தமிழ் திரை உலகின் முன்னணி நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும், கதையின் நாயகனாகவும் வலம் வரும் நடிகர் யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்திற்கு 'பெரியாண்டவர்' என பெயரிடப்பட்டிருக்கிறது.

'த கிரேட் இந்தியன் கிச்சன்', 'காசேதான் கடவுளடா' ஆகிய படங்களை தயாரித்து இயக்கியிருக்கும் இயக்குநர் ஆர். கண்ணன் இயக்கத்தில் தயாராக இருக்கும் புதிய திரைப்படம் 'பெரியாண்டவர்'.

இதில் யோகி பாபு சிவன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைக்கான தேடல் தற்போது நடைபெற்று வருகிறது.

விரைவில் கதாநாயகி மற்றும் படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர் நடிகைகளை பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் வசனத்தையும், பாடல்களையும் கபிலன் வைரமுத்து எழுத, செல்லத்துரை ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு, 'பெரியாண்டவர்' படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

நகைச்சுவைக்கும், கிராபிக்ஸ் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சென்னையின் புறநகர் பகுதியில் பிரம்மாண்டமான சிவ ஆலய அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.'' என்றார்.

நடிகர் யோகி பாபு நடிப்பில் வெளியான 'கோலமாவு கோகிலா', 'கூர்கா', 'தர்மபிரபு', 'மண்டேலா' ஆகிய படங்களை தொடர்ந்து, 'பெரியாண்டவர்' படமும் அவர் கதையின் நாயகனாக நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.