(எம்.ஆர்.எம். வஸீம்,இராஜதுரை ஹஷான்)

நாடு எதிர்க்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அவற்றிற்கான தீர்வு குறித்து மத்திய வங்கியின் ஆளுநர், நிதியமைச்சின் செயலாளர்  ஆகியோருடன் கலந்துரையாட அரசாங்க நிதி பற்றிய குழு தீர்மானித்துள்ளது.

 மத்திய வங்கியின் ஆளுநர், மத்திய வங்கியின் உயர்மட்ட அதிகாரிகள், நிதியமைச்சின் செயலாளர் ஆகியோரை எதிர்வரும் வாரம் பாராளுமன்றிற்கு அழைப்பதற்கு கோபா குழுவின் தலைவர் அனுர பிரியதர்ஷன யாப்பா வெள்ளிக்கிழமை (20) இடம்பெற்ற கோபா குழு கூட்டத்தில் போது தீர்மானித்துள்ளார்.

1969ஆம் ஆண்டு 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் 2022.04.08 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட 2022 ஆம் ஆண்டு 06 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒழுங்கு விதிகள் நிதி பற்றிய குழுவினால் அனுமதிக்கப்பட்டன.

தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்களில் 369 பொருட்களுக்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு அனுமதி பத்திரத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் ஒழுங்கு விதிகளை விதிக்கும் 202.2022.04.09ஆம் திகதி வர்த்தமானி வெளியிடப்பட்டது. 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி அல்லது அதற்கு பின்னர் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு இந்த ஒழுங்குமுறை ஏற்புடையதாகும்.

கைகடிகாரங்கள் மற்றும் கடிகாரங்கள்,தொலைத்தொடர்பு மற்றும் உதிரிபாகங்கள்,பால் உற்பத்தி பொருட்கள் ,மதுசாரம், அழகு சாதனப் பொருட்கள், மெழுகுவர்த்திகள், விளக்குகள், பழங்கள்,இறப்பர் பொருட்கள், மின்சாதனங்கள், இதில் அதிகமாக காணப்படுவதுடன் மொத்த இறக்குமதியில் அவை 84 சதவீதமாகும்.

அதன்படி இந்த பொருட்களின் இறக்குமதிக்காக கடந்த மூன்று வருடங்களில் ஒப்பீட்டளவில் செலவிடப்பட்ட 512 மில்லியன் அமெரிக்க டொலரில் கணிசமான அளவை உள்நாட்டுக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதியில் உள்ளடக்காமல் சேமிக்க முடியும் என இக்கூட்டத்தின் போது எதிர்பார்க்கப்பட்டுள்ளது.