(நா.தனுஜா)

நாடளாவிய ரீதியில் சுமார் 350,000 சிறுவர்களுக்கும், பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் 15,000 பேருக்கும் 3 மாதகாலத்திற்கு உணவுப்பொருட்களை வழங்கும் நோக்கில் ஜப்பான் அரசாங்கம் ஐக்கிய நாடுகள் உணவுத்திட்டத்தின் ஊடாக 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இலங்கைக்கு வழங்கியிருக்கின்றது.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் உலக உணவுத்திட்டத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை அரசாங்கத்திற்கு உதவும் வகையில் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்குவதாக ஜப்பான் அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. அந்த நிதியானது இலங்கையில் உதவி தேவைப்படும் சிறுவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு அவசியமான உணவுப்பொருட்களைப் பெற்றுக்கொடுப்பதற்காக ஐக்கிய நாடுகள் உலக உணவுத்திட்டத்தினால் பயன்படுத்தப்படும்.

இலங்கையானது பாரிய பொருளாதார நெருக்கடியின் காரணமாக வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது. அதன் விளைவாக உணவு உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதுடன், அவற்றின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளன. அதனால் நாட்டிலுள்ள பெரும்பாலான குடும்பங்கள் ஆரோக்கியமான உணவைப் பெற்றுக்கொள்ளமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. 

இலங்கையைப் பொறுத்தமட்டில் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலுக்கு முன்னரும் பெண்கள் மற்றும் சிறுவர்களின் மந்தபோசணைநிலை மிகவும் உயர்வாகவே காணப்பட்டது. 40 சதவீதமான சிறுவர்கள் அவர்களது உயரத்திற்கு ஏற்றவாறான எடையைக் கொண்டிருக்கவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் நாளாந்தம் சிறுவர்கள் குறித்தளவான சக்தியையும் அவசியமான போசணையையும் தொடர்ந்து பெற்றுக்கொள்வதை உறுதிசெய்யும் வகையில் அரச பாடசாலைகளில் இலவச உணவு வழங்குவற்கு ஜப்பானின் நிதியுதவி பயன்படுத்தப்படும். அதுமாத்திரமன்றி பின்தங்கிய குடும்பங்களுக்கு அவசியமான உணவுப்பொருட்களை விநியோகிப்பதற்கும் அந்த நிதியுதவி பயன்படுத்தப்படும்.

உரிய தரப்பினருக்கு அவசியமான போசணைத் தேவையை சரியான முறையில் பூர்த்திசெய்வதன் மூலம் தற்போது பொருளாதார நெருக்கடியின் விளைவாக நீண்டகால அடிப்படையில் ஏற்படக்கூடிய பாதகமான தாக்கங்களைக் குறைத்துக்கொள்ளமுடியும். அந்தவகையில் தற்போதைய நெருக்கடிநிலையில் ஜப்பான் வழங்கிய உதவியை நாம் பெரிதும் வரவேற்கின்றோம். 

இலங்கை மக்களுடனான தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியமைக்காக ஜப்பானுக்கு நன்றி கூறுகின்றோம். அத்தியாவசிய தேவை என்னவென்பதை மதிப்பீடுசெய்து, அதனடிப்படையில் அவசர உணவு உதவிகள் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக உணக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.

அதேவேளை இந்த நிதியுதவி தொடர்பில் இலங்கைக்கான ஜப்பான் தூதரக விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரி கட்சுகி கடரோ கூறியிருப்பதாவது:

உலக உணவுத்திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது. இதன்மூலம் நாடளாவிய ரீதியில் நகரங்கள் மற்றும் பின்தங்கிய பிரதேசங்களில் வசிக்கும் 15,000 பேருக்கும் சுமார் 380,000 சிறுவர்களுக்கும் அவசியமான அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட உணவுப்பொருட்களை 3 மாதகாலத்திற்கு வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. 

இந்த மனிதாபிமான உதவியானது இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்களுக்கான உணவுக்கிடைப்பனவு மற்றும் போசணை என்பன மேம்படுவதற்குப் பங்களிப்புச்செய்யும் என்று எதிர்பார்க்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.