நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நாம் எவ்வித அமைச்சுப் பொறுப்புக்களையும் ஏற்காது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவை வழங்கவுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை நிவர்த்திப்பதற்கான விசேட கலந்துரையாடலொன்று இன்று (16) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக செயற்படும் 10 கட்சிகளின் பிரதிநிதிகளும் பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் மற்றுமொரு தரப்பினரும் இதில் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதிய அமைச்சரவையில் அமைச்சுப்பொறுப்புக்களை ஏற்காமல் நாட்டில் நிலவும் நெருக்கடி நிலைகளை நிவர்த்தி செய்ய பிரதமரால் அமைக்கப்படும் 15 குழுக்களில் அங்கம் வகிக்கும் குழுக்களில் தாம் அங்கம் வகிப்பது குறித்து சிந்திப்பதாகவும் கம்மன்பில தெரிவித்தார்.

அத்துடன் புதிய வரவு - செலவுத் திட்டமொன்றை குறுகிய காலத்திற்கு கொண்டு வந்து டிசம்பர் வரையில் நாட்டில் இருக்கக்கூடிய பொருளாதார விடயங்களை நிர்வகிப்பது தொடர்பில் பிரதமர் இதன்போது தெரிவித்ததாகவும் கம்மன்பில குறிப்பிட்டார்.

இதேவேளை, 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை உருவாக்குவது தொடர்பிலும் இன்றைய கலந்துரையாடலில் பேசப்பட்டதாகவும் கம்மன்பில தெரிவித்தார்.

இந்நிலையில், எரிபொருள் நெருக்கடி, சமையல் எரிவாயு நெருக்கடி மற்றும் உரப் பிரச்சினை குறித்து இன்று பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில்  கலந்துரையாடப்பட்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது.