(ரொபட் அன்டனி) 

வடக்கில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இயங்கும் மோட்டார் சைக்கிள்  குழுக்களை   இராணுவ உளவுப்பிரிவுதான்  நடத்துகின்றது என குற்றம்சாட்டப்படுகின்றதே? என  சட்டம் ஒழுங்கு அமைச்சர்  சாகல ரத்னாயக்கவிடம்   ஊடகவியலாளர்கள் நேற்று  கேள்வி எழுப்பியபோது அவர்  எவ்விதமான பதிலும் அளிக்காமல்  செய்தியாளர் மாநாட்டிலிருந்து  எழுந்து சென்றுவிட்டார்.

அமைச்சர் அவ்வாறு எழுந்து சென்றபோது    கேள்விக்கான பதிலை  ஆம் என்று எடுத்துக்கொள்ளவா? அல்லது இல்லை என்று எடுத்துக்கொள்ளவா என  ஊடகவியலாளர்கள் மீண்டும்   கேள்வி  எழுப்பிய போது "" நான் ஒன்றும் கூறவில்லையே""   என்று தெரிவித்த அமைச்சர் சிரித்தவாறே  நடந்து சென்றுவிட்டார். 

 வாராந்த  அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.  இதன்போது  வடக்கில்  அண்மையில்  பல்கலைக்கழக  மாணவர் இருவர் கொல்லப்பட்டமை தொடர்பில்  சரமாரியான கேள்விகள்  ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்டன.  இதன்போதே அமைச்சர் செய்தியாளர் சந்திப்பின்  இடைநடுவில்  எழுந்து சென்றார்.