மறைந்த பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்களின் நினைவுப்பகிர்தல் நிகழ்வொன்று கடந்த 8ஆம் திகதி, கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் உள்ள சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது. 

கொழும்பு தமிழ்ச் சங்கத் தலைவரும் சட்டத்தரணியுமான நடராஜர் காண்டீபன் தலைமையேற்று, நிகழ்வை தொகுத்து வழங்கினார். 

ஆரம்ப நிகழ்வாக பேராசிரியர் சோ. சந்திரசேகரம் உருவப்படத்துக்கு அவரது மகன் திரு. தயாளன் சந்திரசேகரம் பூமாலை அணிவித்து, தீபமேற்றி, மலர் தூவி வணங்கியதை தொடர்ந்து, சபையினரும் மரியாதை செலுத்தினர்.

அடுத்து, கொழும்பு இந்துக் கல்லூரி மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். 

அடுத்து நிகழ்வுக்கு வருகை தந்திருந்த பேராசிரியர் வி.டி. தமிழ்மாறன் (முன்னாள் பீடாதிபதி - கொழும்பு பல்கலைக்கழக சட்டபீடம்), முனைவர் உ.நவரத்தினம் (ஓய்வுநிலை பணிப்பாளர் - தேசிய கல்வி நிறுவகம்), பேராசிரியர் திரு. குறிஞ்சி வேந்தன் (தமிழ்நாடு, இந்தியா) திரு. மா. கணபதிப்பிள்ளை (ஓய்வுநிலை பிரதி அதிபர் - றோயல் கல்லூரி), தவத்திரு சக்திவேல் அடிகளார் (சமூக செயற்பாட்டாளர்), திரு. எம்.எஸ்.எம். முகூதார் (ஓய்வுநிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர் - மேல் மாகாணம்), பேராசிரியர் இராஜலட்சுமி சேனாதிராஜா (கொழும்பு பல்கலைக்கழகம்), திரு. தெ. மதுசூதனன் (கல்விசார் இதழாசிரியர்) ஆகியோர் பேராசிரியர் பற்றிய தமது நினைவலைகளை கருத்துரைகளாக பகிர்ந்துகொண்டனர். 

பேராசிரியர் சபா ஜெயராசா (தகைசால் ஓய்வுநிலைப் பேராசிரியர் - யாழ்ப்பாண பல்கலைக்கழகம்) மற்றும் மூத்த ஊடகவியலாளரும் முன்னாள் தினக்குரல் தலைமை ஆசிரியருமான திரு. வீ. தனபாலசிங்கம் ஆகியோரும் நிகழ்வில் கருத்துரை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தபோதும் இருவரும் நிகழ்வுக்கு சமுகமளிக்கவில்லை. 

எனினும், சபா ஜெயராசா அவர்கள் அனுப்பிவைத்த தனது கருத்துரை பிரதியானது,  முதலாவது கருத்துரையாக தொகுப்பாளரால் சபையினர் முன்னிலையில் வாசிக்கப்பட்டதை தொடர்ந்து ஏனைய அதிதிகளின் கருத்துரைகள் இடம்பெற்றன. அவற்றின் சுருக்கத் தொகுப்பு இங்கே....

திரு. சபா ஜெயராசா (குறிப்புரை):

"சமூகத்தின் அடித்தளத்தினர், பிடிப்பு நிலையினர், தொழிலாளர், பெருந்தோட்ட உழைப்பு மாந்தர் முதலான உழைக்கும் மக்களின் விடிவுக்கும் வாழ்வின் மாற்றத்துக்கும் கல்வியை கையில் எடுக்க முடியும் என்கிற கருத்தியல் கொண்டவர், பேராசிரியர். அந்நாளில் பேராதனை பல்கலைக்கழகத்துக்கு மகிழ்ச்சி விசையை கொடுக்கும் விரிநிலை ஆளுமையாகவும் சிறந்த மாணவராகவும் இருந்தார். அங்குள்ள மண்டபத்தின் ஒரே அறையில் நானும் அவரும் தங்கியிருந்து, ஒரே கற்கைநெறியை பயின்று, பின்னர் ஒரே துறையில் பேராசிரியரானது முக்கிய நிகழ்வாகும்." 

"அக்காலத்தில் கல்வியியல் சிறப்பு பட்டநெறி பல்கலைக்கழகத்தில் இல்லாதபோது, அப்பாடநெறி மேலைநாட்டு பல்கலைக்கழகங்களில் pedagogy எனும் பெயரில் வழக்கத்தில் இருந்தது. அப்பட்டநெறி இலங்கையில் பேராசிரியர் ஜே.ஈ. ஜெயசூரிய அவர்களால் பல்கலையில் தொடங்கப்பட்டபோது, அந்த கடினமான கற்கைநெறிக்கு பேராசிரியரும் நானும் தெரிவு செய்யப்பட்டிருந்தோம்..." 

"அக்காலத்தில் பல்கலைக்கழகம் இடதுசாரி இயக்கங்களின் களமானதால் மாக்ஸியம் தொடர்பான வகுப்புகளை மூத்த மாணவர்கள் நிகழ்த்தினர். இதனூடாகவே பேராசிரியர் சந்திரசேகரம் தனது மாக்ஸிய அறிவை விரிவாக்கிக்கொண்டார்..." 

"பொதுமக்களை நோக்கிய அறிவுப்பரவலை (dissemination of knowledge) முன்னெடுப்பதில் கைதேர்ந்த பேராசிரியர், அதற்கு எடுத்துக்காட்டாக வீரகேசரி, தினக்குரல், ஞானம் முதலான நாளிதழ்களில் எழுத்துப்பணியை மேற்கொண்டார். அதுமட்டுமன்றி பெண்கல்வி, சமூகம், தேசியம், தமிழ் சார்ந்த பணிகளின் தொகுப்பாகவும் விளங்கியவர் பேராசிரியர்...." 

திரு. இரா. குறிஞ்சி வேந்தன்:  

"2015இல் நான் இலங்கை வந்துவிட்டு இந்தியாவுக்கு திரும்புகையில், எனக்கு பொன்னுத்துரை ஐயா சில சஞ்சிகைகளை கொடுத்தார். விமானப் பயணத்தின்போது நான் அவற்றை வாசித்தேன். அதில் ஒரு கட்டுரை, கற்பவர்களின் சிரமங்களை காட்டுவதாக அமைந்திருந்தது. 

மிக வித்தியாசமான பார்வையில் அக்கட்டுரையை எழுதியவர் பேராசிரியர் சந்திரசேகரம். அவரைப் பற்றி அப்போது எனக்கு தெரியாது. மீண்டும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் சிலைதிறப்பு விழாவுக்கு வந்திருந்தபோதே அவரை சந்தித்தேன்." 

"பண்புமிக்க பேராசிரியர் நம்மிடையே வாழ்ந்திருக்கிறார் என்பதையிட்டு நமக்கு பெருமையே. ஒரு பேராசிரியருக்கு, அவரிடத்தில் கல்வி பயின்றவர்கள் அவர் விதைத்த விதையை காலம் முழுக்க கடத்திச் செல்கிற பண்பை இலங்கையில் மட்டுமே நான் காண்கிறேன். தமிழ்நாட்டிலும் இந்த மரபு இல்லை...." 

"லிபியா நாட்டின் முடிசூடா மன்னனாக வாழ்ந்த கடாபியின் மறுபக்கத்தை தமிழுலகுக்கு அறியத்தந்தவர் சோ. சந்திரசேகரம். அந்நூலை லிபிய மொழியிலிருந்தே தமிழில் அவர் மொழிபெயர்த்திருக்க வேண்டும். அடுத்து, 'இலங்கை இந்திய வரலாறு' எனும் நூல் - இந்திய தமிழர்களுடைய வரலாற்றை யாரும் இதுவரை எழுதியதில்லை. எந்த தமிழரும் செய்யாத சாதனை இது..." 

தவத்திரு சக்திவேல் அடிகளார்: 

"1989இல் எழுதிய 'இலங்கை இந்திய வரலாறு' நூலின் கடைசிப் பந்தியில், 'இலங்கை பல்லின மக்களை கொண்ட நாடு என்ற கருத்தை இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடல் மூலம் இலங்கை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அதற்கேற்ப சகல இன மக்களும் சமத்துவ உணர்வுடன் வாழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டியது, இலங்கை அரசின் பொறுப்பாகும். இனப் பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்படுவதன் மூலமே இந்திய வம்சாவளி தமிழர் பாதுகாப்புடன் வாழ முடியும். மாகாண சுயாட்சி வளப்படுத்தப்பட்டு இந்திய வம்சாவளி தமிழர்கள் ஆட்சி நிர்வாகத்தில் இதுவரை பெற்றிராத உரிமைகளை பெற வேண்டும்...' என்று குறிப்பிடுகிறார். இதுதான் பேராசிரியரது அரசியல் நிலைப்பாடு." 

"அந்தந்த பிராந்தியங்களில் உள்ள மக்களின் வாழ்வு, கலாசாரம், சமயம், பண்பாடு, வரலாறு காக்கப்பட வேண்டுமாயின், அவர்களுக்கென தனித்துவமாய் ஒரு பல்கலைக்கழகம் வேண்டும் என்றவாறு மலையக பல்கலைக்கழகத்தின் தேவையை வெளிப்படுத்துகிறார். 

அத்துடன் நாட்டு மக்கள் கௌரவத்தோடு வாழ, அவர்கள் அரசியல் அறிவு மற்றும் கல்வியறிவை கொண்டிருக்க வேண்டும் என்ற நோக்கமுடையவர். இந்த நோக்கத்தை, அவரது கனவை நாம் எவ்வாறு நிறைவேற்றப் போகிறோம்?"

திரு. எம்.எஸ்.எம். முகூதார்:

"பேராசிரியர் திரு. முத்துலிங்கத்தை தவிர்த்துவிட்டு இவரை பற்றி பேச முடியாது. ஏனென்றால், முத்துலிங்கத்தின் மறுசாயல் சோ. சந்திரசேகரம்..." 

"1968இல் எங்களது முதல் சந்திப்பு இடம்பெற்றது... பேராதனை பல்கலைக்கழகத்தில் அவர் விரிவுரையாளர். நான் மாணவன். 1990இல் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு இடம்பெயர்ந்து வந்த பின்னரே எனக்கும் பேராசிரியருக்குமான நெருக்கம் அதிகமானது..."   

"அந்நாளில் அவரது நெருங்கிய நண்பராக இருந்தவர் பேராசிரியர் உசைமியா. மாணவர்களின் கல்வி மற்றும் பொருளாதார நிலை குறித்து இருவரும் அடிக்கடி சிந்தித்து கலந்தாலோசிப்பர்." 

"முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களுக்கென கிழக்கு மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகங்கள் உள்ள போதும், மலையக மக்களின் கல்வி வளத்துக்கென ஒரு பல்கலைக்கழகம் வேண்டும் என்பது பேராசிரியரின் வாழ்நாள் எதிர்பார்ப்பாக இருந்தது. அது அவர் காலத்தில் நிறைவேறாமல் போனது கவலைக்குரிய விடயமாகும்..."

பேராசிரியர் திருமதி. இராஜலட்சுமி சேனாதிராஜா: 

"ஓர் அன்பான, அறிவான மனிதரை நாம் இழந்திருக்கிறோம்." 

"1990இல் பல்கலைக்கழக படிப்பை முடித்த பின்னரான சந்தர்ப்பத்தில் இந்து கலாசார அமைச்சில் நான் பேராசிரியரை முதல் முறையாக சந்தித்தேன். அங்கு சமூக ஆலோசகராக வந்திருந்த அவரோடு பின்னர் இணைந்து பணியாற்றினேன்..." 

"கிழக்கு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளருக்கான வெற்றிடம் இருப்பதை விளம்பரம் மூலம் அறிந்த நான், பேராசிரியரின் பணித்தலுக்கு அமையவே விண்ணப்பித்தேன். வீட்டுச்சூழல் மற்றும் பிற காரணங்கள் எனது கல்வி சார் பயணத்துக்கு தடையாக இருந்த நிலையிலும், பேராசிரியரின் ஆலோசனையும் ஊக்கப்படுத்தலுமே என்னை வழிநடத்தியது." 

"1997இல் கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆனேன். அதன் பிறகும் பேராசிரியரோடு சுமுகமான நட்பு தொடர்ந்தது." 

"பெருந்தோட்ட மக்களின் எழுத்தறிவு, அவர்களது பிரச்சினைகள், அவற்றால் எதிர்கொள்ளப்படும் பொருளாதார, சமூக தாக்கங்கள் குறித்து பேராசிரியர் எழுதிய 'உழைப்பால் கல்வியை உயர்த்துவோம்' என்ற மொழிபெயர்ப்பு நூல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இதன் ஆங்கிலத்திலான மூலநூலை வாசிக்கிறபோது ஏற்பட்ட அதே உணர்வு இத்தமிழ் நூலை வாசிக்கும்போதும் ஏற்படுகிறதாயின், அவரது எழுத்தின் மேன்மை அத்தகையது." 

திரு. தெ.மதுசூதனன்:

"1985ஆம் ஆண்டில் சென்னையிலும், 1990க்கு பிறகு கொழும்பிலும் நாங்கள் சந்தித்துக்கொண்டோம். சுதந்திர ஊடகராக மாற்றுச் சிந்தனை எழுத்துக்களை தாங்கி நிற்கும் குழாமில் நான் இயங்கிக்கொண்டிருந்த காலமது. 

அப்போது புனைபெயரில் பேராசிரியர் பல கட்டுரைகளை எழுதி வந்தார். இந்திரபாலாவின் ஆய்வு நெறிமுறை குறித்து பேராசிரியர் மூன்று கட்டுரைகளை புனைபெயரில் வெளியிடுமாறு எழுதிக் கொடுத்தார். அவை பிரசுரமாகின." 

"பெரும்பாலும் எழுதும்போது 'நான்' என்ற சொல்லை பேராசிரியர் பயன்படுத்துவதில்லை. 'நான்' என்பதை 'நாம்' என்று எழுதலாமே என்பார்."  

"கடைசியாக, அவர் முஸ்லிம் கல்வி தொடர்பான ஒரு நூலை எழுதி முடித்திருந்தார். அது வெளியிடப்பட வேண்டிய ஒன்றே. முஸ்லிம் சமூகத்தின் தனித்தன்மை, அதன் சிறப்புகள் கல்விக்கூடாக அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்பது பற்றி மிக நுட்பமாக விபரித்திருக்கிறார். அதனை நூலாக்கம் செய்வதொன்றே நாம் அவருக்கு ஆற்றும் நற்கடமையாகும்."

பேராசிரியர் வி.‍டி. தமிழ்மாறன்: 

"1976இல் யாழ்ப்பாணத்தில் உள்ள சுபாஷ் ஹோட்டலில் முதல் முறை பேராசிரியர் சந்திரசேகரம் அவர்களை ஒரு பல்கலைக்கழக மாணவராக சந்தித்தேன். நான் விரிவுரையாளரான பிறகு 1984இல் என்னை முதல் முறையாக இந்தியாவுக்கு அழைத்துச் சென்றவர் பேராசிரியர் தான். மதுரையில் நான் அவரது வீட்டில் தங்கிய நாட்களே அதிகம். அனைவரையும் அந்தஸ்து பேதமின்றி  உபசரிப்பதும், கல்விசார் அறிவுரைகளை வழங்குவதும் அவரது இயல்பான குணங்கள்..." 

"1983 இனக் கலவரம் அவருக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, அவரது குடும்ப பொருளாதார நிலையும் பாதிப்புற்றிருந்தது. அவர் தனது மனவலியை மறைப்பதற்காகவே தனக்குள் நகைச்சுவை உணர்வை புகுத்திக்கொள்ளவும் செய்தார்..." 

"பல்கலைக்கழக பீடங்களுக்கு இடையேயான அந்தஸ்து பேதம் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களிடத்திலும் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில், இளம் சட்டபீட விரிவுரையாளரான என்னை கலைப்பீட பகுதிக்கு அழைத்துச் சென்று கலந்துரையாடியவர், பேராசிரியர். அங்கேயும் 'லோ டேபிள்' - 'ஹை டேபிள்' என்ற பிரிவினையை பார்க்க முடிந்தது. இலங்கையின் அரசியல் சமூக முறையில் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தியவர்கள் அமர்கிற லோ டேபிளில் தான் பேராசிரியர் எப்போதும் அமர்வார். அவரது நட்புறவாலேயே பேராசிரியர் குணசிங்க, பேராசிரியர் ஒஸ்மன் ஜெயரட்ன போன்றோரின் அறிமுகத்தை கனிஸ்ட விரிவுரையாளரான நான் பெற்றேன். 

தற்போது அனைத்திலங்கை பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளராக நான் தெரிவு செய்யப்பட்டமைக்கு காரணமானவர், பேராசிரியர் ஒஸ்மன்ட் ஜெயரட்ன. அவருக்கு என்னை அடையாளம் காட்டியவர் பேராசிரியர் சந்திரசேகரம் அவர்களே. அத்துடன் அவரால் தான் மலையக அமைப்புகளின் நேரடி தொடர்பினையும் நான் பெற்றேன்....."

முனைவர் உ. நவரத்தினம்: 

"மூன்று தசாப்த காலத்துக்கு மேலாக நான் அவரோடு தொழில் துறை ரீதியில் நட்பு கொண்டிருந்தேன்..." 

"இலங்கையில் உள்ள தமிழ்மொழி மூலம் கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களையும் தாண்டி, ஆற்றலை மேம்படுத்துவதற்கு அவர் பல பணிகளை செய்துள்ளார். மிக விசேடமாக, ஒப்பீட்டுக் கல்விமுறையை பின்பற்றி வந்தவர், பேராசிரியர். 

Knowledge Economic - அறிவுப் பொருளாதாரத்தை விருத்தி செய்யவும் அதன் பயன்களை தமிழ் மக்களுக்கு வழங்கவும் பலவாறு முயற்சித்தவர்." 

"கொரோனா தொற்று நாட்களில் நான் தனிமைப்படுத்தல் சூழ்நிலையை சந்தித்தபோது  எனக்கான உணவினை தினமும் அவரும் அவரது மனைவியும் கொண்டுவந்து தந்தனர். அவரது மனிதாபிமானம் மிக உயர்ந்த பண்பு." 

"வாழ்நாளின் இறுதி வரை உலகில் எந்த மூலைக்குச் சென்றாலும், தனது ஓய்வு நேரத்தை எழுத்தாக்கத்தில் செலவழிப்பவராகவே இருந்தவர்... அவர் இல்லை என்பதை இன்னும் எம்மால் ஏற்க முடியவில்லை..." 

திரு மா. கணபதிப்பிள்ளை:

"பேராசிரியர் முத்துலிங்கம் வீட்டில் பல முறை நான் பேராசிரியர் சந்திரசேகரம் அவர்களை சந்தித்திருக்கிறேன்." 

"கொழும்பு பல்கலைக்கழகத்தில் இணைந்து முதல் பட்டத்தை பெற்று, 1989இல் டிப்ளோமா கற்கைநெறியை ஆரம்பித்தபோது பேராசிரியரிடம் கல்வி பயிலச் சென்ற மாணவன் நான்.." 

"பேராசிரியர் முத்துலிங்கம் வெளியிட்டு வந்த 'கல்வி' இதழில் சந்திரசேகரம் அவர்கள் ஒப்பீட்டுக் கல்வி தொடர்பான கட்டுரைகளை எழுதியவர்.... மொழிபெயர்ப்பு ஆற்றல் மிக்கவர்." 

"கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபம் திறக்கப்பட்டபோது பேராசிரியர் தலைவராக இருந்தார். அக்காலத்தில் வெளியான சங்கரப்பிள்ளை பற்றிய நூலுக்கு அணிந்துரை எழுதிய பெருமையும் அவருக்கே உண்டு..." 

  இக்கல்வியியலாளர்களது கருத்துரைகளில் காணப்பட்ட பொதுவான விடயம்,  மலையகத்துக்கென ஒரு பல்கலைக்கழகம் இல்லாதது குறித்த சோ.சந்திரசேகரத்தின் ஆதங்கமும், இலங்கை கல்விநிலையில் தாம் எதிர்பார்க்கும் சில மாற்றங்களையுமே ஆகும்.

அத்தோடு பேராசிரியர் மிகச் சிறந்த 'கலாரசிகர்' - தென்னிந்திய பொற்கால திரைப்படங்களின் கதாநாயகர்களை விட வில்லன் கதாபாத்திரங்களை ஏற்பவர் - அவர்களது வசனங்களை அதிகமாக மனதில் அசைபோடுபவர் என்பதை கருத்துரைகளின் மூலம் அறிய முடிந்தது.

இசை மற்றும் பழம்பெரும் சினிமா பாடல்கள் மீது அவர் கொண்டிருந்த ஈடுபாட்டையும் சில பாடல் வரிகளை மேற்கோள் காட்டி, தங்களது பழைய சுகானுபவப் பகிர்தலாக அமைந்த நிகழ்வானது, கொழும்புத் தமிழ்ச் சங்க பொதுச் செயலாளர் திரு. ஆழ்வாப்பிள்ளை கந்தசாமியின் நன்றியுரையோடு நிறைவுபெற்றது.

- மா. உஷாநந்தினி

(படங்கள்: எஸ்.எம். சுரேந்திரன்)