கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிராக தொழில் திணைக்களத்தில் முறைப்பாடு செய்வதற்கு மலையகம்சார் சிவில் அமைப்புகள் இன்று தீர்மானித்துள்ளன.

அத்துடன், இது சம்பந்தமாக ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு மேற்படி அமைப்பு கடிதங்களையும் அனுப்பவுள்ளன.

கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக தமது உரிமை மீறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி மலையக சமூக ஆய்வு மையத்துக்கு தோட்டத்தொழிலாளர்கள் கடிதம் எழுதியிருந்தனர்.

இந்நிலையில், இவ்விடயம் தொடர்பாக மலையக சமூக ஆய்வு மையம், மலையக உரிமைக் குரல், மலையக இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் ஆகியன இன்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுக்கு சென்று கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தது.

இதையடுத்தே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட மலையக சமூக ஆய்வு மையத்தின் தலைவர் அருட்தந்தை மா. சத்திவேல்,

 

நீண்ட இழுபறிக்கு மத்தியில் தொழிற்சங்கங்களும், முதலாளிமார் சம்மேளனமும் இணைந்து கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. 

ஆனால், ஒப்பந்தத்துக்குள் உள்ள உள்ளடக்கங்கள் எவை என்று தெரியவில்லை. 

தொழிலாளர்களுக்கு இது பற்றி தெரியப்படுத்தாமல் மூடி மறைக்கபடுவதன் மர்மன் என்ன?

தமது அங்கத்தவர்கள் சார்பில் தொழிற்சங்கங்கள் கையொப்பமிடுகின்றபோது அவை தொடர்பில் அங்கத்தவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். 

அந்த நடைமுறை இங்கு பின்பற்றப்படுவதில்லை. தகவல் அறியும் உரிமையும் மீறப்பட்டுள்ளதுடன், பல வழிகளிலும் தொழிலாளர்களின் உரிமை மீறப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான் இது பற்றி கலந்துரையாடுவதற்காக மனித உரிமை ஆணைக்குழுவுக்கு வந்திருந்தோம். 

இதன்படி விரைவில் தொழில் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்படும். 

அத்துடன், நிலைமையை தெளிவுப்படுத்தி ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு கடிதங்கள் அனுப்படும் என்றார்.