(ரொபட் அன்டனி)

கோப் அறிக்கை என்பது நீதிமன்ற தீர்ப்பு அல்ல. மாறாக பரிந்துரையாகும்.  மாங்காய் மரத்தின் கீழ் இருந்து கொண்டு விசாரிப்பது போல்  கோப் குழுவில் செயற்படமுடியாது.  அதற்கென்று ஒரு முறையுள்ளது என்று   இராஜாங்க அமைச்சர்  சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.  

வாராந்த  அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே  இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்  

கோப் குழு என்பது ஊடகங்கள்   முன்னிலையில்  கூட்டங்களை நடத்துவதில்லை. இது   தனிப்பட்ட முறையில் இரகசியமாக இடம்பெறும் கூட்டமாகும். அதன் இரகசித்தன்மை பேணப்படவேண்டும்.  இதில் நடக்கும் விடயங்களை வெளியில் வந்து ஊடகங்களுக்கு கூற முடியாது.  மாங்காய் மரத்தின் கீழ் இருந்து கொண்டு விசாரிப்பது போல்  கோப் குழுவில் செயற்படமுடியாது. 

அதற்கென்று ஒரு முறையுள்ளது.  1997 ஆம் ஆண்டு முதல் மத்திய வங்கியில் பிணை முறிகள் வழங்கும் வரலாறு உள்ளது. நாம்  எமது கோப் குழு கூட்டத்தில் முழுமையாக   பேசி வருகின்றோம்.  ஐக்கிய தேசிய கட்சி இது தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்கின்றது.  முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் விடயத்தில்  அவரின் மருமகன்  கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுள்ளார் என்ற போதே அங்கு பிரச்சினை உள்ளது என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். 

அதன் அடிப்படையிலேயே  கோப் குழுவிற்கு   பரிந்துரைகளையும் கருத்துக்களையும் முன்வைக்கலாம். அவை அனைத்தையும் உள்வாங்கி கோப் குழு  இறுதி அறிக்கையை தயாரித்து பாராளுமன்றத்திற்கு வெளியிடும். கோப் குழு என்பது நீதிமன்றம் அல்ல. நாம்  விபரங்களை ஆராய்ந்து தகவல்களை திரட்டி பரிந்துரைகளை முன்வைப்போம் அவ்வளவுதான்.