சமூக வலைத்தளங்களில் வன்முறையை தூண்டிய 225 பேர் தொடர்பில் சி.ஐ.டி. விசாரணை

By Digital Desk 5

21 May, 2022 | 09:43 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டு வந்த எந்த கட்சியையும் சாராத அமைதி போராட்டக்காரர்கள் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மூர்க்கத்தனமாக நடத்திய தாக்குதலை தொடந்து நாடளாவிய ரீதியில் பதிவான வன்முறைகள், தீ வைப்புக்கள், சொத்து சேதப்படுத்தல் சம்பவங்கள் தொடர்பில் சிறப்பு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

 

இந் நிலையில் இவ்வாறான தீ வைப்புக்கள்,  சொத்து சேதப்படுத்தல் சம்பவங்களுக்கு  பல்வேறு சமூக ஊடக கணக்குகள் மற்றும் குழுக்கள்  பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும், அது குறித்து கிடைக்கப்பெற்றுள்ள 225 முறைப்பாடுகளை மையப்படுத்தி விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அறிய முடிகிறது.

 சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள பிரதிப் பொலிஸ்  மா அதிபர் டப்ளியூ. திலகரத்னவின் கீழ் செயற்படும்  கணினிக் குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் லகீ ரந்தெனியவின் கீழ் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த 225 பேரில் பாடகர்கள், நடிகர், நடிகைகள் பலரும் உள்ளடங்குவதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன.

 அவர்களுக்கு எதிராக  கணினிக் குற்றச் சட்டத்தின் கீழும்  குற்றவியல் சட்டத்தின் கீழும் சி.ஐ.டி.யின் கணினிக் குற்ற விசாரணைப் பிரிவினர்  விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

இந் நிலையில் வன்முறைகளுக்கு உதவி  ஒத்தாசை வழங்கியதாக கூறி  இவர்களில் பலர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. 

அதன் முதற்கட்டமாகவே, சி.ஐ.டி.யினரால் தொலைக்காட்சி தொகுப்பாளினி ஒருவர் உள்ளிட்ட மூவர் சி.ஐ.டி. யின் கணினிக் குற்றவிசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

இந் நிலையில்,  பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், பலர் தாம் பதிவிட்ட பதிவுகளை அழித்துள்ள நிலையில், அப்பதிவுகளை மீளப் பெற்று விசாரணை நடாத்தவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இந் நிலையில்  சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போதும், சமூக ஊடகங்களில் தகவல்களை பகிரும்போதும் அதன் உள்ளடக்கம் தொடர்பிலும் அதன் ஊடாக ஏற்படக்கூடிய குற்றங்கள் தொடர்பிலும் புரிதலுடன் செயற்படுமாறும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right