(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

நாட்டில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்துக்கு பின்னரே பாதிக்கப்பட்ட அமைச்சர்களுக்கு அதன் வலி தெரிகின்றது. 

ஆனால் இன்றைக்கு 39வருடங்களுக்கு முன்னரே இந்த வலி எங்களுக்கு தெரியும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ப.திகாம்பரம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் (20) வெள்ளிக்கிழமை  நான்காவது நாளாக இடம்பெற்ற கடந்த 9ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற கலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.  இடம்பெற்ற அசம்பாவிதத்தில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரது வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. அதன் வேதனையை அவர்கள் இப்போதுதான் உணர்கின்றனர். 

ஆனால் வீடுகள் எரிக்கப்படுவதன் வேதனையின் வலி 39வருடங்களுக்கு முன்பே எங்களுக்கு தெரிகின்றது. 1983 ஜூலை கலவரத்தை நாங்கள் நேரடியாகவே பார்த்தோம். 

அப்போது தமிழ் மக்களின் வீடுகள். கடைகள் எரிக்கப்பட்டன. 

அவர்களின் சொத்துக்களை இல்லாமலாக்கி கொன்று குவித்தார்கள். அதற்காக இந்த சம்பவத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை.

 கலவரத்துடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டை வழங்கவேண்டும் என நாங்கள் தெரிவிக்கின்றோம்.

தேலும் சம்பவ தினம் காலை முன்னாள் பிரதமர் ஒரு சில காடையர்களையும் குண்டர்களையும் அலரிமாளிகைக்கு கொண்டுவந்து, காலிமுகத்திடலில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். 

அதன் காரணமாகவே இந்த பாரிய அழிவு இடம்பெற்றது. 

ஏனெனில் காலிமுகத்திடலில் இடம்பெறும் அமைதிப்போராட்டத்தை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். 

ஆனால் தற்போது இடம்பெற்ற கலவரத்தை ஜே.வி.பி. மீமு சுமத்திவிட முற்படுகின்றனர். 

மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். காஸ் இல்லை. எரிபொருள் இல்லை. அத்தியாவசிய பொருட்கள் இல்லை. 

இந்நிலையில் காலி முகத்திடலில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன் மக்கள் கோபப்பட்டு, கலவரத்தில் ஈடுபட்டனர்.

எனவே வீடுகளில் எரித்தவர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும் என்பதுடன் மலரிமாளிகைக்கு வந்த  மக்களை தூண்டிவிட்ட அமைச்சர்கள் மற்றும் ஏனையவர்களுக்கும் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படவேண்டும். 

அதன் மூலமே இதற்கு தீர்வுகாண முடியும். நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு இந்த அரசாங்கே காரணம். 

நாட்டில் தேவையான அளவு பண்ம் இருப்பதாக பசில் ராஜபக்ஷ் தெரிவித்து வந்தார்.

 ஆனால் இன்று நாடு வங்குராேத்து அடைந்திருக்கின்றது. மக்கள் பட்டினியில் சாவும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.

அத்துடன் நாட்டில் உணவு பஞ்சம் ஏற்படும் நிலை இருப்பதாக பிரதமர் தெரிவித்திருந்தார். அவ்வாறான நிலை ஏற்பட்டால் பெருந்தோட்ட மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். 

அதனால் பெருந்தோட்டங்களில் இருக்கும் தரிசு நிலங்களை அந்த மக்களுக்கு பிரித்து கொடுத்து விவசாயம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். 

ஆனால் சேர் பைல் என்று தெரிவித்தவர்கள் இன்று அந்த சேரிடம் சென்று அமைச்சு பதவி பெற்றிருக்கின்றார்கள். இதுதொடர்பில் வெட்கப்படுகின்றோம் என்றார்.