(எம்.ஆர்.எம்.வஸீம் இராஜதுரை ஹஷான்)

சர்வதே நாடுகளின் ஒத்துழைப்பை பெற்று தற்போதைய நெருக்கடி நிலையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமாளிக்க முடியும்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டு மக்களை மீட்பதற்காக முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற ஒத்திவைப்பு விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கை வங்குரோத்து நிலைமையினை அடைந்துள்ளது என்பதை கவலையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசமுறை கடன்களை மீள் செலுத்த முடியாது என்பதை அறிவித்ததை தொடர்ந்து நாடு வங்குரோத்து நிலைமையினை அடைந்துள்ளது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளோம்.பாரம்பரிய அரசியல் கட்டமைப்பு முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

பாதுகாப்பு  தரப்பினரும் தற்போதைய நிலைமையில் என்ன செய்வது என்று எண்ணும் அளவிற்கு நிலைமை பாரதூர தன்மையை அடைந்துள்ளது.

2015ஆம் ஆண்டு சமூக கட்டமைப்பில் காணப்பட்ட நல்லதொரு நிலைமையை மீண்டும் தோற்றம் பெறுமா என்பது கனவாகவே உள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு குறுகிய கால மட்டத்தில் தீர்வு காண முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ கொடுக்கல் வாங்கல் நிதி கொள்கையினை மாத்திரம் செயற்படுத்தினார்.

அத்துடன் 250 மில்லியன் டொலருக்காக யுகதனவி மின்நிலையம்,பிற தரப்பினருக்கு வழங்கப்பட்டது.தற்போது யுகதனவி மின்நிலையம் தொடர்பில் எவ்வித பேச்சும் கிடையாது.அது முழுமையான மோசடி. என்று குறிப்பிட வேண்டும்.

மறுபுறம் 250 மில்லியன் டொலருக்காக கொழும்பு துறைமுகமும்,250 மில்லியன் டொலருக்காக திருகோணமலை எண்ணெய் தாங்கிகளும்,250 மில்லியன் டொலருக்காக தெற்கு திருகோணமலை சூரிய மின்னுற்பத்தியும்,500 மில்லியனுக்காக புத்தளம் தொடக்கம் பூநகரி வரையிலான சூரிய மின்னுற்பத்தி திட்டமும் தனி தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது.முறையான பெறுகை அடிப்படையில் இவை முன்னெடுக்கப்ட்டிருந்தால் எவ்வித முறைகேடுகளும் இடம்பெற்றிருக்காது.

பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச நாடுகளினதும்,நிறுவனங்களினதம் ஒத்துழைப்பை பெற்று தற்போதைய நெருக்கடியான நிலையில் இருந்து நாட்டை மீட்க அவரால் முடியும் என எதிர்பார்க்கிறோம்.

இருப்பினும் பிரதமர் பிரதி சபாநாயகர் தெரிவு விவகாரத்தில் செயற்பட்டதை போன்று மீண்டும் செயற்பட கூடாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

வெளிநாடுகளில் இருந்து உதவி பெற்று பொருளாதார நெருக்கடியினை சமாளிக்க அதிக அவதானம் செலுத்தப்படுகிறது.

ஜப்பானுக்கு  3 பில்லியனும்,சீனாவிற்கு 7 பில்லியனும்,இந்தியாவிற்கு 4 பில்லியனும் செலுத்தவுள்ள நிலையில் கடந்த மாதம் 12ஆம் திகதி கடன்களை செலுத்த முடியாது என உத்தியோகப்பூர்வமாக  அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில் எவ்வாறு அந்நாடுகள் தொடர்ந்து எமக்கு ஒத்துழைப்பு வழங்கும்.

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தவும்,அரச முறை கடன்களை மீள் செலுத்தவும் நடைமுறைக்கு பொருத்தமான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டு மக்களை மீட்பதற்காக முன்னெடுக்கப்படும் சகல திட்டங்களுக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க தயார் என்றார்.