(என்.வீ.ஏ.)

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 5,000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த முதலாவது பங்களாதேஷ் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை முஷ்பிக்குர் ரஹீம் படைத்துள்ளார்.

சட்டோக்ராம் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது இந்த சாதனையை முஷ்பிக்குர் ரஹிம் இன்று புதன்கிழமை (18) படைத்தார்.

5,000 டெஸ்ட் ஓட்டங்களைப் பூர்த்தி செய்யப்போகும் முதலாவது பங்களாதேஷ் வீரர் யார் என்ற போட்டி தமிம் இக்பாலுக்கும் முஷ்பிக்குர் ரஹிமுக்கும் இடையில் நிலவியது.

துரதிர்ஷ்டவசமாக தமிம் இக்பால் உபாதைக்குள்ளாகி தற்காலிக ஓய்வு பெற்றதால் அந்த சாதனை முஷ்பிக்குர் ரஹிமுக்கு சொந்தமானது. தனது 81 டெஸ்ட் போட்டியில் ரஹிம்   அந்த சாதனையை   நிகழ்த்தினார்.

இலங்கைக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியில் 62ஆவது ஓட்டத்தைப் பெற்றபோது முஷ்பிக்குர் ரஹிம் 5,000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்தார்.

முஷ்பிக்குர் ரஹிம் 1,000 ஓட்டங்களை 20 டெஸ்ட்களில் பூர்த்தி செய்திருந்தார். 5,000 ஓட்டங்கள் வரையான அடுத்தடுத்த 1,000 ஓட்டங்களை முறையே 15, 17, 14, 15 டெஸ்ட்களில் நிறைவு செய்தார்.

போட்டியின் மூன்றாம் நாளான நேற்றைய தினம் 133 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது முதுகுப்புறத்திலும் மணிக்கட்டிலும் ஏற்பட்ட தசை இழுப்பு காரணமாக தமிம் இக்பால் ஓய்வு பெற்றார். 

66ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் தமிம் இக்பால் இதுவரை 4,981 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ளார்.