21 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த ராஜபக்ஷர்கள் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கமாட்டார்கள் - சம்பிக்க

By T. Saranya

21 May, 2022 | 10:19 PM
image

(இராஜதுரை ஹஷான்)

காலிமுகத்திடல் சம்பவத்தை தொடர்ந்தும் ராஜபக்ஷர்கள் குடும்பம் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத நிலைமையே ஏற்படும்.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைத்த ராஜபக்ஷர்கள் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கமாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று முன்தினம் இடம்பெற்ற 43 ஆவது படையணியின் ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாடு சுதந்திரம் பெற்ற காலத்தின் பின்னர் மிக மோசமான பொருளதார நெருக்கடியினை தற்போது எதிர்க்கொண்டுள்ளது. பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியினை தீவிரப்படுத்தி,முழு  சமூக கட்டமைப்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட வரையறையற்ற அரச முறை கடன்கள் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணியாக அமைகிறது.

2005 தொடக்கம் 2014 வரையான காலப்பகுதியில் அதிக வட்டிவீதத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட அரசமுறை கடன்களினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பணிகளினால் நாட்டுக்கு எவ்வித வருவாயும் கிடைக்கப்பெறவில்லை.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதே தவிர இலாபத்தை பெற்றுக்கொடுக்கவில்லை.

அரச முறை கடன்களை மீள் செலுத்த முடியாது என மத்திய வங்கி கடந்த மாதம் 12ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவித்ததை தொடர்ந்து இலங்கை வங்குரோத்து நிலைமையினை அடைந்து விட்டது என்பதை சர்வதேசம் விளங்கிக்கொண்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் சீனா வழங்கிய இருதரப்பு கடனை மீள பெற்றுக்கொள்ள அரசாங்கத்திற்கு பாரிய அழுத்தம் பிரயோகிக்கிறதை அவதானிக்க முடிகிறது.

அரச முறை கடன் மறுசீரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எவ்வாறு நட்பு நாடுகள் தொடர்ந்து இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும்.

இந்தியா தற்போது பல்வேறு வழிமுறைகளில் உதவி புரிந்த நிலையில் இருந்தாலும் அதனை தொடர்ந்து எதிர்பார்க்க முடியாது.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்விற்கு தேசிய மட்டத்தில் பல திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள கூடிய நிலையான அரசாங்கம் ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

சர்வக்கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க பிரதான எதிர்க்கட்சிகள் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புதிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

காலிமுகத்திடல் போராட்டத்தையும்,அதனுடனான வன்முறை சம்பவங்களை தொடர்ந்தும் ராஜபக்ஷர்கள் இன்னும் உரிய அரசியல் பாடத்தை கற்றுக்கொள்ளவில்லை.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கும் ராஜபக்ஷர்கள் தொடர்ந்து அழுத்தம் பிரயோகிக்கிறார்கள்.பிரதிசபாநாயகர் தெரிவு ஊடாக அதனை விளங்கிக்கொள்ள முடிந்தது.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை மீள அமுல்படுத்தவும்,21ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்தவும் ராஜபக்ஷர்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள்.

ராஜபக்ஷர்களின் தலையீடு இல்லாத அரசாங்கத்தினால் மாத்திரமே தற்போதைய பிரச்சினைகளுக்கு நிலையான சிறந்த தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right