(நெவில் அன்தனி)

இத்தாலியில் நடைபெற்ற சிட்டா டி சவோனா சர்வதேச 2022 மெய்வல்லுநர் போட்டியில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சியில் பங்குபற்றிய இலங்கையின் குறுந்தூர ஓட்ட சாதனையாளர் யுப்புன் அபேகோன் 4ஆம் இடத்தைப் பெற்றார்.

சவோனாவில்  18 ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியை 10.16 செக்கன்களில் யுப்புன் அபேகோன் நிறைவு செய்தார்.

தெற்காசியாவின் அதிவேக குறுந்தூர ஓட்ட வீரர் என்ற பெருமையைப் பெற்றவரும் இலங்கை தேசிய சாதனைக்கு சொந்தக்காரருமான யுப்புன் அபேகோன் தனது சொந்த தேசிய சாதனையை 0.01 செக்கனினால் சமன்செய்ய தவறினார்.

ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இந்த வருடம் முதல் தடவையாக பங்குபற்றிய யுப்புன், தகுதிகாண் சுற்றில் சிறந்த நேரப் பெறுதியைப் பதிவுசெய்தார்.

முதலாவது தகுதிகாண் சுற்றில் ஒலிம்பிக் சம்பியன் லெமொன்ட் மார்செல் ஜேக்கப்ஸுடன் பங்குபற்றிய யுப்புன் அபேகோன் 100 மிற்றரை 10.04 செக்கன்களில் ஓடி முடித்து 2ஆம் இடத்தைப் பெற்று இறுதிச் சுற்றுக்கு தெரிவானார்.

ஜேக்கப்ஸ் 9.99 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்தார்.

ஆனால், காற்றின்வேகம் நேர்த்திசையில் மணிக்கு 2.3 மீற்றராக இருந்ததால் அவர்கள் இருவரதும் நேரப் பெறுதிகள் அங்கீகரிக்கப்படவில்லை.

இதேவேளை, இரண்டு தகுதிகாண் சுற்றுகள் முடிவில் யுப்புன் 2ஆம் இடத்தில் இருந்த போதிலும் இறுதிப் போட்டியில் அவரால் சாதிக்க முடியாமல் போனது.

டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் முற்றிலும் எதிர்பாராதவிதமாக இரட்டைத் தங்கம் வென்ற இத்தாலி வீரர் லெமொன்ட் மார்செல் ஜேக்கப்ஸ்,  இறுதிப் போட்டியை 10.04 செக்கன்களில் நிறைவு செய்து முதலாம் இடத்தைப் பெற்றார்.

ஐவரி கோஸ்ட் வீரர் ஆர்த்தர் சிசே 2ஆம் இடத்தையும் (10.10 செக்.), பிரான்ஸ் வீரர் ஜிம்மி விக்கோட் 3ஆம் இடத்தையும் (10.12 செக்.) பெற்றனர்.