ஓகஸ்டில் வெளியாகும் 'சீயான்' விக்ரமின் 'கோப்ரா'

By Digital Desk 5

21 May, 2022 | 10:53 AM
image

சீயான் விக்ரம் நடிப்பில் டிஜிட்டல் தளத்தில் வெளியான 'மகான்' படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டம் சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது. 

தற்போது அவருடைய அடுத்த படமான 'கோப்ரா' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

'டிமான்டி காலனி', 'இமைக்காநொடிகள்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'கோப்ரா'. 

இதில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 'கே ஜி எஃப்' பட புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். 

இவர்களுடன் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட வீரரும், வேகப்பந்து வீச்சாளருமான இர்பான் பதான் நடிகராக அறிமுகமாகிறார். 

மேலும் மலையாள நடிகர் லால், மிருணாளினி ரவி, கனிகா, பத்மபிரியா, பாபு அண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைக்கிறார். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

படப்பிடிப்பு பணிகள் முற்றிலும் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

இதற்காக படக்குழுவினர் பிரத்யேகமாக மோஷன் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். 

சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் 'கோப்ரா' படத்தில் அவர் ஒன்பதுக்கும் மேற்பட்ட வேடங்களில் தோன்றுவதாலும், கணித புதிர்களை மையப்படுத்தி கிரைம் திரில்லர் ஜேனரில் தயாராகி இருப்பதாலும், இந்த திரைப்படத்திற்கு சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்