“காதல் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்” என்று நடிகை ஹன்சிகா கூறியுள்ளார். 

நடிகை ஹன்சிகா, நிருபருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

“இந்த வருடம் தீபாவளியை நான் தத்து எடுத்த 31 குழந்தைகளுடன் கொண்டாட முடிவு செய்து இருக்கிறேன். இதற்காக மும்பையில் ஒரு மண்டபத்தை வாடகைக்கு எடுத்து இருக்கிறேன். குழந்தைகளை அழைத்துக் கொண்டு கடை வீதிக்கு செல்வது, அவர்களோடு அமர்ந்து சாப்பிடுவது, விளையாடுவது என ஒரு நாள் முழுவதையும் அவர்களுடனே செலவிட இருக்கிறேன். குழந்தைகள் முகத்தில் சந்தோஷத்தை பார்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு. ஒவ்வொரு பண்டிகையையும் அவர்களுடன் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறேன்.”

இவ்வாறு ஹன்சிகா கூறினார்.

அவரிடம் நிருபர் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு ஹன்சிகா அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- உங்களை போன்ற சக கதாநாயகிகள் சிலருக்கு திருமணம் முடிவாகி இருக்கிறது. உங்களுக்கு எப்போது திருமணம்?

பதில்:- நான் ரொம்ப சின்னப்பெண். திருமணம் செய்து கொள்கிற வயதை எட்டவில்லை. அதனால் திருமணத்தை பற்றி யோசிக்கவே இல்லை. இன்னும் 5 வருடங்கள் கழித்துதான் என் திருமணம் நடக்கும்.

கேள்வி:- காதலித்து திருமணம் செய்து கொள்வீர்களா அல்லது அம்மா பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்வீர்களா?

பதில்:- காதல் ஒரு அழகான உணர்வு. அது எல்லோருக்கும் வரவேண்டும். எனக்கும் வந்து போய் இருக்கிறது. ஆனால், என் திருமணம் காதல் திருமணமாக இருக்காது. எங்க அம்மா பார்க்கும் பையனை மணந்து கொள்வேன்.

கேள்வி:- உங்களை கனவுக்கன்னி என்று இரசிகர்கள் அழைக்கிறார்கள். உடன் நடிக்கும் கதாநாயகர்கள் எப்படி அழைக்கிறார்கள்?

பதில்:- சிவகார்த்திகேயன் மட்டும் என்னை, “ஜீ” என்று அழைப்பார். சில கதாநாயகர்கள், “ரொம்ப பெரிய ஆளாகிட்டே... எங்களை எல்லாம் மறந்து விடாதே” என்று என்னை கிண்டல் செய்கிறார்கள்.

கேள்வி:- உங்களை எந்த கதாநாயகனாவது, “சகோதரி” என்று அழைத்து இருக்கிறாரா?

பதில்:- அப்படி யாரும் அழைத்ததில்லை. கதாநாயகனும், கதாநாயகியும் சகோதரர்-சகோதரியாக பழகினால், காதல் காட்சிகள் சிறப்பாக அமையாது.

கேள்வி:- எந்த கதாநாயகனின் மனைவியாவது உங்களுடன் நட்பு வைத்து இருக்கிறாரா?

பதில்:- ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி எனக்கு நல்ல சினேகிதி. அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். நாங்கள் இருவரும் நல்ல நட்புடன் பழகி வருகிறோம்.

கேள்வி:- நிறைய தமிழ் படங்களில் நடிக்கிறீர்கள். இன்னும் நீங்கள் தமிழில் பேசுவதில்லையே?

பதில்:- தமிழை ஓரளவு கற்றுக் கொண்டேன். உச்சரிப்பு தப்பாக இருந்து விட்டால், அர்த்தம் மாறிவிடுமே என்று பயமாக இருக்கிறது. இந்த பயம் காரணமாகத்தான் தமிழில் பேசுவதில்லை.”

இவ்வாறு ஹன்சிகா கூறினார்.