(எம்.மனோசித்ரா)
நாட்டின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு இடைக்கால அரசாங்கத்தில் பொறுப்பினை ஏற்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து ஐவரது பெயரையேனும் பரிந்துரைக்குமாறு வலியுறுத்தினோம்.

எனினும் அதற்கான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. மக்களுக்காக சவாலை ஏற்றிருக்க வேண்டிய ஐக்கிய மக்கள் சக்தி அதனை செய்ய தவறிவிட்டது.
எனவே தான் நாம் பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ளோம் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
பொருளாதார சூறாவளியில் சிக்கியுள்ள நாட்டை பாதுகாப்பாக கரைக்குக் கொண்டு செல்லும் சவாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுள்ளார்.
அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே நாம் இந்த தீர்மானத்தை எடுத்தோம். அதனை விடுத்து வெளியிலிருந்து ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறுவதும் , தேர்தலை நடத்துமாறு வலியுறுத்துவதும் முற்று முழுதான சுயநல அரசியலாகும் என்றும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.
சுற்றுலாத்துறை அமைச்சராக நியமனம் பெற்றதன் பின்னர் அமைச்சில் (20) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டில் துளியளவும் மாற்றம் இல்லை.
எவ்வாறிருப்பினும் நாட்டை தற்போதுள்ள நெருக்கடியிலிருந்து மீட்கும் பொறுப்பை ஏற்குமாறு ஐக்கிய மக்கள் சக்திக்கு ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றிருக்க வேண்டும்.
அந்த சவாலை வெற்றி கொள்வதற்கு இரவு பகலாக உழைப்பதற்கு நாம் தயார் எனக் கூறினோம். எனினும் அதற்கு கட்சி தயாராக இருக்கவில்லை.
எனவே தான் சில நிபந்தனைகளுடனும் , 19 ஆவது திருத்தம் விரைவில் மீள கொண்டு வரப்படும் என்ற பிரதமரின் வாக்குறுதிக்கு அமையவும் அமைச்சு பதவியைப் பொறுப்பேற்றுள்ளோம்.
இதில் எந்தவொரு விதத்திலும் நாம் யாரையும் காட்டிக் கொடுக்கவில்லை. ஐக்கிய மக்கள் சக்திக்காகவே நாம் இந்த சவாலை ஏற்றிருக்கின்றோம்.
ஐக்கிய மக்கள் சக்தியில் பல சிரேஷ்ட உறுப்பினர்கள் உள்ளனர். ஹர்ஷ டி சில்வா போன்றோர் பொறுப்பை ஏற்று நாட்டுக்காக செயற்பட வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும்.
நானும் மனுஷ நாணயக்காரவும் முக்கிய சவால்களை ஏற்றிருக்கின்றோம். முற்றாக வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களின் ஊடான வருமானத்தை மீளப் பெற வேண்டியுள்ளது.
அதனை எதிர்வரும் 3 மாதங்களுக்குள் செய்ய முடியும் என்று நம்புகின்றோம். அவ்வாறு குறிப்பிட்ட காலத்தில் எம்மால் அதனை செய்ய முடியவில்லை எனில் பதவியிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவோம்.
ரணில் விக்கிரமசிங்க சிறந்தவர் இல்லை என்று பலராலும் விமர்சிக்கப்பட்டாலும் , தற்போதைய நிலைமைக்கு அவரே பொறுத்தமானவர்.
அரசியல் ரீதியிலான பிளவுகளை தவிர்த்து ஒன்றிணைந்து செயற்படுவோம்.
இடைக்கால அரசாங்கத்தில் பொறுப்பினை ஏற்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து ஐவரின் பெயரையாவது பரிந்துரைக்குமாறு ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வந்தோம்.
எனினும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஐக்கிய மக்கள் சக்திக்காகவே நாம் இந்த சவாலை ஏற்றிருக்கின்றோம் என்றார்.