( எம்.எப்.எம்.பஸீர்)

சமூக ஊடக வலைத் தளங்கள் ஊடாக வன்முறைகளை தூண்ட உதவி ஒத்தாசை அளித்ததாக கூறி தொலைக்காட்சி தொகுப்பாளினி ஒருவர் உள்ளிட்ட மூவரை சி.ஐ.டி. யின் கணினி குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

வெள்ளவத்தையில் கோடீஸ்வர வர்த்தகரை சிறைப்படுத்திய இருவர் பொலிஸாரிடம் வசமாக  சிக்கினர் | Virakesari.lk

 இன்று ( 19)  திக்வெல்லை, கங்கொடவில மற்றும்  நாரஹேன்பிட்டி பகுதிகளைச் சேர்ந்த அம்மூவரையும் கைது செய்ததாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில்  ஈடுப்பட்டு வந்த எந்த கட்சியையும் சாராத அமைதி போராட்டக்காரர்கள் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மூர்க்கத்தனமாக நடத்திய தாக்குதலை தொடந்து நாடளாவிய ரீதியில் பதிவான வன்முறைகள், தீ வைப்புக்கள், சொத்து சேதப்படுத்தல் சம்பவங்கள் தொடர்பில் சிறப்பு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

 இந் நிலையில் இவ்வாறான தீ வைப்புக்கள்,  சொத்து சேதப்படுத்தல் சம்பவங்களுக்கு  பல்வேறு சமூக ஊடக கணக்குகள் மற்றும் குழுக்கள்  பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார்.

 அவ்வாறான சமூக வலைத் தள குழுக்கள் 59 இன் நிர்வாகிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு எதிராக  கணிணிக் குற்றச் சட்டத்தின் கீழும்  குற்றவியல் சட்டத்தின் கீழும் சி.ஐ.டி.யினர் விசாரணைகளை நடாத்தி வருவதாக  நிஹால் தல்துவ மேலும் கூறியிருந்தார்.

 இந் நிலையில்,  பொலிசார் மற்றும் இராணுவத்தினரின் வீடுகளுக்கு தீ வைக்க வேண்டும்  சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாக கூறப்படும் 22 வயதான ஒருவரை திக்வெல்லையில் சி.ஐ.டி.யினர் கைது செய்துள்ளனர்.  தனது வீட்டிலேயே வாகன பழுதுபார்க்கும் வேலையை செய்து வந்த இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந் நிலையில் தனியார் நிறுவனம் ஒன்றில் சேவையாற்றும் 21 வயதான இளைஞர் ஒருவர், நுகேகொட - கங்கொடவில பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.  வன்முறைகளை தூண்ட உதவி ஒத்தாசை புரிந்தமை,  பொது அமைதியை பாதிக்கும் விடயங்களை சமூக வளைத் தளங்களில் பகிர்ந்தமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந் நிலையிலேயே, சமூக வளைத் தளங்கள் ஊடாக வன்முறையை தூண்டிய குற்றச்சாட்டில் 39 வயதான தொலைக்காட்சி தொகுப்பாளினி ஒருவரை நாரஹேன்பிட்டியில் வைத்து சி.ஐ.டி.யினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் வாக்கு மூலம் பதிவு செய்துகொண்டுள்ள சி.ஐ.டி. நாளை ( 20) அவர்களை நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளனர்.