யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் (17) செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற இருவேறு விபத்து சம்பவங்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். 

திருநெல்வேலி , இராமலிங்கம் வீதியில் பூங்கனிச்சோலைக்கு அருகில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு , இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். 

கோப்பாய் பூதர் மடத்தடியை சேர்ந்த மகேந்திரன் மகிந்தன் (வயது 25) , கச்சேரி கிழக்கை சேர்ந்த றொபின்சன் சார்ள்ஸ் (வயது 23) மற்றும் சபாபதிப்பிள்ளை வீதி , சுன்னாகத்தை சேர்ந்த யோகநாதன் மேர்வின் டேனுஜன் (வயது 17) ஆகிய மூவரே உயிரிழந்துள்ளனர்.

ஒரு மோட்டார் சைக்கிளில் இருவரும் மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் மூவரும் பயணித்த வேளை பூங்கனிச்சோலைக்கு அருகில் இரு மோட்டார் சைக்கிளிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில் , இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.

மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில் ஏனைய இருவரும் தொடர்ந்தும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

உரும்பிராயிலும் விபத்து - ஒருவர் உயிரிழப்பு 

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உரும்பிராய் பகுதியில் (17) செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கோப்பாய் தெற்கை சேர்ந்த துரைராசா மயூரன் (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை , மோட்டார் சைக்கிளில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதி அருகே இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

இரு விபத்து சம்பவங்கள் தொடர்பிலும் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.