(நா.தனுஜா)

சமாதானமானதும் ஜனநாயகமானதுமான முறையில் தமது அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கான சுயாட்சி உரிமை இலங்கை வாழ் தமிழ்மக்களுக்கு வழங்கப்படவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியிருக்கும் சர்வதேச நாடுகளைச்சேர்ந்த அரசியல்வாதிகள், கடந்த காலத்தில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கும் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்று ஸ்தாபிக்கப்படவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Open photo

நாட்டில் சுமார் மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்றுவந்த யுத்தம் கடந்த 2009 ஆம் ஆண்டில் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர், மேமாதம் 11 - 18 ஆம் திகதி வரையான ஒருவாரககாலப்பகுதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமாகவும், அவ்வாரத்தின் இறுதிநாளான 18 ஆம் திகதி போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளாகவும் தமிழ்மக்களால் அனுட்டிக்கப்பட்டுவருகின்றது.  

அந்தவகையில் கடந்த புதன்கிழமை முள்ளிவாய்க்கால் தினம் அனுட்டிக்கப்பட்ட நிலையில், அதுகுறித்து நேற்றைய தினம் கருத்து வெளியிட்டுள்ள சர்வதேச நாடுகளைச்சேர்ந்த அரசியல்வாதிகள் மற்றும் இராஜதந்திரிகள் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளனர்.

அதன்படி இதகுறித்து அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொபோரா ரோஸ் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

இலங்கையில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்ட அனைத்து உயிர்களையும் தமிழினப்படுகொலை நினைவு நாளில் நினைவுகூருகின்றோம். கடந்த காலத்தில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் போராடுவதற்கும் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்றை ஸ்தாபிக்கவேண்டியது அவசியமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஷோன் சென் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு கனடாவில் அமைக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நிலையத்தில் அஞ்சலி செலுத்தியதுடன், இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

மேமாதம் 18 ஆம் திகதியை தமிழினப்படுகொலை நினைவு நாளாகப் பிரகடனப்படுத்துவதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் கனேடியப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த எண்ணற்ற தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தினேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் 'இலங்கைவாழ் தமிழ்மக்களுக்கான நீதி உறுதிசெய்யப்படுவதுடன், சமாதானமானதும் ஜனநாயகமானதுமான முறையில் தமது அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கான சுயாட்சி உரிமையும் அவர்களுக்கு வழங்கப்படவேண்டியது அவசியமாகும்' என்று அமெரிக்காவின் வட கரோலினா மாநில செனெட்சபை உறுப்பினர் விலே நிக்கெல் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.