எஸ்.ஜே.பிரசாத்
"அல்ககோல்" என்ற வார்த்தை மதுவுடன் தொடர்புபடுத்தி மாறி மாறி பயன்படுத்தப்படுகிறது. இலங்கையில் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் மதுபானக் கடைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
இந்த வார்த்தை இந்தியாவிலிருந்து நம் மொழியில் சேர்க்கப்பட்டிருக்கலாம். கி.மு 3000–-2000 க்கு இடையில் இந்தியாவில் அரிசியிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு வகை மதுபானம் பாவனையில் இருந்துள்ளது,
அது "சூரா" என்று அழைக்கப்பட்டது. கி.மு. 2700 இல் பாபிலோனியர்கள் "போதையின் தேவதையை" வணங்கினர் என்பதற்கும் பண்டைய சான்றுகள் உள்ளன.
பண்டைய இலங்கையில் பல்வேறு வகையான மதுபானங்கள் பயன்படுத்தப்பட்டதற்கும், அரசர்கள் கூட குடித்துவிட்டு போதையில் இருந்ததற்கும் பல ஆதாரங்கள் உள்ளன.
எனினும், ஐரோப்பியப் படையெடுப்புகளுக்குப் பின்னர் இலங்கையில் மதுபான உற்பத்தியும் வர்த்தகமும் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டன.
போர்த்துக்கேயர், டச்சு மற்றும் ஆங்கிலேயர்களால் இலங்கை சமூகத்தில் மது பிரபலப்படுத்தப்பட்டது என்பது மறுப்பதற்கில்லை.
இலங்கையில் மதுபான உற்பத்தி மற்றும் விற்பனையை ஐரோப்பியர்கள் முறைப்படுத்தாத வரை, நாட்டில் மதுபானம் எப்படி தயாரித்தார்கள் என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
கித்துல், தேங்காய் துருவல், கறிவேப்பிலை என நம் சமூகத்தில் இதிலிருந்து தயாரிக்கப்பட்ட பானங்கள் தான் இருந்துள்ளன. ஆனாலும் இவை போதைத் தரக்கூடியவையா என்பது கேள்விதான்.
ஆனால் ஐரோப்பியர்கள் தான் நம் நாட்டுக்கு வைன், பியர் மற்றும் சாராயத்தை அறிமுகப்படுத்தினர்.
இவ்வாறான பானங்கள் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே வேறு நாடுகளின் வர்த்தகர்களால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கக் கூடும்,
ஆனால் அவை பொதுச் சமூகத்தில் இருந்ததற்கான சான்றுகள் இல்லை. சில சமயங்களில் வைன், பியர் குடிப்பது அரசர் உள்ளிட்ட உயர்குடியினருக்கு மட்டுமே அனுபவமாக இருந்திருக்கலாம்.
போர்த்துக்கேயர்கள் மதுபான வியாபாரம் செய்தார்கள் என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் இல்லை.
ஆனால் டச்சுக்காரர்கள் நாட்டில் தொடர்ந்து சாராயம் உற்பத்தி செய்தனர் என்று சொல்லப்படுகின்றது.
1796 ஆம் ஆண்டு இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய பின்னர், மதுபான ஆலை மற்றும் சில்லறை வர்த்தகம் ஆகிய இரண்டையும் இலங்கையர்களிடமே ஒப்படைத்ததன் மூலம் அது விரைவான விரிவாக்கத்திற்கு வழிவகுத்தது மற்றும் அரசாங்க வருமானத்தின் முக்கிய ஆதாரமாக மாறியது.
சாராய உற்பத்தியும் விற்பனையும் ஒரு இலாபகரமான வணிகமான மாறியது. இது பல வருட கடின உழைப்பு இன்றி சிறிய மூலதனத்துடன் தொடங்கப்பட்டது.
இதனால் பல உள்ளூர்வாசிகள் சாராயத் தொழிலுக்குத் திரும்பினார்கள்.
ஆனால் பெரும்பாலான இலாபங்கள் மொத்த விற்பனையாளர்களுக்கும் சில்லறை விற்பனையாளர்களுக்கும் சென்றது.
மேலும் உற்பத்தியாளர் எப்போதும் குறைந்த வருமானத்தை தான் ஈட்டுகி றார்கள் என்றும் கூறப்படுகிறது.
ஆங்கிலேயர்கள் சாராயத்தின் உற்பத்தி, மொத்த விற்பனை மற்றும் சில்லறை வர்த்தகத்தை உள்ளூர் மக்களுக்கு வழங்கும்போது, அரச ஊழியர்களுக்கும் அதில் வாய்ப்பளித்துள்னர்.
சாராய சில்லறை வர்த்தகத்தில் இலங்கையர்கள் அதிக இலாபம் ஈட்டிக் கொண்டனர்.
ஆனால் உழைக்கும் ஏழைகள் மத்தியில் அதற்கான சந்தை இல்லை. கிராமப்புறங்களில் அதற்கான சந்தை இல்லை. கொழும்பு மேற்கு, கண்டி மத்திய, காலி மற்றும் யாழ்ப்பாணம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் இதற்கான சந்தை அமைந்திருந்ததாம்.
சாராய விற்பனைக்குத் தேவையான தொகை அரசாங்க அதிபரால் வழங்கப்பட்டது. அதுவும் ஏலம் மூலம். இந்த ஏலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விலைமனுக்கள் கண்காணிக்கப்பட்டு, அனுமதிக்காக கொழும்பு காலனித்துவ செயலாளரிடம் தெரிவிக்கப்பட்டது.
தவறணையின் வாடகையை கச்சேரிக்கு மாத தவணையாக செலுத்த வேண்டும். எனவே, அடிப்படை மூலதனம் இல்லாமல் கூட, வியாபாரத்தில் யார் வேண்டுமானாலும் ஈடுபடலாம்.
மதுபான தொழில் முற்றிலும் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்டது. சாராய உற்பத்தியாளர்கள் அரசாங்கத்திடமிருந்து வருடாந்த உரிமங்களைப் பெற வேண்டும்.
மேலும் மொத்த விற்பனையாளர்கள் தங்கள் அனைத்து தயாரிப்புகளையும் அரசாங்கத்திற்கே விற்க வேண்டும்.
பின்னர் அரசு அவற்றை பலத்த பாதுகாப்புடன் சேமித்து விற்பனை நிலையங்களுக்கு கொண்டு செல்லும்.
சாராயம் கடத்தப்படுவதைத் தடுக்க நகரின் மையப் பகுதியில் பாதுகாப்புப் படையினரும் நிறுத்தப்பட்டனர்.
ஒவ்வொரு பகுதியிலும் உள்ள அரச முகவர்கள் தங்கள் பகுதிக்கு தேவையான சாராய தொகையை எடுத்து உள்ளூர் விற்பனை உரிமையாளர்களுக்கு விநியோகித்தனர்.
புரவலர்கள் காவல்துறை மற்றும் நீதிமன்றங்கள் போன்ற அரசு நிறுவனங்களுடன் நேரடித் தொடர்பைப் பேணி, வர்த்தகத்தை நிர்வகிப்பதற்கும் சட்டவிரோத விற்பனையைத் தடுப்பதற்கும் அரசாங்கத்தின் உதவியை நாடினர்.
இது நாட்டின் அந்நிய ஆட்சியாளர்களுக்கு உட்பட்ட குடிமக்கள் முதலாளித்துவக் குழுவை உருவாக்கியது.
கோட்டைகளில் நிலைகொண்டிருந்த துருப்புக்களுக்கும் மதுபானம் விநியோகிக்கப்பட்டது.
1820 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கண்டிப் பகுதியில் மது விற்பனை நீடிக்கப்பட்டதுடன் கண்டியில் சட்டவிரோதமான வர்த்தகம் நிறுத்தப்பட்டு சட்டப்பூர்வ வர்த்தகம் ஸ்திரமானது.
ஆங்கிலேயர் ஆட்சியின் போது, பாதை அமைக்கும் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் விவசாயிகளிடையே தான் மதுபானம் முதலில் பிரபலமடைந்தது.
அப்போதிருந்து, கோப்பி விவசாயிகளும் மதுபானங்களை அதிகம் வாங்குபவர்களாக மாறிவிட்டனர். பெருந்தோட்டப் பொருளாதாரத்தை நாடு முழுவதும் பரப்பிய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், நாட்டின் பாரம்பரிய சமுதாயத்தின் மீது ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் திறமையான முறையிலான மதுபான வணிகத்தை திணித்தனர். மேலும் இது புதிய வாழ்க்கை முறையின் இன்றியமையாத அங்கமாக மாற்றப்பட்டது.
இலங்கையில் சாராய கடத்தல் தொடர்பிலும் பல்வேறு தகவல்கள் காணப்படுகின்றன. 1820 ஆண்டளவில் கண்டியிலிருந்து பதுளை கச்சேரிக்கு 50 பீப்பாய்கள் ஏற்றப்பட்ட சுமார் 50 மாட்டு வண்டிகள் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
1827ஆம் ஆண்டு 77 கலன் சரக்குகள் காணாமல் போனமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
அப்போது சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் துல்லியமான தகவல்களை வழங்கியவர்களுக்கு குற்றவாளிகளிடமிருந்து அறவிடப்பட்ட அபராதத் தொகையில் பாதி செலுத்தப்பட்டுள்ளது.
தோட்டங்களில் மட்டுமல்ல, கட்டுமானத் தளங்களிலும், சுரங்கத் தொழிலாளர்கள் மத்தியிலும், நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் பாதைகளை கட்டுபவர்களிடையேயும் மது பழக்கமாகி இருந்தது.
கிராமப்புறங்களில் வசிக்கும் விவசாயிகள் கூட கடுமையாக மது அருந்தும் பழக்கத்திற்கு ஆளாயினர். மக்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், அவர்களின் நுகர்வு மேலும் அதிகரித்தது. மெல்ல மெல்ல அதற்கு அடிமையாகினர்.
இதனால், மதுபான சில்லறை விற்பனை பெருமளவில் அதிகரித்துள்ளது. மிகவும் ஏழ்மையான மக்கள் பிரிவினர் மதுவுக்கு அடிமையான போது, அரசாங்கமும் முதலாளித்துவமும் அவர்களைச் சுரண்டியது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM