(எம்.மனோசித்ரா)

சட்டவிரோதமாக உண்டியல் முறைமையில் பணப்பரிமாற்றத்தினை முன்னெடுப்பதற்காக வெளிநாட்டு பணத்தை தன்வசம் வைத்திருந்த சந்தேகநபரொருவர் பெபிலியான பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது , 50 000 யூரோக்களுடன் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு - பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய குறித்த சந்தேகநபர் பணசுத்திகரிப்பு குற்றச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படை தெரிவித்தது.

குறித்த வெளிநாட்டு பணத்தொகையின் பெறுமதி 18.69 மில்லியன் ரூபாவாகும். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கிருலப்பனை சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப்பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு பண தட்டுப்பாடு காரணமாக நாட்டில் உண்டியல் முறைமையிலான சட்ட விரோத பணப்பரிமாற்றல் அதிகரித்துள்ளதாக கிடைக்கப் பெற்றுள்ள தகவல்கள் தொடர்பில் விசேட அதிரடிப்படையினரால் நாடளாவிய ரீதியில் சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.