(எம்.மனோசித்ரா)

பெரியம்மை நோயின் பரம்பரையலகினால் ஏற்படும் 'குரங்கு அம்மை' எனப்படும் நோய் உலகளாவிய ரீதியில் பல நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. 

இதற்கு முன்னர் இந்நோய் பரவல் இனங்காணப்படாத 11 நாடுகளில் கூட தற்போது இந்நோய் இனங்காணப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது. 

எவ்வாறாயினும் இந்த நோய் பரவல் குறித்து இலங்கை எச்சரிக்கையுடன் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. 

பிரான்ஸ், ஜேர்மன், பெல்ஜியம் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை 'குரங்கு அம்மை' நோயால் பாதிக்கப்பட்ட முதலாவது நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

இதேவேளை பிரித்தானியா, ஸ்பெய்ன், போர்த்துக்கள், இத்தாலி, அமெரிக்கா, சுவீடன் மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளில் கடந்த வாரம் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

குரங்கு அம்மை நோயானது காய்ச்சல், குளிர், சொறி மற்றும் பிறப்புறுப்புக்களில் புண்களை ஏற்படுத்தும். இந்நோய் பத்தில் ஒருவருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என்று உலக சுகாதார ஸ்தாபனம் மதிப்பிட்டுள்ளது. 

எவ்வாறிருப்பினும் பெரியம்மை நோய்க்கு பயன்படுத்தக் கூடியவாறான மாதிரி தடுப்பூசிகள் இதற்காக இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நோய் இனங்காணப்பட்டுள்ள நாடுகளுடன் இணைந்து இது தொடர்பான கண்காணிப்புக்களை விரைவுபடுத்தவும் , உரிய வழிகாட்டல்களை வழங்கவும் உலக சுகாதார ஸ்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அறிகுறிகள்

குரங்கு அம்மை நோயின் அறிகுறிகளாக முகம், கை, பாதம், கண்கள், வாய் மற்றும் பிறப்புறுப்புக்களில் கொப்புளங்களுடனான சொறி, காய்ச்ச்சல், தலைவலி, தசைவலி, உடலில் சக்தி குறைதல், நிணநீர் முனையங்கள் வீங்குதல் என்பன அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

பரவும் மூலங்கள்

மேற்கூறிய அறிகுறிகள் காணப்படும் ஒருவருடன் பௌதீக தொடர்புகளைப் பேணுதல் (அறிகுறியுடையவரை தொட்டு பேசுதல் உள்ளிட்டவற்றின் ஊடாக), நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உறங்குதல், துவாய்களை உபயோகித்தல், உடைகளைப் பயன்படுத்தல் மூலம் , உமிழ் நீர் மற்றும் சுவாசத்தின் போது வைரஸ் பரவல் போன்ற மூலங்கள் ஊடாக இந்நோய் பரவக் கூடும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு வழிமுறைகள்

அறிகுறிகள் காணப்படுபவர்கள் ஏனையோரிலிருந்து தம்மை சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அறிகுறிகள் காணப்படுபவர்களுடன் நேரடியாகவும் , ஸ்பரிசம் உள்ளிட்ட பௌதீக தொடர்புகளைப் பேணாதிருக்க வேண்டும். 

பொருட்கள் மற்றும் மேற்பரப்புக்களை தொடும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும். அனைத்து சந்தர்ப்பங்களிலும் முகக்கவசம் அணிந்திருத்தல் அவசியமாகும் என உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்துள்ளது.