(நா.தனுஜா)

பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு அவசியமான கடன் நிவாரணங்களை வழங்குவதற்குரிய முயற்சிகளுக்கு தமது ஆதரவை வழங்கத்தீர்மானித்திருக்கும் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட ஜி - 7 நாடுகள், இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கு நீண்டகால அடிப்படையில் தீர்வு காண்பதில் தாம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றன.

G7 backs debt relief efforts for Sri Lanka - draft communique - Adaderana  Biz English | Sri Lanka Business News

மிகமோசமான பொருளாதார நெருக்கடியின் விளைவாக இலங்கை கடன்களை மீளச்செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதுடன், அத்தியாவசியப்பொருட்களுக்கான தட்டுப்பாட்டுக்கும் முகங்கொடுத்துள்ளது. 

இவ்வாறான தொரு பின்னணியில் ஜி - 7 நாடுகளுக்கு இடையில் ஜேர்மனியில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர், அந்நாடுகள் தயாரித்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளன.

இந்து சமுத்திரப் பிராந்திய நாடான இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிக்கு நீண்டகால அடிப்படையில் தீர்வுகாண்பதில் தாம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகத் தெரிவித்திருக்கும் அந்நாடுகள், பொருத்தமான கடன் செயற்திட்டமொன்று தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் செயற்திறனான வகையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளன.

இலங்கையின் கடன்தேவை தொடர்பில் தமது கொள்கைகளுக்கு அமைவாக நடவடிக்கை எடுப்பதற்குத் தயாராக இருப்பதாகவும் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், இத்தாலி, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய ஜி - 7 நாடுகள் உறுதியளித்துள்ளன.

அத்தோடு பாரிஸ் கூட்டணியில் அங்கம்வகிக்காத நாடுகள் அதில் அங்கம்வகிக்கும் நாடுகளுடன் ஒருங்கிணைந்து இலங்கைக்கு குறிப்பிட்ட காலப்பகுதிக்கு ஏற்றவாறான கடன் நிவாரணங்களை வழங்க முன்வரவேண்டும் என்றும் அந்நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

பாரிஸ் கூட்டணி என்பது கடன்களை மீளச்செலுத்துவதில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் நாடுகளை இனங்கண்டு, அவற்றுக்குரிய நிலைபேறான தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கடன் வழங்கும் இயலுமையுடைய அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, கனடா, தென்கொரியா உள்ளிட்ட 23 நாடுகளை உள்ளடக்கிய அமைப்பாகும்.  

அதேவேளை ஜி - 7 நாடுகளின் இந்த அறிவிப்பை வரவேற்பதாகத் தெரிவித்திருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இலங்கையுடன் சர்வதேச நாடுகள் தொடர்ச்சியாகப்பேணிவரும் தொடர்புகளே பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கான அடிப்படை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.