைப் பகிர்ந்து டெல்ஹியை கௌரவமான நிலையை அடைய உதவினர்.

அக்சார் பட்டேல் 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் ஷர்துல் தாகூர் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அன்ரிச் நொக்யா 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இன்றுடன் லீக் சுற்று நிறைவு
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கும் பஞ்சாப் கிங்ஸுக்கும் இடையில் மும்பை வான்கடே விளையாட்டரங்கில் இன்று நடைபெறவுள்ள போட்டியுடன் ஐபிஎல் இருபது 20 லீக் சுற்று நிறைவடைகின்றது.
புள்ளிகள் நிலையில் 7ஆம், 8ஆம் இடங்களைத் தீர்மானிக்கும் போட்டியாக இது அமையவுள்ளது.
குஜராத் டைட்டன்ஸுக்கும் ராஜஸ்தான் றோயல்ஸுக்கும் இடையிலான முதலாவது தகுதிகாண் போட்டியுடன் ப்ளே ஓவ் சுற்று கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது.