கலவரத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் கைதுசெய்து சட்டத்திற்கு முன் நிறுத்தவேண்டும் - சஜித்

By Vishnu

18 May, 2022 | 09:21 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

நாட்டில் கடந்தவாரம் இடம்பெற்ற வன்முறைகளுடன்  சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் கைது செய்து சட்டத்துக்கு முன் நிறுத்த வேண்டும்.

இந்த வன்முறை சம்பவத்துடன் எமது கட்சி யாராவது சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம். அத்துடன் பிரதமர் பதவி விலகும் கூட்டத்துக்கு பின்னரே ராஜபக்ஷ் பயங்கரவாதம் தலைதூக்கியது என்பதை யாரும் மறந்துவிட முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (18) இரண்டாவது நாளாக இடம்பெற்ற கடந்த 9ஆம் திகதி கலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பிரதமர் பதவி விலகுவதை முன்னிட்டு நடந்த கூட்டத்தின் பின்னர் தான் வன்முறை வெடித்தது. எம்.பி ஒருவர் கொல்லப்பட்டார்.  

30 நாட்களுக்கு மேல் அமைதியாக நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீதான தாக்குதலின் பின்னரே வன்முறை வெடித்தது. அதனால் 9 ஆம் திகதி நடைபெற்ற அசம்பாவிதங்களுடன் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க  வேண்டும்.

அதேபோன்று 6ஆம் திகதி அவசரகால சட்டம் கொண்டுவந்து, 9ஆம் திகதி இந்த கலவரம் இடம்பெற்றதன் அடிப்படை என்ன என்ற கேள்வி எழுகின்றது. பிரதமர் பதவி விலகும் கூட்டத்தின் பின்னணியிலே ராஜபக்ஷ் பயங்கரவாதம் தலைதூக்கியது. அதன் காரணமாகவே 9ஆம் திகதி நாட்டில் கலவரம் ஏற்பட்டது. அதனை யாரும் மறந்துவிட முடியாது.

அத்துடன் கலவரத்தில் பாதிக்கப்பட்ட எம்.பிகளுக்கு வீடுகள் வழங்க முன்னுரிமை வழங்குவதாக வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியிருந்தார்.ஆனால் கேஸ் வெடிப்பு ,வயல் நிலங்கள் சேதம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நிவாரணம் வழங்கவி்ல்லை.

அவர்களுக்கே அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும். அதேபோன்று வீடுகள் அழிக்கப்பட்டதற்கு எதிராக சர்வதேச பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என பந்துல குணவர்தன கோரினார்.மனித உரிமை ஆணைக்குழுவுக்கு செல்ல வேண்டும் என்றார். ஆனால் தமிழ் ஊடகவியலாளர்கள் காணாமல் போனதற்கு எதிராகவும் லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட்டதற்கு எதிராகவும்  அங்கு சென்றவர்களை தேசத்துரோகிகள் என்றார்கள்.

காலிமுகத்திடலிலும் அலரிமாளிகைக்கு அருகிலும் நடந்த தாக்குதலின் பின்னரே வன்முறை வெடித்தது. அந்த தாக்குதலுக்காக மாலை நடந்த தாக்குதலை நியாயப்படுத்த முடியாது. இந்த வன்முறை சம்பவங்களில் எமது கட்சியினர் தொடர் பட்டிருக்கவில்லை. அவ்வாறு யாராவது தொடர்பட்டிருந்தால் அவர்களுக்கு கட்சி அடிப்படையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்போம்.

மேலும் தற்போதைய நெருக்கடி நிலையில் இருந்து மீள்வதற்காக இலங்கையில் முதலீடு செய்ய வருமாறு புலம்பெயர்ந்து வாழும் சகல இலங்கையர்களையும் கேட்டுக்கொள்கின்றேன்.  அத்தோடு வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் தமது பணத்தை உண்டியல் போன்ற முறைகளில் அல்லாமல் நேரடியாக அனுப்புமாறும் கேட்டுக்கொள்கின்றேன். மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட நாம் தயாராக இருக்கிறோம்.

அத்துடன் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க முன்வருமாறும் அரசின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்குமாறும் பிரதமர் அழைப்பு விடுத்தார். மக்களின் நலனுடன் தொடர்புள்ள விடயங்களுக்கு ஒத்துழைக்க எமது தரப்பு தயாராக உள்ளது. ஆனால் புதிய கவாசாரம் தொடர்பில் பேசுவதுபோல் அதனை செயலிலும் காட்டவேண்டும். பிரதி சபாநாயகர் தெரிவின்போது புதிய மாற்றத்துக்காக நாங்கள் ராேஹினி கவிரத்னவை பிரேரித்தோம். ஆனால் பெண்கள் தொடர்பில் விராப்பு பேசியவர்கள், ராஜபக்ஷ் ஒருவரின் பெயர் பிரேரிக்கப்பட்டதுடன் அதனை நிராகரிக்கவில்லை. அதனை ஏற்றுக்கொள்ள இவர்களுக்கு முடியாமல் போனது.

அதேபோன்று ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளிப்பதாக எதிர்க்கட்சியில் இருக்கும்போது ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார். ஆனால் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்ட பின்னர் அந்த பிரேரணைக்கு எதிராக வாக்களித்தார்.

கோத்தாபய ராஜபக்ஷ் மற்றும் ராஜபக்ஷ் குடும்பத்தினர் வீட்டுக்கு செல்லவேண்டும் என மக்கள் கோரி வருகின்றனர். மக்களின் கோரிக்கையை உறுதிப்படுத்தவே நாங்கள் ஜனாதிபதி்க்கு எதிரான அதிருப்தி பிரேரணையை கொண்டுவந்தோம். ஆனால் ஜனாதிபதியுடன் இருப்பது யார். 

நாட்டு மக்களுடன் யார் இருக்கின்றார்கள் என்பது வாக்களிப்பின் மூலம் தெரிந்துகொள்ள முடியுமாகின்றது.

அதேபோன்று புதிய கலாசாரம் தொடர்பில் கதைக்கின்றனர். ஆனால் நேற்று (17.05.2022) சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சபைக்கு தலைமை தாங்க தயாராக இருக்கும்போது, அமைச்சுப்பதவி வகித்த ஆளும் கட்சி உறுப்பினர் சான்த்த பண்டாரவை அழைத்து சாணக்கியன் எம்.பியை அகெளரவப்படுத்தி இருக்கின்றார்கள். இதுதானா இவர்களின் புதிய அரசியல் கலாசாரம்.

அத்துடன் நேற்று (நேற்று முன்தினம்) ஆளும் கட்சி கூட்டத்தை படம் எடுத்தார்கள் என தெரிவித்து பாராளுமன்ற ஊடகவியலாளர்கள் இருவரை தாக்கி இருக்கின்றார்கள். இதுதானா புதிய கலாசாரம்? என கேட்கின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right