ரொபட் அன்டனி 

உணவு நெருக்கடி ஏற்படுமா என்பதே அண்மைக்காலமாக இலங்கையில் பல்வேறு தரப்பினராலும் பேசப்பட்டு கொண்டிருக்கின்ற மிக அபாயகரமான விடயமாக காணப்படுகிறது.  அதாவது இலங்கையில் விரைவில் உணவு நெருக்கடி ஏற்படும்  என்றும் உணவில்லாமல் மக்கள் கஷ்டப்பட போகிறார்கள் என்றும் இதற்கு அரசாங்கம் என்ன செய்யப் போகின்றது எனவும்   பல்வேறு கரிசனைகள் பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.  

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்னும் சில மாதங்களில் இலங்கையில்   உணவு நெருக்கடி ஏற்படுவதற்கான அபாயம் இருக்கின்றது என்பதை மறைமுகமாக தெரிவித்திருந்தார்.  அதாவது உணவு நெருக்கடி ஏற்படப் போகின்ற நாடுகளின் பட்டியல் ஒன்று உலக வங்கியினால் வெளியிடப்பட்டு இருப்பதாகவும் அதில் இலங்கையின் பெயரும் இருப்பதாகவும்   பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார். 

 எனவே இந்த நிலைமையை எதிர்கொள்வதற்கும்  கட்டுப்படுத்த சகலரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.    மாற்று திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.    பல இடங்களிலும் பயிர்செய்கைகளை   பாரியளவில்  முன்னெடுக்கப்படவேண்டும்  என்றும் பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.  அதற்கு சகலரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்றும் அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்திருந்தார்.   

பிரதமரின் இந்த கருத்தை பார்க்கும்போது எதிர்காலத்தில்  உணவு நெருக்கடி ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாகவே கருதப்படுகிறது.  ஆனால்  அவ்வாறு உணவு நெருக்கடி ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எவ்வாறு  எடுப்பது என்பதே தற்போது மிக முக்கியமாக இருக்கிறது.  சில தினங்களுக்கு முன்னர் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு செவ்வி ஒன்றை வழங்கியிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எக்காரணம் கொண்டும் இலங்கையில் பசி பட்டினி பஞ்சம்  போன்ற நிலைமையை ஏற்படுத்துவதற்கு நான் இடமளிக்க மாட்டேன், சர்வதேச சமூகத்துடன் எப்படியாவது பேச்சுவார்த்தை நடத்தி தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன் என்று குறிப்பிட்டிருந்தார். 

தற்போது உணவு நெருக்கடி  என்ற சூழலில் உலகின் இந்த உணவு நெருக்கடி நிலைமை எவ்வாறு இருக்கின்றது என்பது தொடர்பாக பார்க்க வேண்டியிருக்கின்றது. சர்வதேச நிறுவனங்களின் புள்ளிவிபரங்களின்படி அறிக்கைகளின் படி தற்போது  ரஷ்யா -  உக்ரேன் யுத்தம் காரணமாக கோதுமை உற்பத்தியில் ஒரு பாதிப்பு ஏற்பட்டு இருக்கின்றது.   

உலகில் கோதுமை உற்பத்தி செய்யும் நாடுகளில் மிக முக்கியமானவையாக உக்ரேன் ரஷ்யா இருக்கின்றன.  இந்நிலையில் ரஷ்ய உக்ரேன்  யுத்தம் காரணமாக கோதுமை உற்பத்தியில் குறைவு ஏற்படவில்லை.  ஆனாலும் அதனை விநியோகிப்பதில் நெருக்கடிகள் தற்போது உலகில் ஏற்பட்டிருக்கின்றன.  ஐரோப்பாவில் இந்த யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.  

எனவே பல்வேறு வழிகளில் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால்  விநியோகிப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  மிக முக்கியமாக எரிபொருள் பற்றாக்குறை மற்றும் எரிபொருள் விலை   உயர்வு என்பன இதில் தாக்கத்தைச் செலுத்துகின்றன.   இந்த நெருக்கடியானது   உலகில் இவ்வாறான உணவு நெருக்கடி  நிலையை  ஏற்பட காரணமாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது.  

இந்தியா அமெரிக்கா ரஷ்யா கனடா போன்ற நாடுகளே  கோதுமை உற்பத்தியில் மிக முன்னிலை வகிக்கின்றன.  இந்த நாடுகள் கோதுமை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன.  ஆனால் தற்போது ஒரு சில நாடுகளில் அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகளில் கோதுமை உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.   இதன் காரணமாக இந்தியா தற்போது கோதுமையை ஏற்றுமதி செய்வதை முற்றாக தடை செய்திருக்கின்றது.   

இந்தியாவின் இந்த  தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அமெரிக்கா கோரியுள்ளது.   காரணம் இந்தியாவின் இந்த தீர்மானமானது உலக நாடுகளின் உணவு தேவையை பாதிக்கும் என்பதால் அது ஒரு உணவு நெருக்கடி ஏற்படுவதற்கான சாத்தியம்  தோற்றுவிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில் இலங்கையில் உணவு நெருக்கடி தொடர்பான கருத்துக்கள் சில மாதங்களாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.  இதற்கு முக்கியமாக மூன்று காரணங்கள் காணப்படுகின்றன.    

உணவு நெருக்கடி ஏற்படப் போகின்றது என்று தெரிவிக்கப்படுகின்றமைக்கு  இந்த காரணங்கள் முக்கியமாக இருக்கின்றன.  காரணம் முதலாவதாக இலங்கையில் காணப்படுகின்ற டொலர்  பற்றாக்குறை காரணமாக பொருட்களை இறக்குமதி செய்வதில் இலங்கை கடும் நெருக்கடியை சந்தித்திருக்கின்றது.  தற்போதுகூட எரிபொருள் எரிவாயு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்வதில் கடும் நெருக்கடி காரணமாக அந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் அவற்றை பெற்றுக் கொள்வதற்கு கிலோ மீட்டர் கணக்கில் நாட்கணக்கில் வரிசையில் நிற்கின்றனர்.  அவ்வாறு வரிசையில் நிற்கின்றவர்களுக்கும் இறுதியில் அந்த பொருட்கள்  கிடைக்காத நிலைமை காணப்படுகின்றது.  அதுமட்டுமன்றி உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்திருக்கின்றன. 

 இவை அனைத்துக்கும் இந்த டொர் பற்றாக்குறையும் டொலருக்கான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து செல்கின்றமையும் மிக மிக முக்கிய காரணமாக உள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் 175 ரூபாவாக  காணப்பட்ட டொலரின் பெறுமதி தற்போது 350 ரூபா அளவில் காணப்படுகிறது.  

எனவே எந்தளவு தூரம் இந்த நாட்டின் ரூபாயின் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது  தெரிகின்றது. அதுமட்டுமின்றி   கோதுமை மாவின் விலை அதிகரித்ததன் காரணமாக கோதுமை மாவிலான  உணவு வகைகளின் விலைகள்  அதிகரித்திருக்கின்றன.  முக்கியமாக தற்போது ஒரு இறாத்தல் பாணின் விலை  170 ரூபாவாக அதிகரித்திருக்கின்றது.  மற்றும் ஏனைய உணவு பொருட்களின் விலைகளும் பேக்கரி உணவு உற்பத்திப் பொருட்களின் விலைகளும் கடுமையாக அதிகரித்திருக்கின்றன.  

இந்தநிலைமையில் எதிர்காலத்தில் இந்த டொலர் பற்றாக்குறை காரணமாக கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கு நெருக்கடி ஏற்படலாம்.   அதனால் உணவு நெருக்கடி ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.  அதுமட்டுமன்றி உள்நாட்டில் கடந்த காலங்களில் இரசாயன உரத்துக்கு தடைவிதிக்கப்பட்டமையினால் கடந்த சிறு போகத்தில் அறுவடை வீழ்ச்சி அடைந்திருக்கிறது.   வீழ்ச்சியடைந்ததன் காரணமாக கோதுமை மாவின் பற்றாக்குறையை அரிசியினால் கூட நிவர்த்தி செய்ய முடியாத ஒரு நிலைமை காணப்படுகிறது.

 கோதுமை மா இறக்குமதி செய்வது குறையும் பட்சத்தில் அரிசி பாவனையை அதிகரித்து இதனை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று ஒரு கருத்து நிலவுகிறது.  ஆனால்   அரிசி உற்பத்தி கடந்த சிறுபோகத்தில்   குறைந்திருக்கிறது. 

கடந்தகாலங்களில் இராசயன உரத்தடை  தீர்மானம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டது.   தற்போது மீண்டும் இரசாயன உரத்தை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.  ஆனால் அது  அதிக விலையிலேயே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.  அதன் காரணமாக பெரும்போகத்தில்  என்ன நிலைமை ஏற்படும் என்பதை   எதிர்வுகூற முடியாத நிலைமை காணப்படுகின்றது.  சரியான நேரத்தில் விவசாயிகளுக்கு உரம் கிடைக்குமா என்ற கேள்வி எழுகின்றது. காரணம் அதற்கும் டொலர் அவசியமாகும்.  

டொலர் இன்மை காரணமாகவே  தற்போது   உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதிலும் இலங்கை சிக்கலில்  காணப்படுகின்றது.   பிரதமர் ரணில் மிகப் பாரியளவில் தோட்டப் பயிர்ச் செய்கை வீட்டு தோட்டங்களை  செய்வதன் மூலம் இதற்கு முகம் கொடுக்க முடியும் என்ற கருத்தை வெளியிட்டு இருக்கின்றார்.  அது எந்தளவு தூரம் சாத்தியம் என்பதும் இங்கு கேள்விக்குறியாக இருக்கின்றது.   காரணம்  அதற்கும் சில உள்ளீட்டு பொருட்கள் அவசியமாகின்றன. 

இது தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை  சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி தனது மதிப்பீடுகளை பகிர்கையில்,

உலகளவில் தற்போது  கோதுமை உற்பத்தி மற்றும் விநியோகம் போன்றவற்றில் நெருக்கடிகள் காணப்படுகின்றன.   இந்தியா கோதுமை ஏற்றுமதியை   தடை செய்திருக்கின்றமையின்  ஊடாக நிலைமையை  புரிந்துகொள்ள முடிகின்றது.  அதுமட்டுமின்றி ரஷ்ய உக்ரேன் யுத்தம்  இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றது.  இந்தநிலையில் இலங்கையிலும் இந்த உணவு நெருக்கடி ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.  

குறிப்பாக கோதுமை இறக்குமதி குறையும் பட்சத்தில் இலங்கை மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொள்ளும்.  காரணம் இலங்கையில் இன்னும்கூட அதிகளவான மக்கள்  கோதுமைமா உணவிலேயே தங்கியிருக்கின்றனர்.  

முக்கியமாக பெருந்தோட்டத்துறை பொறுத்தவரையில் கோதுமை மா என்பது மிக முக்கியமான ஒரு உணவுப் பொருளாக இருக்கிறது.  அதுமட்டுமன்றி எமது ஹோட்டல்கள் மற்றும் பேக்கரி உணவு உற்பத்திக்கு என பலவற்றுக்கும்  கோதுமைமா தேவைப்படுகின்றது.  

எனவே கோதுமை மா உற்பத்தி சர்வதேச மட்டத்தில்  குறையும் பட்சத்தில் நெருக்கடி அதிகரிக்கும்.  அதேபோன்று கோதுமை மாவின் விலை அதிகரித்தாலும் நெருக்கடி ஏற்படும்.  அதேபோன்று இலங்கையில் இறக்குமதி குறைவடையும்.  இந்த நெருக்கடிகள் காணப்படுகின்றன.   உள்நாட்டில்  பாசிப்பயறு கடலை   மற்றும் அரிசி போன்றவற்றை அதிகமாக  உற்பத்தி செய்வதற்கு உரமும் ஏனைய விவசாய உள்ளீடு  பொருட்களும் தேவைப்படுகின்றன.  முக்கியமாக கிருமி நாசினிகள் வளமாகிக்கிகள்,  களைநாசினி  போன்றவைகள் மிக அவசியமாக தேவைப்படுகின்றன.   

எனவே அரசாங்கம் விரைவாக பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.    அவை செய்யப்படாத பட்சத்தில் நிச்சயமாக உணவு நெருக்கடி ஏற்படுவதற்கான அபாயம் இலங்கையில் காணப்படுகிறது.  எனவே அரசாங்கம் இந்த விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.  உலகளவிலும் ஒரு நெருக்கடி நிலைமை காணப்படுகின்றது.  

ஜப்பான் மிகப்பெரிய கோதுமை தொகையை அமெரிக்காவிடம் இருந்து கொள்வனவு செய்து சேமித்து வைத்திருக்கிறது.  அந்த கோதுமை மாவை வெளியே எடுத்து உலக சந்தைகளுக்கு விநியோகிக்கும் பட்சத்தில் உலக அளவில் கோதுமை மாவுக்கு  ஏற்படுகின்ற இந்த நெருக்கடி குறைவடையலாம். ஆனால் ஜப்பான்  என்ன செய்யப்போகிறது என்பது தெரியவில்லை என்று சுட்டிக்காட்டுகிறார். 

இந்தநிலைமையில் பொருளாதார நிபுணர்கள் மிக முக்கியமான விடயங்களை சுட்டிக்காட்டுகின்றனர்.  அதேபோன்று பிரதமரும் எதிர்வரும் காலங்களில் ஏற்படப்போவதாக கூறப்படும் விடயங்களை எதிர்வு கூறி இருக்கின்றனர். எனவே அவற்றை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  எந்த ஒரு காரணத்துக்காகவும் இலங்கையில் இந்த உணவு நெருக்கடி ஏற்படுவதற்கு இடமளிக்கக்கூடாது.  

பஞ்சம் போன்ற நிலைமைகள் ஏற்பட இடமளிக்க கூடாது.  முக்கியமாக தற்போது இந்த பிரச்சனையை எதிர்வு கொண்டிருப்பதால் அது தொடர்பான மாற்று நடவடிக்கைகளை ஆரம்பித்து விட வேண்டும்.  

கடந்த காலங்களில் டொலர்  நெருக்கடி தொடர்பான எதிர்வு கூறல் முன்வைக்கப்பட்டாலும் கூட அதற்கான மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.  அதனால்தான் இன்றைய நிலையில் இவ்வாறான பாரிய நெருக்கடியை எதிர் கொள்கின்றோம்.  

ஆனால் தற்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த உணவு நெருக்கடி  தொடர்பான எதிர்வு கூறலை   புரிந்து கொண்டிருக்கிறார்.   எனவே அரசாங்கம் என்ற வகையில் அதற்கான மாற்று திட்டங்களை நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும்.  

எல்லாவற்றுக்கும் முன்னதாக அவர் எவ்வாறு உலக நாடுகளிடம் தற்போதைய இந்த உடனடி நெருக்கடிகளை தீர்ப்பதற்கு டொலர் கடன் உதவியை பெறப்போகிறார் என்பதை பார்க்க வேண்டியுள்ளது.