முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல் : பேதங்களை கடந்து தமிழர்களாக ஒன்றிணையுமாறு அழைப்பு

By T Yuwaraj

17 May, 2022 | 09:44 PM
image

(நா.தனுஜா)

இப்போதுவரை நீதி வழங்கப்படாத தமிழினப்படுகொலையின் 13 ஆம் ஆண்டிற்கான நினைவேந்தல் மே 18 ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடைபெறும் என்றும், அனைவரும் வேற்றுமைகளைத்துறந்து, சுயவிளம்பரப்படுத்தல்களைக் கடந்து ஒரு பொது நிகழ்ச்சிநிரலில் தமிழர்கள் என்ற ரீதியில் இதில் கலந்துகொள்ளவேண்டும் என்றும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை அனுஷ்டிப்பதில் முரண்பாடு

நாட்டில் சுமார் மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்றுவந்த யுத்தம் கடந்த 2009 ஆம் ஆண்டில் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டதன்  பின்னர், மே மாதம் 11 முதல் 18 ஆம் திகதி வரையான ஒரு வாரகாலப்பகுதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமாகவும், 18 ஆம் திகதி போரில் உயிரிழந்தவர்களை நினைவுக் கூருவதற்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளாகவும் தமிழ்மக்களால் அனுட்டிக்கப்பட்டுவருகின்றது.

 அந்தவகையில் இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கை அரசாங்கம் கடந்த 2009 ஆம் ஆண்டு இதே தினங்களில் ஈழத்தமிழர்களை மிகமோசமான முறையில் அழித்து, இனவழிப்பை மேற்கொண்டது. இன விடுதலைக்காகப் போரிட்ட தமிழினத்தை இலங்கையின் அரச பயங்கரவாதம் சர்வதேச சமூகத்தினால் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களையும், போர்முறைமைகளையும் பயன்படுத்திக் கொன்றொழித்ததை உலகின் வல்லாதிக்க நாடுகள் வெறுமனே வேடிக்கை பார்த்ததுடன், மறைமுகமான ஆதரவையும் வழங்கின.

பாதுகாப்பு வலயங்கள் என்று அரசாங்கத்தினால் பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தஞ்சமடைந்த அப்பாவி மக்களையும், காயமடைந்து வைத்தியாசாலைகளில் அனுமதிக்கப்பட்ட மக்களையும் இராணுவம் குண்டுகளைவீசிக் கொன்றொழித்தது. அப்போது ஐக்கிய நாடுகள் சபையும் ஏனைய தொண்டு நிறுவனங்களும் இலங்கையில் தமது பிரசன்னத்தை நிறுத்திக்கொண்டன.

போதிய உணவுப்பொருட்களையும், காயமடைந்தவர்களுக்கான மருந்துப்பொருட்களையும் அனுப்பிவைக்காமல் இலங்கை அரசாங்கத்தினால் மிகக்குரூரமான முறையில் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பை சர்வதேசம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் இன்றுவரை நீதி வழங்கப்படாத இனப்படுகொலையின் 13 ஆம் ஆண்டிற்கான நினைவேந்தல் 18 ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடைபெறும்.

எனவே அனைவரும் வேற்றுமைகளைத்துறந்து, சுயவிளம்பரப்படுத்தல்களைக் கடந்து எமது பொது நிகழ்ச்சிநிரலில் தமிழர்கள் என்ற ரீதியில் இந்த நினைவேந்தலில் ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அத்துடன் நாளை மாலை 6 மணிக்கு அனைத்து ஆலயங்களிலும் மணி ஒலி எழுப்புவதுடன், இயலுமானவரை முள்ளிவாய்க்கால் கஞ்சியையும் பரிமாறி தமிழின அழிப்பினை நினைவுகூருவோம் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் மற்றும் வட, கிழக்கு மாகாணங்களைத் தளமாகக்கொண்டியங்கும் சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து அவ்விரு மாகாணங்களிலும் இருந்து ஆரம்பித்த மக்கள் பேரணி இன்றையதினம் முள்ளிவாய்க்காலை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்