(என்.வீ.ஏ.)
மும்பை, டி வை பட்டில் விளையாட்டரங்கில் புதனன்று (18)ஆரம்ப விக்கெட் சாதனையுடன் கணிசமான மொத்த எண்ணிக்கைகள் குவிக்கப்பட்டதும் கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்தியதுமான ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை 2 ஓட்டங்களால் வெற்றி கொண்ட லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ், ப்ளே ஓவ் சுற்றில் விளையாட தகுதிபெற்றது.

இதன் மூலம் இந்த வருட ஐபிஎல் போட்டியில் அறிமுகமாகிய குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் ஆகியன முதல் 2 அணிகளாக ப்ளே ஓவ் சுற்றுக்குள் முன்னேறியுள்ளன.
குவின்டன் டி கொக் குவித்த ஆட்டமிழக்காத அபார சதமும் பரபரப்புக்கு மத்தியில் மார்க்ஸ் ஸ்டொய்னிஸ் கடைசி ஓவரின் கடைசி 2 பந்துகளில் வீழ்த்திய விக்கெட்களும் லக்னோவை வெற்றிபெறச் செய்தன.
அது மட்டுமல்லாமல் குவின்டன் டி கொக்கும் கே. எல். ராகுலும் ஆரம்ப விக்கெட்டுக்கான ஐபிஎல் வரலாற்றுச் சாதனையையும் நிலைநாட்டினர்.
லக்னோவினால் நிர்ணயிக்கப்பட்ட 211 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 208 ஓட்டங்களைப் பெற்று 2 ஓட்டங்களால் தோல்வி அடைந்து ப்ளே ஓவ் வாய்ப்பை தவறவிட்டது.
மூன்றாவது ஓவரில் 2 விக்கெட்களை இழந்து 9 ஓட்டங்களை மாத்திரம் பெற்று பெரும் இக்கட்டான நிலையில் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அதன் பின்னர் கடைசிவரை போராட்டக் குணத்துடன் விளையாடி போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நிட்டிஷ் ரானா (22 பந்தகளில் 42), அணித் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் (29 பந்துகளில் 50) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 27 பந்துகளில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
ஷ்ரேயாஸ் ஐயர் 4ஆவது விக்கெட்டில் மேலும் 66 ஓட்டங்களை சாம் பில்லிங்ஸுடன் (36) பகிர்ந்தார்.
அண்ட்ரே ரசல் (5) ஆட்டமிழந்தபோது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 16.4 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
கொல்கத்தாவின் வெற்றிக்கு 20 பந்துகளில் மேலும் 61 ஓட்டங்கள் தெவைப்பட்டதால் லக்னோ இலகுவாக வெற்றிபெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ரிக்கு சிங் 15 பந்துகளில் 4 சிக்ஸ்கள், 2 பவுண்ட்றிகளுடன் 40 ஓட்டங்களை விளாசி சுனில் நரேனுடன் 19 பந்துகளில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை அண்மிக்கச் செய்தார்.
மார்க்ஸ் ஸ்டொய்னிஸ் வீசிய 20ஆவது ஓவரின் முதல் 4 பந்துகளில் 4, 6, 6, 2 என 18 ஓட்டங்களை ரிக்கு சிங் பெற்றுக்கொடுத்தார். இதனை அடுத்து கடைசி 2 பந்துகளில் வெற்றிக்கு மேலும் 3 ஓட்டங்களே தேவைப்பட்டது.
ஆனால் அடுத்த பந்தில் ரிக்கு சிங் உயர்த்தி அடித்த பந்தை நோக்கி சுமார் 30 யார் தூரம் ஓடிய எவின் லூயிஸ் ஒற்றைக் கையால் (இடது) பிடி எடுத்து போட்டியில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தினார்.
கடைசிப் பந்தில் உமேஷ் யாதவ்வை போல்ட் செய்த மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் தனது அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
பந்துவீச்சில் மோஷின் கான் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 210 ஓட்டங்களைக் குவித்தது.
குவின்டன் டி கொக், கே. எல். ராகுல் ஆகிய இருவரும் பகிர்ந்த 210 ஓட்டங்கள், ஐபிஎல் வரலாற்றில் அதிசிறந்த ஆரம்ப விக்கெட் இணைப்பாட்ட சாதனையாக அமைந்தது.
அத்துடன் ஐபிஎல் வரலாற்றில் ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாக 200 ஓட்டங்களுக்கு மேல் பெறப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.
றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக 2019இல் ஜொனி பெயார்ஸ்டோவ், டேவிட் வோர்னர் ஆகிய இருவரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சார்பாக பகிர்ந்த 185 ஓட்டங்களே ஆரம்ப விக்கெட்டுக்கான முன்னைய அதிசிறந்த இணைப்பாட்டமாக இருந்தது.
துடுப்பாட்டத்தில் ஆரம்பம் முதல் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்திய குவின்டன் டி கொக் 70 பந்துகளில் 10 பவுண்டறிகள், 10 சிக்ஸ்களுடன் ஆட்டமிழக்காமல் 140 ஓட்டங்களைக் குவித்தார்.
அணித் தலைவர் கே. எல். ராகுல் 68 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
முதல் 10 ஓவர்களில் 83 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்த லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ கடைசி 10 ஓவர்களில் 117 ஓட்டங்களைக் குவித்தது.