(நெவில் அன்தனி)

சிங்கப்பூரில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள 13ஆவது ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டியை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்டுள்ள இலங்கை வலைபந்தாட்ட குழாத்தில் தர்ஜினி சிவலிங்கம் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

ஆசியாவின் அதி உயரமான வலைபந்தாட்ட வீராங்கனையும் ஒரு சுற்றுப் போட்டியில் அதிக கோல்கள் போட்ட சாதனையாளருமான தர்ஜினி சிவலிங்கம், இங்கிலாந்தில் 2019 இல் நடைபெற்ற உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியிலேயே கடைசியாக இலங்கைக்காக விளையாடியிருந்தார்.

தென் கொரியாவில் 2020 ஆம் ஆண்டில் நடைபெறவிருந்து 12 ஆவது ஆசிய கிண்ண வலைபந்தாட்ட வல்லவர் போட்டி கொரோனா தொற்று காரணமாக இரத்துச் செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையில் 3 வருடங்கள் கழித்து தர்ஜினி சிவலிங்கம் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

அனுபவம் வாய்ந்த வீராங்கனையும் முன்னாள் அணித் தலைவியுமான செமினி அல்விஸும் குழாத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் 2015 இல் நடைபெற்ற உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் விளையாடிய பின்னர் தேசிய குழாத்தில் செமினி அல்விஸ் இடம்பெறுவது இதுவே முதல் தடவையாகும்.

அத்துடன் 7 வீராங்கனைகள் முதல் தடவையாக இலங்கை வலைபந்தாட்டக் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.

மரிஷா பெர்னாண்டோ, தீப்பிகா தர்ஷனி, சுரேக்கா கமகே ஆகியோரும் குழாத்தில் இடம்பெறுகின்றபோதிலும் அவர்கள் மூவரினதும் உடற்தகுதியின் அடிப்படையிலேயே இறுதி அணியில் இடம்பெறுவது தீர்மானிக்கப்படும்.

இலங்கை வலைபந்தாட்டக் குழாம்

சத்துராங்கனி ஜயசூரிய, செமினி அல்விஸ், துலாஞ்சலி வன்னிதிலக்க, திசலா அல்கம, ஹசித்தா மெண்டிஸ், லக்மாலி பண்டார, கயாஞ்சலி அமரவன்ச, இதுஷா ஜனனி, சுசிமா பண்டார, திலினி வத்தேகெதர, ரஷ்மி திவ்யாஞ்சலி, அகிலா சஞ்சி, மல்மி ஹெட்டிஆராச்சி, ஹாஷினி டி சில்வா, தர்ஜினி சிவலிங்கம், உடற்தகுதி அடிப்படையில் - மரிஷா பெர்னாண்டோ, தீப்பிகா தர்ஷனி, சுரேக்கா கமகே.