(எம்.ஆர்.எம். வஸீம், இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் கட்சியின் தீர்மானத்திற்கு முரணாகவே அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுள்ளனர். 

Maithripala Sirisena: Sri Lanka's Maithripala Sirisena to be in India amid  communal violence in country - The Economic Times

அமைச்சு பதவிகளை பொறுப்பேற்காமல் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவே கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றில் வெள்ளிக்கிழமை (20) இடம்பெற்ற ஒத்திவைப்பு விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தை தொடர்ந்து நாடு பாரிய விளைவுகளை தற்போது எதிர்க்கொண்டுள்ளது.

கடந்த 9 ஆம் ஆம் திகதி நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள்  கவலைக்குரியதுடன், வன்முறை சம்பவங்கள் கண்டிக்கத்தக்கது.

நாட்டின் பொருளாதர நிலைமை,நிதி நிலைமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் பல விடயங்களை முன்வைத்துள்ளார். 

தற்போது மக்கள் மத்தியில் பெரும் அச்சுறுத்தல் நிலைமை ஏற்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் உணவு  தட்டுப்பாடு குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

பாராளுமன்றம் சிறந்ததா அல்லது மோசமானதா என்பது தொடர்பில் இதுவரை கேள்விக்குறியாகியுள்ள நிலையில் தான் உள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒழுக்கமான முறையில் மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் சபையில் ஒன்று கூடுவதற்கு முடியாத நிலைமை தான் இதுவரை காணப்படுகிறது.

நாடு மிக மோசமான நிலைமையினை எதிர்க்கொண்டுள்ளது. பொலன்னறுவை மாவட்டத்தில் விவசாயத்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

விவசாயத்துறை அதிகாரிகளை பொலன்னறுவை மாட்டத்திற்கு சென்று விவசாய நிலைமை தொடர்பில் பரிசீலனை செய்யுமாறு சகல தரப்பினரும் வலியுறுத்துகிறார்கள்.

பொலன்னறுவை மாவட்டத்தில் விவசாயத்துறைக்கு ஏற்பட்டுள்ள நிலைமை தான் ஏனைய மாவட்டங்களிலும் நிலவுகிறது.

உணவு மற்றும் மருந்து நெருக்கடி நாட்டின் பிரதான பிரச்சினையாக உள்ளது.இப்பிரச்சினைக்கு விரைவான தீர்வு காண வேண்டும். 

எரிபொருள் வரிசையில் நிற்கும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொள்கிறார்கள்.

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் கூட எரிபொருள் வரிசையில் தமது தந்தையுடன் காத்திருக்கிறார்கள்.ஆகவே முழு நாடும்  அழ வேண்டிய  நிலைமை காணப்படுகிறது.

நாடு என்ற ரீதியில் விவசாயம் என்று குறிப்பிடப்பட்டாலும் அதற்கான உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

எரிபொருள் மற்றும் உரம் தடையின்றி கிடைக்காவிட்டால் விவசாய நடவடிக்கைகளை சிறந்த முறையில் முன்னெடுக்க முடியாது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பல யோசனைகளை அரசாங்கத்திடம் முன்வைத்தது.

பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் சர்வக்கட்சிகளையும் ஒன்றினைத்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம்.

இருப்பினும் தற்போது ஸ்தாபிக்கப்பட்டுள்ள அரசாங்கம் சர்வக்கட்சி அரசாங்கமும் இல்லை, இடைக்கால அரசாங்கமுமில்லை.

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை குறைவடைந்துள்ளது.

பிரதமருக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான கருத்து வேறுப்பாடு காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.

கட்சி என்ற ரீதியில் மாத்திரம் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தீர்மானித்தோம்.

சுதந்திர கட்சியின் தீர்மானத்திற்கு முரணாகவே கட்சி உறுப்பினர்கள் அமைச்சரவை அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுள்ளனர். 

அமைச்சு பதவிகளை பொறுப்பேற்பது தொடர்பில் கட்சி செயற்குழு கூட்டத்தில் எவ்வித தீர்மானத்தையும் முன்னெடுக்கவில்லை என்றார்.