(நெவில் அன்தனி)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் யாப்பு விதிகளை திருத்தி அமைப்பதற்காக சம்மேளனத்தினால் நாளை நடத்த திட்டமிடப்பட்டிருந்த விசேட பொதுக் கூட்டத்துக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரச சேவைகள் கால்பந்தாட்ட சங்கமும் கம்பளை கால்ந்தாட்ட லீக்கும் இடைக்கால தடையுத்தரவு கோரி தாக்கல் செய்த மனுக்களை பரிசீலித்த மாவட்ட நீதவான் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கடந்த வருடம் அக்டோபர் மாதத்திலிருந்து இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நிருவாக சபையினால்  எடுக்கப்படும் தீர்மானங்களின் போது தாங்கள் ஓரங்கட்டப்பட்டு வந்துள்ளதாகவும் சம்மேளனத்தின் பேரவைக் கூட்டங்களுக்கு தாங்கள் அழைக்கப்படுவதில்லை எனவும் மனுதாரர்கள் தங்களது மனுக்களில் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் எவ்வித விசாரணைகளும் இல்லாமல் வெறும் வாய்மொழிமூலம் தங்களது சங்கம் மற்றும் லீக்கை இடைநீக்கம் செய்துள்ளமை சட்ட விரோதமானது எனவும் மனுதாரர்கள் தங்களது மனுக்களில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவருடன் (ஜஸ்வர் உமர்) பல தடவைகள் தான் கலந்துரையாடியதாக களுத்துறை கால்பந்தாட்ட லீக் தலைவர் டொக்டர் மணில் பெர்னாண்டோ தெரிவித்தார்.

'இந்த விடயங்களுக்கு தீர்வு காணுமாறும் சுயாதீனமாக இயங்கும் லீக்குகளின் விடயங்களில் தலையிடுவதை நிறுத்துமாறும் சம்மேளனத் தலைவரிடம் நான் கோரினேன். இந்த விடயங்ளுக்கு தீர்வு காணத் தவறியமமையும் அதில் தாமதம்  தாமதித்தமையும்  அந்த லீக்குகள் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு காரணமாக அமைந்திருக்கலாம்' என டொக்டர் மணில் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நிருவாகத்தில் தலைவர் தன்னிச்சையாக செயற்படும் விதம் குறித்து டொக்டர் மணில் பெர்னாண்டோ பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டி வந்துள்ளார்.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள திருத்தப்பட்ட உத்தேச யாப்பு விதிகள், பீபாவின் விதிகளுக்கு உட்பட்டதா என்ற கேள்வியை எழுப்புவதாகவும் சம்மேளன பிரதிநிதிகள் சிலர் குறிப்பிட்டனர்.

விளையாட்டுத்துறை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இலங்கை காலப்ந்தாட்ட சம்மேளனத்தின் நிருவாக சபை உத்தியோகத்தர்களுக்கான தேர்தல் 2022 மே 31ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படாவிட்டால் சிக்கல் உருவாகலாம் என விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது இவ்வாறிருக்க, தனது பதவிக்காலத்தை நீடித்துக்கொவதற்கு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தின்போது தனக்கு 53 லிக்குகளின் ஆதரவு கிடைத்துள்ளதாக அங்கு நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது ஜஸ்வர் உமர் தெரிவத்திருந்தார்.

ஆனால், தற்போதைய நிருவாக உத்தியோகத்தர்களின் பதவிக் காலம் ஒரு வருடத்துக்கு மாத்திரமே செல்லுபடியாகும் என விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய மீண்டும் மீண்டும் கூறிவருகிறார்.

குருநாகலில் மே மாதம் 7ஆம் திகதி நடைபெற்ற சம்மேளனத்தின் பேரவைக் கூட்டத்தில் உறுப்பினர்களின் சம்மதத்தைப் பெறுவதற்கு திருத்தப்பட்ட உத்தேச யாப்பு விதிகள் சமர்ப்பிக்கப்பட்டு விரிவாக ஆராயப்பட்டது.

ஆனால், திருத்தப்பட்ட உத்தேச யாப்பு விதிகளில் பல குறைபாடுகள் இருப்பதாகவும் அவை திருத்தப்படவேண்டும் எனவும் டொக்டர் மணில் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியபோது உறுப்பினர்களில் பலர் அதற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

'சகல பங்குதாரர்களினது நலன்களையும் குறிப்பாக லீக்குகளின் பாதுகாப்பையும் உறுதிசெய்யும்வகையில் யாப்பு விதிகளைத் திருத்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளேன். எனவே இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் யாப்பு விதிகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளவாறு திருத்தப்பட்ட உத்தேச யாப்பு விதிகளை ஆராய்வதற்கு போதிய கால அவகாசம் வழங்கப்படவேண்டும்' என டொக்டர் மணில் பெர்னாண்டோ தெரிவித்தார்.

மேலும், சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு லீக்குக்கும் ஒரு வாக்கு முறைமையும் பிபா, ஏஎவ்சி உட்பட ஏனைய உறுப்பு சங்கங்களுடன் அதிகபட்சம் 3 உறுப்பினர்கள் மாத்திரம் இணைந்து செயற்படும் முறைமையும் கொண்டுவரப்படவேண்டும் என டொக்டர் மணில் பெர்னாண்டோ தனது திருத்தங்களில் குறிப்பிட்டுள்ளார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்கும் லீக்குகளின் ஒருமைப்பாட்டைப் பேணுவதற்கும் அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.