( எம்.எப்.எம்.பஸீர்)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக அமைதிப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 'மைனா கோ கம', 'கோட்டா கோ கம' போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில், தேசிய மற்றும் சர்வதேச அவதானத்தை ஈர்த்த 6 முக்கிய சம்பவங்கள் தொடர்பிலான அனைத்து சந்தேக நபர்களையும் கைது செய்துவிட்டதாக சி.சி.டி.யினர் இன்று ( 20) நீதிமன்றுக்கு அறிவித்தனர்.
சி.ஐ.டி.யின் உதவி பொலிஸ் அத்தியட்சர் சானக டி சில்வா இதனை கோட்டை நீதிவான் திலிண கமகேவுக்கு அறிவித்தார்.
'மைனா கோ கம', 'கோட்டா கோ கம' மீதான தாக்குதல்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மேலும் 2 சந்தேகநபர்கள் சி.ஐ.டியினரால் இன்று (20) நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டனர்.
இதன்போதே சி.ஐ.டி.யின் உதவி பொலிஸ் அத்தியட்சர் சானக டி சில்வா மேற்படி விடயத்தை குறிப்பிட்டார்.
ஹங்வல்லை பல் நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் அமித்த பிரியந்த அபேவிக்ரம , தெஹிவளை - கல்கிசை மாநகர சபை பெண் உறுப்பினர் பிரசாந்தி பொன்சேகா ஆகியோர் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளதால், அடையாளத்தை மறைத்து மன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.
இதில் 14 ஆவது சந்தேக நபராக மன்றில் ஆஜர் செய்யப்பட்ட அமித்த பிரியந்த அபேவிக்ரம என்பவர், கோட்டோ கம மீதான தாக்குதலின் போது தன் மீது தாக்குதல் நடாத்தியதாகவும், அவரை மீள கண்டால் அடையாளம் காட்ட முடியும் எனவும் தாக்குதலுக்கு உள்ளான யுவதி ஒருவர் வாக்கு மூலம் அளித்துள்ளதாக சி.ஐ.டி.யின் உதவி பொலிஸ் அத்தியட்சர் சானக டி சில்வா மன்றில் விடயங்களை முன்வைத்து குறிப்பிட்டார்.
அத்துடன் 15 ஆம் சந்தேக நபரான பிரசாந்தி பொன்சேகா தொடர்பிலும் தாக்குதல் நடாத்தியோரை அடையாளம் காட்ட முடியும் என சேனாதிபத்திலாகே குருகே எனும் சாட்சியாளர் சாட்சியம் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதனால் அவ்விருவரையும் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த உத்தரவிடுமாறு அவர் கோரினார்.
இதனை விட மன்றில் தொடர்ந்தும் விடயங்களை முன் வைத்த சி.ஐ.டி.யின் உதவி பொலிஸ் அத்தியட்சர் சானக டி சில்வா ' மைனா கோ கம , கோட்டா கோ கம மீதான தாக்குதல் விவகாரத்தில், தேசிய மற்றும் சர்வதேச அரங்கில் மிக்க அவதானத்தை ஈர்த்த 6 பிரதான சம்பவங்கள் உள்ளன. அவை தொடர்பில் அனைத்து சந்தேக நபர்களையும் கைது செய்துவிட்டோம்.
எனினும், தாக்குதலை தடுக்காமை, மற்றும் கடமையை மீறியமை தொடர்பில் இடம்பெறும் விசாரணைகள் தொடர்கின்றன.
அது மிக ஆழமான விசாரணை. சுமார் 2000 பொலிசார் வரை, தாக்குதல் நடக்கும் போது அவ்விரு பகுதிகளிலும் இருந்துள்ள நிலையில் அவ்விசாரணைகள் இடம்பெறுகின்றன. ' என்றார்.
இதன்போது நீதிவான் திலிண கமகே, இந்த விடயத்தில் நேற்றும் (19 ) நீதிமன்றில் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டிய விடயம் தான், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் சி.ஐ.டி.யினரின் நடவடிக்கை என்ன என்பது? அது குறித்த விசாரணை எந்த அளவில் இருக்கிறது? என வினவினார்.
இதற்கு பதிலளித்த உதவி பொலிஸ் அத்தியட்சர் சானக டி சில்வா,
' ஆம், அவ்விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன.
ஆழமான விசாரணை அது. அலரி மாளிகைக்கு அருகேயான மைனா கோ கம மீது தாக்குதல் நடாத்தியது முதல் கோட்டா கோ கம வரையிலான அனைத்து சம்பவங்களையும் கருத்தில் கொண்டு அவ்விசாரணைகள் இடம்பெறுகின்றன. ' என்றார்.
இதன்போது நீதிவான் மீண்டும் ' சாதரணமாக ஆர்ப்பாட்டம் ஒன்று தொடர்பில் முன் கூட்டியே தகவல்களைப் பெற்றுக்கொண்டு, வீதித் தடைகளை ஏற்படுத்தி பொலிசார் செயற்படுவதை நாம் அவதானித்துள்ளோம். இங்கு அப்படி எதுவும் நடந்ததாக தெரியவில்லை அல்லவா ? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு உதவி பொலிஸ் அத்தியட்சர் சானக டி சில்வா,' ஆம்... இது குறித்து நாம் ஆழமாக விசாரிக்கின்றோம். சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் விடயத்துக்கு மேலதிகமாக, மைனா கோ கம மீது தாக்குதல் நடாத்தும் போது அதனை தடுக்காமை தொடர்பிலும் விசாரணை நடக்கிறது.
மைனா கோ கம அருகே இரு பொலிஸ் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள், கலகத் தடுப்பு பொலிசார் தயார் நிலையில் இருந்தனர்.
எனினும் மைனா கோ கம மீது தாக்குதல் நடாக்கும் போது அவை பயன்படுத்தப்படவில்லை. அதன் பின்னர் வன்முறையாளர்கள் கோட்டா கோ கம நோக்கி சென்றுள்ளனர்.
மைனா கோ கம அருகில் கடமையில் இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சார் ஒருவர் தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம். ' என தெரிவித்தார்.
இந் நிலையில் இன்று மன்றில் ஆஜர் செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் எதிர்வரும் 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான், அதுவரை வழக்கை ஒத்தி வைத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM