மே 9 வன்முறைகள் - டான் பிரியசாத் கைது 

By T Yuwaraj

18 May, 2022 | 01:16 PM
image

கொழும்பு காலி முகத்திடல் பகுதியிலும், அலரிமாளிகைக்கு அருகாமையிலும், கடந்த மே மாதம் 09 ஆம் திகதி  அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளரான டான் பிரியசாத் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் டான் பிரியசாத் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் சந்தித்ததைத் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களிடையே அவர் காணப்பட்டதையடுத்தே அவர் கைது செய்யப்பட்டள்ளார்.

இதேவேளை, தாக்குதல்கள் தொடர்பாக டான் பிரியசாத்துடன் மொரட்டுவ மேயர் சமன் லால் பெர்னாண்டோ, சீதாவகபுர பிரதேச சபையின் தலைவர் ஜயந்த ரோஹன மற்றும் களனி பிரதேச சபை உறுப்பினர் மஞ்சுள பிரசன்ன ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, மிலன் ஜயதிலக்க, டான் பிரியசாத் உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களை  கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்ததை அடுத்து, போதிய சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டதை அடுத்து இந்தக் கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க ஆகியோர் நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் பதிவு செய்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் 10 மணித்தியாலங்களுக்கு மேலாக தாக்குதல்கள் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right