முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ; அனைத்து இனமக்களும் போரில் உயிரிழந்தோருக்கு மலர்தூவி கடலில் அஞ்சலி

Published By: Digital Desk 3

18 May, 2022 | 03:15 PM
image

(நா.தனுஜா)

போர் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டு 13 வருடங்கள் கடந்துள்ள நிலையில், போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை தமிழ், சிங்கள மக்கள் ஒன்றிணைந்து முதன்முறையாக கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தனர். 

கடந்த காலங்களில் போர்வெற்றிக்கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்ற காலிமுகத்திடலில் இன்று (18) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றதுடன், அதில் பல்லின மக்களும் கலந்துகொண்டு போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மூன்று தசாப்தகாலப்போர் கடந்த 2009 ஆம் ஆண்டு மேமாதம் 18 ஆம் திகதி முடிவிற்குக்கொண்டுவரப்பட்டது. இக்காலப்பகுதியில் தமிழ்மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களுக்கு இன்றுவரை நீதிவழங்கப்படாத நிலையில், மேமாதம் 12 - 18 ஆம் திகதி வரையான ஒருவாரகாலப்பகுதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமாகவும், 18 ஆம் திகதி போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளாகவும் தமிழ்மக்களால் அனுட்டிக்கப்பட்டுவருகின்றது. 

அந்தவகையில் போர் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னரான 13 ஆவது வருட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்று புதன்கிழமை காலை 10.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடைபெற்றது.

அதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தி கொழும்பு காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள 'கோட்டா கோ கம'வில் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் இணைந்து இன்று புதன்கிழமை காலை 9.30 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். 

கடந்த காலங்களில் சில அரசாங்கங்களால் போர்வெற்றி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அதே காலிமுகத்திடலில் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையிலான நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமையானது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள அதேவேளை, இன ஐக்கியம் தொடர்பில் நேர்மறையான கருத்துக்களும் வெளியிடப்பட்டு வருகின்றன.

அதன்படி காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் காலை 10.00 மணியளவில் மதகுருமார்களால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன், போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

அதுமாத்திரமன்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொதுமக்களுக்குப் பகிரப்படுகின்ற முள்ளிவாய்க்கால் கஞ்சியும் காலிமுகத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவேந்தலில் கலந்துகொண்டிருந்தவர்களுக்கு சிரட்டைகளில் பகிரப்பட்டது. 

அத்தோடுஇந்த நினைவேந்தல் நிகழ்வில் பௌத்த தேரர்கள், கிறிஸ்தவ பாதிரிமார் உள்ளடங்கலாக அனைத்து மதங்களையும் சேர்நத மதகுருமாரும், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும், சட்டத்தரணிகள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட  பல்தொழிற்துறைசார்தோரும், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

அங்கு உரையாற்றிய கிறிஸ்தவ பாதிரியொருவரால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் வருமாறு:

'வலிந்து காணாமலாக்கப்படல்கள் மற்றும் படுகொலைகள் காரணமாக தமிழ்மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டார்கள். வர்க்கப்பிரிவுகள் மற்றும் இனவாதம் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு குறித்தவொரு இனத்தின்மீது கட்டவிழ்த்துவிடப்படும் அரச பயங்கரவாதத்தை உடனடியாக முடிவிற்குக்கொண்டுவருமாறு வலியுறுத்துவதற்காகவே நாம் இங்கு ஒன்றுகூறியிருக்கின்றோம். இம்மாதம் 9 ஆம் திகதி காலிமுகத்திடலில் ஒன்றிணைந்திருந்தவர்கள்மீது பொலிஸாரின் முன்னிலையில் தாக்குதல் நடத்தியபோது எமக்கு மரணபயம் ஏற்பட்டது. 

எனவே சுமார் 30 வருடகாலமாக இடம்பெற்ற போரின்போது சாதாரண தமிழ்மக்கள் எத்தகைய பயத்தை அனுபவித்திருப்பார்கள் என்பது பற்றி அன்று சிந்தித்தேன். எனவே மீண்டும் அத்தகைய மிலேச்சத்தனமான வன்முறைத்தாக்குதல்கள் இடம்பெறக்கூடாது என்பதே இங்குள்ள அனைவரினதும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.'

அதேவேளை இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட சிங்கள, தமிழ் மக்கள், இதனை இன ஐக்கியத்திற்கான முதற்படியாகப் பார்ப்பதாகவும் நீண்டகாலமாகத் தமிழ்மக்களின் மனங்களில் ரணமாக இருக்கின்ற போர்க்குற்றங்களுக்கு உரியவாறான தீர்வைப்பெற்றுக்கொடுப்பதில் சர்வதேச சமூகத்தின் அர்த்தமுள்ள தலையீடு அவசியம் என்றும் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47